இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் அறிக்கை !

0
562

dublin-triஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்ததாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ரோம் நகரில் செயல்பட்டு வரும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் என்ற அமைப்பு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பான இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிட்டது.

1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சிறீலங்கா படைகள் மேற்கொண்ட 47 படுகொலைகளில் 2231 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இனப் படுகொலைகள் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் வரை தொடர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை இராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் உறுதுணையாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பு 1980 களில் தமிழ் மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் செயற்பட்ட இந்தியா தனது படைகளை அனுப்பியதன் மூலம் 12,000 தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தது. அதன் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து இந்திய சிறீலங்காவின் இனஅழிப்பில் பங்கு கொண்டது.1990களில் அமெரிக்காவின் ஒரு நேசநாடு போல் இந்தியா செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தும், அமெரிக்காவும் இலங்கை இனபடுகொலைக்கு உறுதுணையாக இருந்ததுடன், இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் கூறியுள்ளது.