அறிக்கை – இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மகாநாட்டை புறக்கணிக்ககோரி பிரித்தானியா அரசை வலியுறுத்தல்

0
635

BTFlogosதென்னாசியாவுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிநாட்டமைச்சின் செயலக அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸ்ரர் பேட் அவர்களுடன் அண்மையில் பிரித்தானிய தமிழர்கள் நடத்திய சந்திப்பின்போது, எதிர்வரும் நவம்பர் 2013ல் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்வதையிட்டு தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புக்கள் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மகாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது என்ற முடிவினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இலங்கையில் இந்த மகாநாடு நடைபெறுவதானது பொதுநலவாய மற்றும் இவ்வாண்டு மகாராணி அவர்களால் ஒப்பமிடப்பட்ட பொதுநலவாய சாசனத்தில் கூறப்பட்ட அடிப்படை அரசியல் விழுமியங்களுக்கு முரணானது என்றும் அவர்கள் எடுத்துக் கூறினர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை, பொறுப்புக்கூறும் தன்மையின்மை மற்றும் தண்டனைகளற்ற குற்றம்புரி கலாசாரம் ஆகியவை பற்றி எடுத்துக்கூறிய பிரித்தானிய தமிழ் மக்களின் தூதுக்குழு வரலாற்றுரீதியாகவும் சமகால நிகழ்வுகளாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து விளக்கமளித்தனர்.

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும் இற்றைவரை இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதற்கும் பிரித்தானியா தவறியமையை இவர்கள் கண்டனம் செய்ததுடன் இதன் காரணமாகவே இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துஸ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கான நிலைமை உருவாகியிருப்பதாகவும் எடுத்துரைத்தனர்.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கின்ற போதிலும் பிரித்தானியாவின் ‘ஈடுபடுதல் மற்றும் செல்வாக்குசெலுத்துதல்’ என்ற மென்போக்கு அணுகுமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதியினை பெற்றுக்கொடுக்காத நிலையினையும்; இந்த தூதுக்குழு சுட்டிக்காட்டியது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணிக்க வேண்டும் அல்லது பிறிதொரு நாட்டில் இந்த மகாநாட்டை நடத்தவேண்டும் என்ற தூதுக்குழுவின் வலியுறுத்தலுக்கு பதிலளித்த அமைச்சர் இலங்கையில் நடைபெறும் இந்த மகாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தினை எடுத்திருப்பதாகவும் இது பொதுநலவாயத்தின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் கள நிலைமைகளை மகாநாட்டில் கலந்துகொள்பவர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றினை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறினார். இந்த மகாநாடும் அது ஏற்படுத்தி இருக்கின்ற கவனயீர்ப்புமானது இலங்கை மீதும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் அல்லது பின்னடைவு தொடர்பிலும் ஒரு மதிப்பீட்டுப் பார்வையை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்த அமைச்சர் மார்ச்சில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை ஆதரித்தது போன்று பிரித்தானியா இலங்கை தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்துவதில் தெளிவாகவே இருந்து வந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டிலும் அவ்வாறே செயற்படும் என்றும் கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்துக்களுக்குப் பின்னர், பிரித்தானிய தமிழ் மக்களின் தூதுக்குழு தமிழ் மக்களின் சார்பாக பின்வரும் கேள்விகளை எழுப்பி பிரித்தானிய அரசாங்கம் அவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமரின் முடிவு ஐ நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் ஆகஸ்ட் மாத அறிக்கை மற்றும் செப்ரெம்பரில் நடைபெறவிருக்கும் வட மாகாண சபைக்கான தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளைப் புறம் தள்ளி நிபந்தனையற்று அமையுமா?

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டின் பின்னரான பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன?

ஏன் பிரித்தானியா தனது கருத்தாடல்களில் இலங்கை மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை சேர்த்துக்கொள்வதில்லை?

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என்றும் பிறிதொரு நாட்டில் மகாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசாங்கத்தை; தொடர்ந்து வலியுறுத்தும்.

இலங்கையின் போர்க்குற்றம், மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றம் ஆகியவை தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலம் நீதியினை பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து செயற்படும்