balakumarகடந்த 2015 அக்டோபரில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக்கான தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை அரசு ஆதரித்தது. ஐநா மனித உரிமை கவுன்சிலின் 30-வது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதே இலங்கை அரசு, ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்வைத்த தனது பொறுப்புகள், உறுதியளிப்புகள் மற்றும் கடமைகளை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்குகிறது.

 

போரின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி சர்வதேச நீதிபதிகள் விசாரிப்பது உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீட்டை அனுமதிப்பது என்று அந்தத் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக, உள்நாட்டு விசாரணையை மட்டுமே நடத்த வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்துகிறது.

 

சர்வதேச நீதிபதிகளை இடம்பெறச் செய்வதற்கான சாத்தியங்களை வெளிப்படையாக மறுத்திருக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எந்தவித விசாரணையாக இருந்தாலும் அது முற்றிலும் உள்நாட்டு விசாரணையாகவே இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். “மனித உரிமை மீறல் தொடர்பான எந்த விதமான விசாரணையிலும் சர்வதேச நீதிபதிகள் ஈடுபடுவதை நான் ஏற்க மாட்டேன்” என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் கூறியிருக்கிறார்.

 

காணாமல் போனவர்கள்

 

ஐநா மனித உரிமை கவுன்சிலின் 32-வது கூட்டம் கடந்த ஜூன் 13-ல் தொடங்கியது. அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத் தின் அடிப்படையில் செயல்படுவதுபோல் காட்டிக்கொள்ள அவசர அவசரமாக நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கத் தொடங்கியது.

 

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக, ‘காணாமல் போனவர்களுக்கான அலுவலக’த்தை (ஓ.எம்.பி.) தொடங்குவதற்கான தீர்மானத்தை இலங்கை அமைச்சகம் நிறைவேற்றியது. ஐநா கூட்டத்தில் சர்வதேச நாடுகள் ஆய்வு நடத்துவதைச் சமாளிக்கவே இந்நடவடிக்கையை இலங்கை எடுத்திருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பலவந்தமான நடவடிக்கைகளால் காணாமல் போனவர்கள் தொடர்பான கூட்டத்துக்கு அதே வாரம் இலங்கை அரசு ஒப்புதல் அளித்ததுடன், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரிடம் எந்த விதமான ஆலோசனையும் நடத்தாமலேயே ‘காணாமல் போனவர்களுக்கான அலுவலக’த்தைத் திறந்தது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியிருக்கிறது.

 

இலங்கையின் தோல்வி

 

இலங்கை அதிபர் மற்றும் பிரதமரின் அறிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழர்களை நம்பிக்கையிழக்கச் செய்திருக் கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிலிருந்து பேருக்குச் சில நிலங்கள் திரும்ப அளிக்கப்பட்டிருப்பது, அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டிருப்பது ஆகிய வற்றைத் தாண்டி, போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை எடுப்பது, தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போக்குகளுக்கு முடிவுகட்டுவது என்று ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் விஷயத்திலும் இலங்கை அரசு தோல்வியடைந் திருக்கிறது. மாறாக, வெள்ளை வேனில் தமிழர்கள் கடத்தப்படும் சம்பவங்கள், சித்திரவதைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தேவை யற்ற, சட்டத்துக்குப் புறம்பான கைதுகள் கடந்த மே மாதம் வரை தொடர்ந்து நடந்துவந்திருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீடிக்கும் ராணுவக் கண்காணிப்பு, அங்குள்ள தமிழர்கள் மத்தியில் ஆழமான பயத்தையும் பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

சிதைந்துபோன நீதி

 

இலங்கையில் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, முக்கியமான சீர்திருத்தங்கள் நடக்கும் என்றும் ஜனநாயகமும், நல்லிணக்கமும் நிலைநாட்டப்படும் என்றும் இலங்கைக்கு வெளியில் உள்ள பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் நம்பினார்கள். பொறுப்புக்கூறல், நீதி போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான பாதையில் இலங்கை அரசின் புதிய கொள்கைகள் பின்னடைவை ஏற்படுத்தின. விளைவாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை வெளியீடு 2015 மார்ச்சுக்குப் பதிலாக டிசம்பருக்குத் தள்ளிப்போனது. தாமதமாக வெளியான அந்த அறிக்கையில், இலங்கை அரசு மற்றும் அதன் படைகள் தொடர்பான தீவிரமான, விரிவான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

