war-crime45பிரான்சிஸ் ஹாரிசன்”, பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் இலங்கையின் இறுதிப் போரை, உள்ளதை உள்ளபடி படம் பிடிப்பது போல அவர் எழுதிய “still counting the dead” புத்தகம் இலங்கை தமிழர்கள் இறுதிப் போரின் போது பட்ட அவஸ்தையை வரிக்கு வரி படம் பிடிப்பதுடன் இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களை தொகுக்கும் ஆவணமாகவும் விளங்குகிறது.

அவரை நான் கண்ட செவ்வி,

உங்கள் புத்தகத்தை படித்த போது இலங்கையில் நடந்த இனப் படுகொலையை ஜக்கிய நாடுகள் சபை அமைதியாக வேடிக்கை பார்த்ததுடன் இனப் படுகொலையை தடுப்பதற்கான எந்தவித முயற்சிகளிலும் ஈடு படவில்லை என்ற முடிவுக்கு வாசகர்கள் வரலாம். இலங்கையில் நடந்த இனப் படுகொலையை ஜக்கிய நாடுகள் சபை அமைதியாக வேடிக்கை பார்த்தது என்பதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

ஆம் ஆமோதிக்கிறேன், அண்மையில் வெளிவந்த Petrie Report இல் இருந்து ஜக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடந்த இனப் படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தங்களிடம் இருந்த ஆதாரங்களை போர்க் காலத்தில் வெளியிட்டு இருந்தால் அது சர்வதேச அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இலங்கையில் இனப் படுகொலை நடந்தது எங்களுக்கு தெரியாது என்ற வசனத்தையாவது சர்வதேசம் சொல்ல முடியாமல் போய் இருக்கும். போர்க் கால செய்திகளின் சர்வதேச தொனியை, நிலைப்பாட்டை ஜக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது, அதன் விளைவுகளை அவலங்களாக நாம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவால் ஜக்கிய நாடுகள் சபையில் சில மாதங்களிற்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை தமிழர் வாழ்வில் ஏதாவது சுபீட்சத்தை கொண்டுவரும் என நம்புகிறீர்களா?

இலங்கையில் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் எந்த வித உதவியையும் செய்துவிடாது. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதியை நோக்கிய ஒரு சிறிய அடி. It’s better than nothing… ஆனால் தேவையானதற்கு கொஞ்சம் கூட நெருங்கவில்லை என்பது யதார்த்தம்.

அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என நினைக்கிறீர்களா?

இறுதிப் போரின் போது இந்தியா அப்பாவி தமிழ் மக்களை காக்க எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் “அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது” என சொல்வது அபத்தம். அவர்கள் அப்பாவி இலங்கை தமிழர்களை காக்க எந்த வித முயற்சியையும் எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதில் இலங்கை அரசாங்கத்தை இந்தியா வெளிப்படையாக ஆதரித்தது. இந்தியா மட்டுமல்ல வேறு பல நாடுகளின் துணையும் இதில் உண்டு.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை தனியே இலங்கை அரசபடைகளால் மாத்திரம் நடத்தப் படவில்லை, மாறாக இந்தியா உட்பட வேறு சில நாடுகளின் துணையுடன் நடத்தப்பட்டது’ என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இனப் படுகொலை செய்தவர்களுக்கும் அதை ஆதரித்ததுடன் இன்னும் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. பல நாடுகள் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்தார்கள். சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கை IMF கடனைப் பெற்றுக் கொண்டது. அந்தக் கடன் மூலம் போரால் இழந்து போன இலங்கையின் பொருளாதாரம் மீளக்கட்டி எழுப்பப்பட்டது. சர்வதேசத்தின் ஆசி இல்லாமல் இலங்கையில் இனப்படுகொலை நடந்து இருக்காது என்பது உண்மை.

இலங்கை தமிழர்களுக்கு நீதியை இனியாவது சர்வதேசம் பெற்றுத் தரும் என நம்புகிறீர்களா?

இலங்கை தமிழர்களுக்கு நீதி ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும் என நான் நம்புகிறேன். அதற்கு நாம் பொறுத்திருக்க வேண்டும் என்பதுடன், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதுடன் எமது முயற்சிகளும் அதை நோக்கியதாக இருக்க வேண்டும்.

கண்ணீர் வராமல் உங்கள் புத்தகத்தை என்னால் படிக்கச் முடியவில்லை, வாசித்த எனக்கு அப்படி இருந்த போது தகவல்களைப் பெற்று அதை கோர்வையாக்கி எழுதிய உங்களின் உணர்வு எப்படி இருந்தது?

உங்கள் புத்தகத்தை படித்த போது உடைந்து அழுதேன் என பலர் கூறி நான் கேட்டிருக்கிறேன். சில வாசகர்கள் தங்களால் ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயம் தான் படிக்க முடிந்தது ஏன் என்றால் புத்தகம் சொல்லும் வலி தாங்க முடியாதது எனக் கூறினார்கள். கொடிய இனப் படு கொலைக்கு மௌன சாட்சியான ஒவ்வொரு தனி நபரையும் தேடி அவர்களின் சோகக் கதைகளை கேட்டு எழுதும் உணர்வு என்பது உண்மையில் மிகவும் வேதனையானது தான்.

உங்களைப் பொறுத்த வரை இலங்கை தமிழர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும்? எதை நோக்கிய நகர்வு அவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்?

சில உண்மைகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் பேச தமிழர்கள் முன் வர வேண்டும். சில சுய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். தமிழர்களின் வலி நிரந்தரமாக நீக்கப் பட வேண்டும். உண்மைகள் சில புரிந்துணர்வுகள் சுய பரிசோதனைகள் இல்லாமல் சுபீட்சம் என்பது சாத்தியமில்லை.

ஆதவன் இணையம்