மனித உரிமைகள் விவகாரத்தில் ஐநாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டன் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் தலைவர் ரிச்சர்ட் ஓட்டவே வலியுறுத்தியிருக்கிறார்.

இலங்கையில் மோதல் முடிந்த பிறகும் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதாகவும், அதனாலேயே பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் இலங்கை கவலைக்குரிய ஒரு நாடு என்று சரியாகவே கூறியுள்ளதாகவும் ஒட்டவே பிபிசியிடம் தெரிவித்தார்.

UN-exp8
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசோ தற்போது சர்வதேச விசாரணைக்கான அழைப்பை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்த ஒட்டவே, இந்த விசாரணையை நடத்துபவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்றும் இந்த விசாரணையில் சாட்சியம் சொல்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றெல்லாம் இலங்கை அச்சுறுத்துவதாகவும், அதன் விளைவாகவே, இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோருவதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அளிக்கப்படும் பொதுவான பொருளாதார சலுகைகள் என்கிற பட்டியல் இருப்பதாகவும் அதன்படி ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் மற்றநாடுகளுக்கு கொடுக்கப்படாத பல பொருளாதார சலுகைகள் இலங்கைக்கு அளிக்கப்படுவதாகவும் அப்படி இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார சலுகைகள் நிறுத்தப்படவேண்டும் என்று தாங்கள் கோருவதாகவும் தெரிவித்த ஒட்டவே, இதன் மூலம் இலங்கைக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றும் ஆனால் அதன் மூலம் இலங்கை அரசு தன்னுடைய கவனத்தை இந்த மனித உரிமைகள் விவகாரத்தில் செலுத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தங்களின் பரிந்துரை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கப்படுவதாகவும் பிரிட்டிஷ் அரசு மனித உரிமைகள் விவகாரத்தை மிகவும் தீவிரமாக கருதுவதால் தங்களின் இந்த பரிந்துரைகளை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று நினைப்பதாகவும் ரிச்சர்ட் ஒட்டவே நம்பிக்கை வெளியிட்டார்.

அதேசமயம் தங்களின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். தமது பரிந்துரைகள் எல்லாம் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் என்பதால் இவை நடைமுறைக்கு வருவதற்கு நாட்கள் பிடிக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகைகளை திரும்பப்பெறவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் பிரிட்டன் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தாங்கள் கோருவதாகவும் ஒட்டவே கூறினார்.

இலங்கைக்கு எதிராக இந்த மாதிரியான கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விருப்பம் காட்டவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஒட்டவே, காமன்வெல்த் நாடுகள் மத்தியில் இதில் ஒருவித தயக்கம் இருக்கத்தான் செய்கிறது என்றும் கூறினார். அதேசமயம், இந்தியாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது காமன்வெல்த் நாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை என்று விளக்கிய அட்டவே, தமது இந்த யோசனைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் வைக்கப்பட்டால் அவை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்கிற நம்பிக்கை தம்மிடம் இருப்பதாகவும் கூறினார்.

தமது இந்த முடிவுக்கும், பரிந்துரைகளுக்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர்களின் அழுத்தம் தான் காரணம் என்று இலங்கை அரசு கடந்தகாலத்தில் சொன்னதைப்போல இந்த முறையும் சொல்லக்கூடுமே என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அது தவறான தகவல் என்றும் தவறான புரிதல் என்றும் மறுத்தார்.

தங்களின் இந்த முடிவுக்கு காரணம் உலகம் முழுக்க இருக்கும் பிரிட்டன் தூதரகங்களின் தரவுகள், மற்றும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச், அம்னெஸ்டி போன்ற மனித உரிமை அமைப்புக்களே தவிர புலம்பெயர் தமிழர்களின் தரவுகள் எவையும் தமக்கு கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார் பிரிட்டிஷ் வெளியுறவுக்கொள்கையின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ரிச்சர்ட் அட்டவே.

பி.பி.சி