protest-un5இன்று அமெரிக்க தூதரகத்தில் மாணவர்கள் மீண்டும் சென்று மனு ஒன்றை கையளித்தனர் . ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதாக சொல்லி இலங்கைக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை இந்திய அரசின் துணையுடன் அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது . இதில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றியோ போர்குற்றம் பற்றியோ குறிப்பிடாமல் வெறும் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக கூறியுள்ளது அமெரிக்கா . மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் என்றும் குறிப்பிடாமல் , சிறு பான்மை மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மனித உரிமை மீறல் செய்துள்ளது என்ற வகையில் தனது தீர்மானத்தில் தெரிவித்து உள்ளது. இது எந்த வகையிலும் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காது.

இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கைக்கு கால அவகாசம் வேறு கொடுத்துள்ளது . போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை , அதிகாரமும் கிடைக்கவில்லை . தமிழர்களுக்கு நேர்ந்த இந்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நேர்ந்தது இல்லை . இவ்வளவு கொடுமைகள் நடந்த பின்பும் இந்திய அரசும் அமெரிக்க அரசும் இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன . இதனால் தமிழர்களுக்கு அநீதி இழைத்த இலங்கை ஒவ்வொரு ஆண்டும் தான் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கலாமல் தப்பித்து வருகிறது.

protest-unஇதை புரிந்துகொண்ட மாணவர்கள் இன்று அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் ஒரு மனுவை கொடுத்து , அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இனப்படுகொலை, போர்குற்றம் மற்றும் தமிழீழ மக்களிடம் பொது வாக்கெடுப்பு ஆகிய அம்சங்களை சேர்க்க வேண்டும் எனவும் , சர்வதேச விசாரணைப் பொறிமுறையை அமெரிக்க வகுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர் . இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்க அரசு தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை எனில் தமிழகத்தில் அமெரிக்க பொருட்கள் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . இந்தியாவை நம்பி பயனில்லை இனி அமெரிக்காவிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று எண்ணி அமெரிக்க தூதருக்கு கடிதம் கொடுத்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

படங்கள் உதவி : தமிழ் பிரபா