 

அதற்கு முன்னர் வெளியான நிபுணர்கள் குழு அறிக்கையிலும், ஐநா பொதுச் செயலாளரின் ஆய்வுக்குழு அளித்த அறிக்கையிலும் இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இந்த சர்வதேச அறிக்கைகள் மட்டுமன்றி, 2012 மார்ச், 2013 மார்ச் மற்றும் 2014 மார்ச்சில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் மூன்று தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசு நிகழ்த்திய அக்கிரமச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை இந்தத் தீர்மானங்கள் நீர்த்துப்போகச் செய்யவில்லை.

 

அதேசமயம், போரின்போது சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அத்துமீறல்களில் இருதரப்பினரும் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இடம்பெற்றிருந்தபோதிலும், 2015 அக்டோபரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு ஆதரித்தது.

 

கடைசியாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு முன்னர், அனைத்துத் தரப்பினரும் நிகழ்த்திய போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகச் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்திருந்தார். “சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையிலி ருந்து தப்புவது பல ஆண்டுகளாகத் தொடர்வதால், இலங்கையின் பாதுகாப்புத் துறையும் நீதியமைப்பும் சிதைந்து ஊழல் மயமாகிவிட்டன” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

நிறைவேறா வாக்குறுதிகள்

 

இலங்கை அரசின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையை எப்போதோ இழந்துவிட்ட நிலையில், நீதி வேண்டி இலங்கைக்கு வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள். தங்களுக்கு நீதி வழங்க சர்வதேச அமைப்புகளே வழிவகுக்கும் என்ற நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலுக்கு மத்தியிலும் ஐநா மனித உரிமை கவுன்சிலைப் பலர் தொடர்புகொள்கிறார்கள்.

 

எனினும், கடந்த ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் அரசியல் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ஐநா மனித உரிமை கவுன்சில் மீதான இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் வீணாகிவிட்டன என்றே சொல்லலாம். ஐநா பிரதிநிதிகளின் வருகை மற்றும் அவர்கள் வெளியிடும் அறிக்கைகளைத் தாண்டி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசுக்கு அழுத்தம் தரும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

 

இந்தப் பிரச்சினையைத் தாமதப்படுத்துவதன் மூலம், சர்வதேசத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விஷயங்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று இலங்கை நம்புவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

 

ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனா “எங்களிடமிருந்து விலகி நின்ற நாடுகளும் ஐநாவும் தற்போது எங்களுடன் நட்புடன் இருக்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பான பலத்த குற்றச்சாட்டுகள் குறைந்திருக்கின்றன. போர்க்குற்றத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று எழுந்த உரத்த குரல்களும் மறைந்துவிட்டன” என்று குறிப்பிட்டிருக்கிறார். போர்க்குற்றம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு உறுதியாக இல்லை என்பதை அவரது வார்த்தைகள் தெளிவாகக் கோடிட்டுக்காட்டுகின்றன.

 

இலங்கை அதிபரின் கருத்து வெளியாகி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்கள் மீது கிளஸ்டர் (கொத்து) குண்டுகள் வீசப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. போரற்ற பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளிலும் இவ்வகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு இலங்கை விமானப் படையே பொறுப்பு என்று ‘தி கார்டியன்’இதழ் குறிப்பிட்டிருக்கிறது.

 

இலங்கை விஷயத்தில், ஐநா உள்ளிட்ட சர்வதேசச் சமுதாயம் தனது தேக்க நிலையிலிருந்து வெளியே வர வேண்டிய அவசியத்தை இந்தத் தகவல் உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண் பதில் ஐநா மனித உரிமை கவுன்சில் தெளிவாகவும் தீர்க்க மாகவும் செயலாற்றுவதை உறுதிசெய்வதிலும், இந்தப் பிரச்சினை சர்வதேசப் பார்வையிலிருந்து விடுபடுவதைத் தடுக்க, ஐநா மனித உரிமை கவுன்சிலையும் தாண்டி வேறு வழிகளைப் பயன்படுத்திக்கொள்வதிலும் சர்வதேசச் சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும்!

 

‘தி கார்டியன்’, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

 

நன்றி : தி இந்து.