un-teamஇலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக் குழுவின் தலைவரான கனடாவின் பெர்னார்டு துஹைம் மற்றும் அர்ஜென்டைனா நாட்டின் ஏரியல் துருக்கி, தென்கொரியாவின் தவ்-உவ்-பெய்க் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

 

இலங்கை கிழக்கு மாநிலத்தில் உள்ள திரிகோணமலை மாவட்ட கடற்படை தளத்துக்கு உள்ளே ஒரு சித்திரவதைக் கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்தது என்பது தான் ஐ.நா. குழு கண்டறிந்த உண்மைகளில் மிகவும் முக்கியமானதாகும்.

 

இலங்கைப் போர் முடிந்து ஓராண்டு வரை இந்த சித்திரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஏராளமானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

 

2010க்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன, சுவர்களில் படிந்துள்ள இரத்தக் கறைகள், கை ரேகைகள், ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்,

 

மிகக் குறுகிய காலமே விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதால் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர முடிய வில்லை என்றும் இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்து இருக்கின்றது.

 

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
மேலும்,

 

”நாங்கள் அறிந்த மட்டிலுமே 20,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப் பகுதியில் காணாமல் போயிருக்கின்றனர்” என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இலங்கைத் தீவில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன.

 

இலங்கையில் நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

 

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணை இன்றியும் தண்டிக்கப்படாமலும் இருப்பதால்,எந்த வித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து மனித உரிமை மீரறல்கள் நடந்து வருகின்றன.
ஆகவே,

 

1.இலங்கைச் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அரசு இந்தியா வலியுறுத்த வேண்டும்.

 

2.இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் விசாரணையும், நீதி விசாரணையும் தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும்.அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஐநா மனித உரிமை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

 

3..இலங்கையில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வரும் சித்திரவதைக் கூடங்கள் குறித்து பன்னாட்டு குழுவை அனுப்பி முழு விசாரணை நடத்தவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் இந்தியா அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்

 

3.உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும் அறப் போராட்டங்கள் மூலம் அழுத்தம் தர வேண்டியது முக்கியமான கடமையாகும்.

அதே போல,

 

இங்குள்ள அரசியல் கட்சிகள்,தமிழ்த் தேசிய இயக்கங்கள் அனைத்தும் ஒரே அணியாக திரண்டு நின்று இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால் உறுதியாக நல்ல விளைவுகள் ஏற்படும்.
அதற்கான முன் முயற்சியை எடுக்க வேண்டும்.

 

அடையாள போராட்டங்களை விட்டு விட்டு, உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க அனைவரும் அணியமாக வேண்டும்..குறிப்பாக ஆளுகிற கட்சியை சேர்ந்தவர்களை சந்தித்து சிக்களை எடுத்து சொல்லி அவர்களின் மூலமாக காரியம் சாதிக்க முயல வேண்டும்.