இறந்தவர்கள் குறித்த புள்ளிவிபரம் – மாவீரர் நாள் – ராஜீவ் கொலைவழக்கில் என்ன நடக்கிறது?

0
638

camaranஇன அழிப்பு அரசு அனைத்துலக விசாரணை பொறிமுறையிலிருந்து தப்புவதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக 1982 – 2009 வரையிலான காணாமல் போனவர்கள் – இறந்தவர்கள் குறித்த ஒரு புள்ளிவிபரத்தை எடுக்க இருக்கிறது.

இது ஒரு மோசடி. இதை நாம் வரவேற்கக் கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பாக நமது இழப்பை பதிவு செய்யலாமே ஒழிய இதை ஒரு பொறிமுறையாகவோ,நம்கத்தன்மை வாய்ந்ததாகவோ கருதக்கூடாது.

வன்னி இறுதி இன அழிப்பில் 30000 மக்களே உள்ளனர் என்று அறிவித்த பிற்பாடு 275000 மக்கள் சிறைப்பிடிக்கப்பட்ட கதை நமக்கு தெரியும். 450000 வன்னி மக்களில் 275000 மக்கள் போக மீதிப் பேர் எங்கே? இன்று இன்றுவரை பதில் சொல்லாத சிங்களத்தின் “நீதியை” நாம் அறிவோம்.

முழுமையாக குடும்பமாக காணாமல்போன – முழுக் குடும்பமும் கொல்லப்பட்ட மக்கள் சார்பாக யார் கணக்கு எழுதிக்கொடுப்பது? மக்களை இடம் மாற்றிப்போட்டு புள்ளிவிபரங்களை சிதறடித்து வைத்திருக்கும் சூழ்ச்சியும் நாம் அறியாததல்ல.

எனவே இதை நாம் நிராகரிக்க வேண்டும். இதை தாயகத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக கூட்டமைப்புத்தான் அதை செய்ய வேண்டும். கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும், புலத்திலிருந்தும் நாம் கத்தலாமே ஒழிய செய்யவேண்டிய கடப்பாடும் உரிமையும் கூட்டமைப்புக்குத்தான் இருக்கிறது.

ஆனால் கூட்டமைப்பு அதைச் செய்யப்போவதில்லை, வழமைபோல இதற்கும் இணங்கிப் போகப்போகிறது என்று நாம் நம்பிக்கொண்டிருக்க சரியான தர்க்க நியாயங்களுடன் கூட்டமைப்பு மேற்படி பொறிமுறையை நிராகரித்திருக்கிறது. எமக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும் செய்தி அது.

கூட்டமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாம் சரியான திசையில் பயணிக்கும்போது பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம். கூட்டமைப்பு இத்தகைய மக்கள்சார் அரசியலை செய்யும்போது நாம் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்படப்போவதுமில்லை.

எனவே கூட்டமைப்பு இந்த பாதையில் பயணித்தால் சிங்களத்தை ஒரு அனைத்துலக விசாரணை பொறிமுறைக்குள் இலகுவாக கொண்டு வந்து விடலாம்.

000000000000000

2009 மே இற்கு பிறகு இந்த தடவைதான் மாவீரர் நாள் புலிகளின் ஆட்சிக்காலத்தில் இருந்தது போன்று மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.

களம், புலம், தமிழகம் என்று 3 தளங்களிலும் சீரான எழுச்சியை காண முடிகிறது. அத்தோடு 3 தளங்களிலும் மிக முக்கியமான வரலாற்று செய்திகளும் எழுதப்பட்டுள்ளன.
hero-piu
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் காவல்துறை தலையிட்டபோதும் பெரும்பாலான இடங்களில் எந்த தலையீடுமின்றி சுதந்திரமாக பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. வரலாற்றில் இந்த தடவைதான் அதிகளவு இடங்களில் மிகவும் உணர்வுபூர்வமாக நடந்ததாக சொல்லப்படுகிறது.

புலத்தில் கடந்த 4 வருடங்களாக இருந்த முரண்பாடுகளை களைந்து ஒரு குடையின் கீழ் வந்த பேரதிசயம் நிகழ்ந்திருக்கிறது. முரண்பாடுகள் இருந்தாலும் நோக்கத்தில் ஒன்றுபடவேண்டும் என்ற வரலாற்றுப் பொறுப்புணர்வுக்கு அமைவாக ஒருமித்து நின்று உலகிற்கும் சிங்களத்திற்கும் தமிழர்கள் தெளிவான செய்தியை கூறிய நாளாகவே நேற்றைய நாள் பார்க்கப்படுகிறது.

தாயகத்தின் எழுச்சியைத்தான் இன்னும் நம்மில் பலராலேயே நம்ப முடியவில்லை. ஒரு புரட்சிக்கான ஒத்திகையா? என்று பலர் திகைத்து நிற்கிறார்கள். ஏற்றவே முடியாது என்ற தீபத்தை யாழ் பல்கலை மாணவர்கள் ஏற்றியதிலிருந்து தென்தமிழீழத்தில் துணிச்சலாக சுவராட்டி ஒட்டியதுவரை நடந்த நிகழ்வுகள் ஆச்சர்யம் தருகின்றன.

