sister-missingகிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இளம் தாய் பாலேந்திரா ஜெயகுமாரியையும் மகளான சிறுமி விபூசிகாவையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் தலையிடவேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அறிக்கை மூலம் சர்வதேசத்தைக் கோரியுள்ளது.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:-

2014 மார்ச் 13 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரியில் பாலேந்திரா ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் மற்றும் விபூஷிகா என்ற அவருடைய 13 வயதேயான மகளை கைது செய்தமைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பை தெரிவிக்கின்றது. ஜெயக்குமாரியின் வீட்டுப் புறத்தில் இருந்து துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன எனவும், அதைத் தொடர்ந்து ஒரு பொலிஸ்காரருக்கு குண்டடி பட்டு காயம் ஏற்பட்டதாகவும், ஜெயக்குமாரியின் வீட்டுக்குளளேயே துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் பதுங்கி இருப்பதாகத் தமக்கு தென்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

பொதுவாக வடக்கு மாகாணத்தில், காணாமல் போனோரின் குடும்பத்தார் நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் அனைத்திலும் ஜெயக்குமாரி பங்கேற்பதுண்டு. இதற்கான காரணம், அவருக்கு இருந்த மூன்று ஆண் மக்களில் இருவர் யுத்தத்தில் மாண்டு போனதன் பின், யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 மே மாதத்தில் எஞ்சியிருந்த தன்னுடைய மூன்றாவது மகனை ஜெயக்குமாரி பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தாலும், அதன் பின் அந்த மகனை பற்றிய எந்தத் தகவலும் ஜெயக்குமாரிக்கு இன்றளவிலும் கிடைக்கவில்லை என்பதேயாகும்.

அநேகமாக ஜெயக்குமாரிக்கு தற்போது உயிரோடு எஞ்சியிருக்கும் ஒரே பிள்ளை அவருடன் கைது செய்யப்பட்டுள்ள மகள் விதுஷிகாவாகவே இருக்கலாம். சுமார் 700 பேர் கொண்ட பட்டாளம் ஒன்று கடந்த நாள் மாலை ஜெயக்குமாரியின் வீட்டை முற்றுகையிட்டது. அதன் பின் அவருடைய கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றிய அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரம் ஜெயக்குமாரியிடம் கேள்விகளை கேட்டதன் பின் அவரையும் அவருடைய மகள் சிறுமி விபூஷிகாவையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

பிறகு விதவைத் தாயும் அவருடைய சேயும் வவுனியாவில் உள்ள ஒரு முகாமில் நேற்று இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக மறுநாள், அதாவது 14 மார்ச் தாயும் சிறுமியும் நீதிமன்றத்;தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கவலை கொண்ட பொது மக்கள் பலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ. சரவணபவன் இருவரும் நாள் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் மாலை மூன்று மணியான பின்பும் ஜெயக்குமாரியையோ அவருடைய மகளையோ எவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை.

பிறகு கிடைத்த தகவலின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுரைப்படி பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனும் கெடூரமான சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் சிறுமி விதுஷிகாவையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. கைது செய்யப்படும் ஒரு சந்தேக நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்ற நியதியை மீறும் அதிகாரத்தை பயங்கரவாத தடுப்புச் சட்டம் தருகின்றது. ஜெயக்குமாரி மற்றும் அவருடைய மகள் விடயத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ள இரக்கமற்ற விதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்துள்ளது.

அரசின் செயற்பாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகி வரும் இந்நாட்களில் கூட அரசு துணிச்சலாக ஒரு தாயும் சேயும் விடயத்தில் நடந்து கொண்டுள்ள கொடூரமான விதத்தை பார்க்கும் போது, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை தாம் சிறிதளவேனும் பொருட்படுத்துவதில்லை என்பதை மறைமுகமாக அரசு கூறுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறிருந்த போதிலும், ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் விபூஷிகாவையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தமிழ் பெண்கள் விடயத்தில் அதிகரித்துவரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை கருத்தில் கொள்ளும் போது ஓர் இளம் விதவையும் அவருடைய இளம் வயது மகளும் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அவர்களுடைய உயிர் மற்றும் மானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய நிலையை உருவாக்கி விடுமோ என தமிழத் தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கின்றது.

ஆகையால், ஜெயக்குமாரிவையும் விபூஷிகா சிறுமியையும் காப்பாற்றுவதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.