இலங்கையில் இருந்து வந்து தமிழ் நாட்டில் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாட விருந்த ஸ்ரீலங்காவின் இளையோர் கிரிக்கட் அணியை உடனே வெளியேறுமாறு,பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி,தமிழ் நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..

இத்தனையும் நடந்தும் இந்திய மத்திய அரசு வலுவான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரை வெளிவந்ததும்,இலங்கைக்கான இந்தியத் தூதர்,கொழும்பில் சம்பந்தப் பட்ட சில அதிகாரிகளை அழைத்து கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து
cene-protest1
இலங்கை அரசு,குறிப்பிட்ட கட்டுரையை நீக்கியதுடன், தமிழ் நாடு முதல் அமைச்சரிடமும் ,இந்தியப் பிரதமரிடமும் மன்னிப்புக் கோரியது மட்டுமே இந்தப் பிரச்சனையில் எடுக்கப் பட்ட அதி உச்ச நடவடிக்கைள் ஆகும்.

ஆனால்,ஓர் நாட்டின் சக்தி வாய்ந்த மாநில அமைச்சரையும்,ஒரு நாட்டின் வலிமை வாய்ந்த பிரதமரையும்,அவமானப் படுத்தும் வகையில் நடந்துகொண்டு,ஓர் பொது ஊடகத்தில்,செய்தி வெளியிட்ட, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் இலங்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

அதேவேளை,ஏற்கனவே இலங்கை,ஐ,நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான-தமிழரான,நவி.பிள்ளையையும் மிக கேவலமாக இலங்கையில் வைத்து,இதுபோன்று அவமானப் படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது.

எது எப்படியிருந்தாலும்,இந்தியத் தரப்பில் ..மக்கள் ஆதரவு மிக்க இரு பொறுப்புள்ள தலைவர்கள்மீது சுண்டைக்காய் நாடான இலங்கை சேறு பூசியிருப்பதற்கு,இந்திய அரசு மிகப் பலமான நடவடிக்கையை வெளியுறவுத் துறை மூலம் எடுத்திருக்கவேண்டும். குறைந்தது இலங்கைக்கான இந்தியத் தூதரையாவது அங்கிருந்து திரும்ப அழைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள தூதரை கண்டனத்துடன் வெளியேற்றி இருக்க வேண்டும்.ஆனால்,இந்திய வெளியுறவுத் துறை ராஜபக்சாவுக்கு சார்பாக கும்பகர்ணன் தூக்கம் போடுகிறது.

முன்னாள் காங்கிரஸ் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுக்கும் இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் எந்த வேறுபாடும்,இலங்கையைப் பொறுத்தவரை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஆனால்,முதல் அமைச்சரை அவமதித்த இலங்கையின் நடவடிக்கையை தமிழ் நாடு மக்கள் இலகுவில் மன்னிக்கத் தயார் இல்லை என்பதுபோல் இன்றும்,தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இலங்கைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.திரைத் துறையை சேர்ந்த கலைஞர்களும் இன்று சென்னையில் தமது கண்டனப் போராட்டத்தை நடாத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது!

மு.வே.யோகேஸ்வரன்