இலங்கை அரசாங்கத்துக்கெதிராக நவநீதம் பிள்ளை கடும் குற்றச்சாட்டு!

0
601

ஐ. நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது இலங்கை விஜயம் தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில் சமர்ப்பித்துள்ள வாய் மூல அறிக்கையில் மக்களின் சகஜநிலையை பாதிக்கும் காரணிகள் விரைவாக நிவர்த்தி செய்யப்படாதவிடத்து அவை எதிர்கால முரண்பாட்டுக்கான விதைகளாக அமையும் என்று எச்சரித்துள்ளதோடு இலங்கயின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.

யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாக இருப்பதாக குற்றம் சுமதித்தியுள்ள அவர், தான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் இராணுவ காவலரன்களும் தடுப்புக்களும் அகற்றப்பட்டதாகவும், ஆனால் பின்னர் தான் அங்கிருந்து புறப்பட்ட பின்னர் மீளவும் அவை ஏற்படுத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுளார். முக்கியமாக, இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ளதும் வெளிப்படைத் தன்மையானதுமான வகையில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீளவும் வலியுறுத்திய நவவி பிள்ளை, இது தொடர்பில் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப் படாமை குறித்து தனது அறிக்கையில் விசனம் தெரிவித்ததுடன் இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இராணுவத்தினரையே நியமனம் செய்வது நம்பிக்கை தருவதாக இல்லை என்றும் தெரிவித்தார்.

வட மாகாண சபைக்கான தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் தனது அறிக்கையில் வரவேற்பு தெரிவித்த அவர், 13ஆவது திருத்தச்சட்ட அமுல்படுத்தலினூடான ஒரு அதிகார பகிர்விற்கு இட்டுச் செல்லும் என்றும் கூறினார். அதேசமயம், யுத்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு தொடர்பு ஆகியவற்றை மேற்க்கொள்வதற்கான பங்குபற்றல் அடிப்படயிலான ஒரு விரிவான தேவைகள் மதிப்பீட்டை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் நவவி பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் தனியார் நிலங்கள் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக அபகரிக்கப்படுவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்ட அவர், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவை உட்பட பல பொருளாதார நடவடிக்கைகளிலும் மற்றும் சிவில் நிவாகத்திலும் இராணுவத்தினரின் பங்கு அதிகமாக இருப்பதாகவும் நவவி பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பல குற்றச் சாட்டுக்களையும் வலியுறுத்தல்களையும் அவர் முன்வைத்திருப்பதாக ஐ. நா மனித உரிமைகள் சபையில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.