30.01.2017 சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் “இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னரும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன. மைத்திரிபாலா சிறிசேனா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கே ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் என்று உலக அரங்கில் ஒரு பொய்யான தோற்றத்தை சிறிசேனா ஏற்படுத்தி வருகிறார்.

 

வருகிற மார்ச் மாதம் வழக்கம் போல ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டம் கூட இருக்கிறது. இந்த நிலையில் சிறிசேனா அரசு அண்மையில் அமெரிக்க நியூயார்க் நகரிலே ஐநா பேரவையில் 60 நாடுகள் கொண்ட கூட்டம் ஒன்றை கூட்டி அந்த கூட்டத்தில் தவறான பல தகவல்களை இலங்கை அரசு சிங்கள அரசு அளித்திருக்கிறது.

 

அதாவது தற்போது இலங்கையில் சிங்கள தேசிய இனத்திற்கும் தமிழ் தேசிய இனத்திற்கும் இடையில் அமைதி நிலவுவதாகவும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் எனவும், மாவீர் தினம் சுதிந்திரமாக கடைபிடிப்பதற்கு அனுமதிக்கபட்டுள்ளது என்றும், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள் பெருமளவில் மீள் ஒப்படைப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும், கடந்த ராஜபக்சே அரசாங்கத்தை விட தன்னுடைய அரசு தமிழ் மக்களுக்கு தமிழர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், பல்வேறு தவறான தகவல்களை சர்வதேச நாடுகளின் முன்னால் சிறிசேனா அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல்கள்.

 

தமிழ் மக்களுக்கு எதிரான தகவல்கள். குறிப்பாக, ராணுவத்தை நிலைகுலைய செய்வதற்காக தமிழர்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள், அவர்கள் விவசாயம் செய்த விலை நிலங்கள் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து ஏறத்தாழ 12500 ஏக்கருக்கு மேலாக நிலங்களை அவர்கள் இராணுவத்திற்காகவே ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஆகவே இதுவரையில் அவர்கள் ஒப்படைத்திருப்பது வெறும் 450 ஏக்கர் அளவுள்ள நிலங்கள் தான்.

 

ஆனால், இதில் பெரும்பகுதி ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று உலகநாடுகளுக்கு முன்னால் அப்பட்டமான பொய்யை சிறிசேன அரசு சொல்லியிருக்கிறது. அதே போல முன்னால் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் அண்டப்புளுகு. ஏறத்தாள 11000 பேருக்கு மேல் முன்னால் போராளிகள் என்ற பெயரால் கைது செய்யப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இதுவரையில் சிறிசேனா அரசு தெரிவிக்கவில்லை. அவர்கள் நிலை என்னவென்பதையும் அறிவிக்கவில்லை. இதனால் அண்மையில் தமிழ் மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நான்கு நாட்கள் வரையில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

 

ஆகவே, இதுவும் அப்பட்டமான ஒரு பொய் தகவல். ஐந்து தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற அடிப்படையில் ஏராளமான ராணுவ சிப்பாய்களை அங்கே நிலைநிறுத்திவிட்டு அமைதி நிலவுகிறது இரண்டு இனங்களுக்கிடையில் என்று சொல்வதும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்து. உலக நாடுகளை ஏமாற்றுகிற ஒரு பேச்சு. ஆகவே, சிறிசேனா அரசு சர்வதேச சமூகத்திற்கு முன்னால் ஈழதமிழர்களின் நிலை குறித்து அறிவிதிருக்கின்ற அனைத்தும் பொய்யானது என்று இங்கு கூடி இருக்கிற பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

 

இந்த நிலையில் சிறிசேனா அரசு இவ்வளவு காரணத்தையும் சொல்லி என்ன கோரிக்கையை வைத்திருகின்றது என்றால் தங்களுடைய நீதி விசாரணையை அதாவது சர்வதேச நாடுகளின் மேற்பார்வையுடன் கூடிய உள்விசாரணையை நடத்துவதற்கு இன்னும் எங்களுக்கு பதினெட்டு மாத காலம் தேவை என்று கோரிக்கை வைத்து இருக்கின்றது.

