இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தில் கீழ்த்தரமான கட்டுரை வெளியிட்டதற்காக அந்நாட்டு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

jayalalitha-in-srilankan-website-600
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதுவதை தரம் தாழ்ந்து விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்றத்திலும் இந்த கட்டுரை விவகாரம் எதிரொலித்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், அவதூறான கட்டுரையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை இழிவுபடுத்தும் வகையில் அக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தியை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவை இழிவுபடுத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை ராணுவம்.

இலங்கைப் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வெளியான தரம் கெட்ட கட்டுரையால் சர்ச்சை ஏற்பட்டு ஓய்ந்துள்ளது.தமிழக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார் ஜெயலலிதா.

அதேபோல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்தும் தொடர்ந்து அவர் எழுதி வருகிறார்.இந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையப் பக்கத்தில் கிண்டல் செய்து விமர்சித்து கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையின் தலைப்பே விஷமத்தனமாக இருந்தது. நரேந்திர மோடிக்குஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களில் அர்த்தம் உள்ளதா என்பதுதான் அதன்தலைப்பு. இக்கட்டுரையை, ஷெனாலி டி வகிடு என்ற சிங்களர் எழுதியிருந்தார்.

அந்தக் கட்டுரையில் தமிழக மீனவர் விவகாரம் குறித்தும், கச்சத்தீவு குறித்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார்.

மிக நீளமான அந்தக் கட்டுரையில் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக விமர்சித்து விட்டு கடைசியில், கொட்டை எழுத்துக்களில் இந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ள கருத்துக்களுக்கும், எழுத்தாளரின் கருத்துக்களுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, இந்தக் கருத்துக்களுக்கு பாதுகாப்புத்துறை பொறுப்பாகாது என்றும் போட்டு வைத்திருந்தனர்.

இந்தக் கடிதமும், அதற்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கிலத் தலைப்பும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அக்கட்டுரையை பாதுகாப்புத் துறை இணையதளப் பக்கத்திலிருந்து நீக்கிய இலங்கை அரசு, தவறுதலாக அக்கட்டுரை வெளியானதாக ஜெயலலிதா மற்றும் மோடியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.