வீடுகள் ஒளிர்ந்தன, ஆலயமணிகள் ஒலித்தன, மாவீரர் துயிலுமில்லங்களில் கூட சுடர் ஏற்றப்பட்டது. முதல் தடவையாக மக்கள் இணைந்து விளக்கேற்றியிருக்கிறார்கள், எந்த வித அச்சமுமின்றி ஊடகங்களுக்கு படங்களும் அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. நாம்தான் அதை சுயதணிக்கை செய்ய வேண்டியிருக்கிறது.

சிங்களம் மாவீரர் நாள் கொண்டாடியதற்கு கைது செய்ய வேண்டும் என்றால் அனேகமாக அனைத்து தமிழர்களையும் உள்ளே தள்ள வேண்டிய நிலை. அதனால் சிங்களம் தற்போது விழி பிதுங்கிபோய் நிற்கிறது.

மக்கள் தொடர் அடக்கு முறைகளின் விளைவாக போராட தயாராகும் மனநிலைக்கு வந்ததன் சாட்சிதான் இது. தமிழகமும் புலமும் கூட நேற்றைய நாளில் தெளிவான சமிக்ஞையை காட்டியிருக்கிறது.

இந்த 3 தளங்களையும் ஒன்றிணைத்து எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடிய ஒரு தெளிவான தலைமைதான் நமது உடனடி தேவையாக இருக்கிறது. அந்த ஆச்சர்யமும் நிகழ்ந்து விட்டால் விடுதலை வெகு தொலைவில் இல்லை.

000000000000

ராஜீவ் கொலைவழக்கில் மிக முக்கியமான திருப்பமாக தியாகராஜனின் பதிவு இருக்கிறது. மாவீரர் வார நிகழ்வுகளினால் ஈழத்தரப்பிலிருந்து இது குறித்து எந்த கருத்துக்களும் வரவில்லை. இனி ஏதாவது முன்வைக்கப்படும் என்று நம்புகிறேன்.

இக்கொலை வழக்கில் ஏற்கனேவே சிறையிருந்வர்களும் சரி தற்போது தூக்கு மேடையில் நிற்பவர்களும் சரி நிரபராதிகள் என்பதைவிட அந்த கொலையோடு இம்மியளவும் தொடர்பற்றவர்கள் என்பதுதான் சரியானது.

கொலையின் சூத்திரதாரிகளை மறைக்கவும் யாரையாவது பிடித்து தண்டித்துவிட வேண்டும் என்ற இயலாமையின் வெளிப்பாடகவுமே இந்த அநியாயம் நடந்தது.

உண்மையில் நேரடி கொலையாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் இறந்து விட்டனர். அவர்களில் சிலர் புலிகள் உறுப்பினர்கள் என்ற காரணத்தால் புலிகளின் தலைவர், புலனாய்வு பொறுப்பாளர் மற்றும் சர்வதேச தொடர்பாளர் கேபி ஆகியோர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
rajive-hang
அதுவும் முன்னயை இருவரும் இறந்து விட்டதாக சொல்லி (இதை நாம் சொல்லவில்லை, அவர்கள்தான் சொல்கிறார்கள்) அதையும் இந்திய மத்திய அரசே இரத்து செய்துவிட்டது. எஞ்சியிருப்பவர் கேபி.

இந்த கொலைக்கு தண்டனை வழங்குவதென்றால் சிறையிலுள்ளவர்களை விடுவித்து கேபி யை பிடித்து வந்து விசாரிப்பதுதான் சரியானது. முன்பு தலைமறைவாக இருந்தார். தற்போது சிறீலங்காவில்தான் இருக்கிறார். போய் பிடிக்க வேண்டியதுதானே! ஆனால் இங்கு என்ன நடக்கிறது?

உண்மையில் புலிகளுக்கும் இந்த கொலைக்கும் நேரடி தொடர்பு இல்லை. இதற்குள் புலிகள் சிக்கவைக்கப்பட்டதுதான் நடந்தது. அதுவும் கேபியை இடைத்தரகராக கொண்டு சில அன்னிய சக்திகளும் சில இந்திய அரசியல்வாதிகளும் சேர்ந்து நிகழ்த்தியதுதான் இந்த படுகொலை.

எனவே பேரறிவாளன் போன்றவர்களை விடுவிக்க போராடுவது மட்டுமல்ல புலிகள் இந்த கொலையில் ஒரு மூன்றாவது கை என்பதையும்; நிருபிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஏனென்றால் எமது போராட்டத்திற்கான அனைத்துலக அங்கீகாரத்திற்கு புலிகள் மீதான் இந்த களங்கம் அகற்றப்படவேண்டியது இன்றியமையாதது.

பரணி கிருஸ்ணரஜனியின் முகநூலில் இருந்து.