 

இவையனைத்திற்கும் இந்திய அரசு துணையாக நிற்கின்றது. இந்த 60 நாடுகள் கொண்ட அவையை கூட்டுவதற்கும் சிறிசேனா அரசு இந்த கருத்துகளை முன்மொழிவதற்கும் இந்த ஒன்றரை ஆண்டு காலம் அவகாசம் வேண்டும் என்கிற கோரிக்கைவிடுப்பதற்கும் எல்லா வகையிலும் இந்திய அரசு சிறிசேனாவிற்கு துணை நிற்கிறது. இந்திய அரசின் இந்த போக்கை இங்கு கூடி இருக்கின்ற அனைத்து அமைப்புகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

இதனை இந்திய அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் மேற்பார்வையுடன் கூடிய புலன் விசாரணை ஒரு போதும் நடக்க வாய்ப்பில்லை. இவர்கள் கால அவகாசம் கேட்டு காலத்தை தாழ்த்தி தள்ளிபோட்டு தமிழ் மக்களை மேலும் நசுக்குவதற்கு அவர்களை அரசியல் சக்தியாக மீள்எழுச்சி பெறாமல் தடுப்பதற்கு அனைத்து சதிகளையும் செய்துவருகிறார்கள்.

 

ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகிறர்கள். அதற்காக தான் இந்த கால அவகாசத்தை அவர்கள் கோருகிறார்கள். ஆகவே, அதற்கு இந்திய அரசு வழக்கம் போல துணைபோவது தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகம் ஆகும்.

 

எனவே, இங்கே கூடி இருக்கின்ற இந்த அமைப்புகளின் சார்பில் இந்திய அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். மார்ச் மாதத்தில் அய்.நா மனித ஆணையம் கூடுகிறது. அதற்கு முன்னதாக இந்த பிப்ரவரி 2வது வாரதிற்குள்ளாக இந்திய அரசு தன்னுடைய நிலைபாட்டை மாற்றி கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒட்டு மொத தமிழ் மக்களுக்கும் உள்ள கோரிக்கையை ஏற்று பன்னாட்டு நீதிபதிகளை கொண்ட பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

 

பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக அரங்கில் அழுத்தம் கொடுக்க வேண்டும், அய்.நா பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதாவது, சர்வதேச நாடுகளின் ஏற்பாட்டுடன் கூடிய உன்னத விசாரணைக் கூடாது. அது ஏமாற்று நடவடிக்கை. அது ஒரு மோசடி நடவடிக்கை. அதற்கு வாய்ப்பே இல்லை.

 

எனவே, பன்னாட்டு நீதிபதிகளை கொண்ட பன்னாட்டு நீதிவிசாரணையை நடத்த வேண்டும். இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிய வேண்டும். சர்வதேச நாடுகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் நங்கள் வலியுறுத்துகிறோம்.

பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள்ளாக இந்த நடவடிக்கைகளை, இந்த தீர்மானத்தை முன்மொழிவதற்கு இந்திய அரசு முன்வரவில்லை என்றால் ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் ஒவ்வொருநாளும் தொடர் முற்றுகை போராட்டத்தை மத்திய அரசு அலுவலகம் முன்னால் நடத்துவோம். ஒரு நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஒருநாள் தமிழக வாழ்வுரிமை கட்சி என்று ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு அமைப்பு என தொடர் முற்றுகை போராட்டம் மத்திய அரசு அலுவலங்களின் முன்னால் நடத்துவோம். ஒரே கோரிக்கை பன்னாட்டு விசாரணைக்கு இந்திய அரசு சர்வதேச சமூகத்திடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

அந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். காலதாமதம் அதாவது கால அவகாசம் சிறிசேனா அரசுக்கு வழங்க கூடாது. அதை முறியடிக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தக் கூடிய வகையில் மாநில அரசு அழுத்தம் கொடுக்கிற வகையிலான ஒரு தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே முன்னால் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மத்திய அரசிற்கு இதே போன்ற அழுத்தம் கொடுக்க கூடிய வகையில் சட்ட பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது ஒரு வரலாற்று பதிவு.

 

ஆகவே, அதை பின்பற்றி தற்போதைய முதல்வர் மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் சட்ட பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருகின்ற இந்த சுழலில் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க கூடிய வகையில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் இங்கே கூடி இருக்கின்ற அமைப்புகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 

இது குறித்து தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்போம்.” எனக் குறிப்பிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றன.