முன்னாள் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் 14 பேரையும் வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாமாக வெளியேற வேண்டுமெனவும் அவர்களை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களெனவும் அவர்கள் தாமாக வெளியேறாவிடின் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களில் அரசியல் செல்வாக்குடன் ஈபிடிபியிலிருந்து அக்கட்சி சார்ந்தவர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அரசியல் பின்னணியிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தால் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டது.

வெளிவாரி உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு, துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமும், பீடங்களின் பீடாதிபதிகளும் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரிடம் பல்கலை நிர்வாகத்தை கையளிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகுமெனவும் தொழிற்சங்கப்போராட்டங்களால் பல்கலைக்கழகம் முடங்கிப்போவதை தவிர்க்க அவர்களாகவே பதவியினை ராஜினாமா செய்யவேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.