praba-vaikoஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான் ஒரே தீர்வாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம் பெரும் துயரம் அடைந்திருக்கிறது.

 

வரலாற்று காலம் தொட்டே இலங்கையின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்து வந்த தமிழர்களின் அடிமை விலங்கை ஒடிப்பதற்குத்தான் தந்தை செல்வா தலைமையில் முப்பது ஆண்டு காலம் அறப்போராட்டமும், மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் முப்பதாண்டு காலம் மறப்போரும் நடந்தது.

 

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிர்ப்பலி ஆயினர். சிங்கள கொலைவெறிக் கூட்டம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தபோது நவீன உலகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது.

 

இதற்குப் பிறகும், ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக ஆக்குவோம்என்று சிங்கள இனவாத அரசு கொக்கரிக்கிறது. இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில், சமஷ்டி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

ஆங்கிலேயர் ஆட்சியில் 1948 இல், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை முதன் முதலாக சோல்பரி ஆணையம் வடிவமைத்தது. தமிழ் மக்களின் வரலாற்றுப் பின்னணி பற்றிய சரியான புரிதல் இல்லாமல், சிங்களவருக்கு கட்டற்ற உரிமைகளை வழங்கி அந்த ஆணையம் அரசியல் சட்டத்தை இயற்றியது.

 

இலங்கை அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த சோல்பரி, பிற்காலத்தில் பி.எச்.பாமர் எழுதிய, ‘சிலோன் ஏ டிவைடட் நேஷன்’ என்ற நூலுக்கு முகவுரை எழுதியதில், “தாம் உருவாக்கிய அரசியல் சட்டம் மூலம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலேயர், சிங்களவரிடம் அதிகாரத்தைக் கைமாற்றிய பிறகு, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துதான் சோல்பரி வருந்தினார்.

 

அதன்பின்னர் ஸ்ரீமாவோ பண்டார நாயகா காலத்தில் முதல் குடியரசு அரசியல் சட்டம் 1972 மே 22 ஆம் தேதி இயற்றப்பட்டு, தமிழினம் முற்றாக புறந்தள்ளப்பட்டு, இரண்டாந்தர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். பௌத்த மதம் நாட்டின் மதமாகவும், சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது.

 

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அதிபர் ஆன பிறகு, 1979 இல் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டது. இப்போதும் இலங்கை ஒரு பௌத்த சிங்களக் குடியரசு என்பதையும், சிங்கள மொழியே அரசு மொழி என்றும் அரசியல் சட்டம் மீண்டும் வரையறுத்தது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜெயவர்த்தனே சர்வ வல்லமை கொண்ட அதிபராக அதிகாரங்களைக் கபளீகரம் செய்துகொண்டார்.

 

ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை அளிக்கவும், சமஷ்டி ஆட்சி முறையில் அதிகாரம் வழங்கவும் ஜெயவர்த்தனே மறுத்துவிட்டார். 1987 இல் இந்தியாவின் தலையீட்டில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவானது. அதில் ஈழத்தமிழர்களின் தாயகமான வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்தபோது, ஈழத்தமிழர் பிரச்சினையில் மூக்கை நுழைத்த இந்தியஅரசு வாய்மூடி மௌனியாக இருந்தது.

 

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கண்துடைப்புக்காக அறிவித்து, இலங்கையுடன் சேர்ந்து இந்திய அரசும் உலகத்தை ஏமாற்ற தொடர்ந்து நாடகம் ஆடி வருகிறது. இலங்கை உச்ச நீதிமன்றம், வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பதே செல்லாது என்று இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தபோதும், தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

 

1972 இல் முதல் குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய இலங்கை சுதந்திரக் கட்சியும், 1979 இல் இரண்டாவது அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களை சட்டப்படி அடிமைகள் ஆக்கின. தற்போது இந்த இரண்டு சிங்கள இனவாத கட்சிகளும் ஒன்று சேர்ந்து இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில், புதிய அரசியல் சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தர கொத்தடிமைகள் ஆக்க முடிவு செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

 

இலடசக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்திட காங்கிரஸ் கூட்டணி அரசு துணைபோனது. தற்போது, ஈழத் தமிழர்களை நிரந்தரமாக கொத்தடிமைகளாக்கும் சிங்களப் பேரினவாததிற்கு பா.ஜ.க அரசு வெண்சாமரம் வீசுகிறது.

 

இலங்கையில் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஈழத்தமிழர்களை அழிப்பதில் கைகோர்த்துக் கொண்டதைப்போல, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன.

 

இந்திய அரசு கொடுத்த துணிச்சலால்தான், இலங்கை அதிபர் புதிய அரசியல் சட்டத்தில் சமஷ்டி முறை கிடையாது என்று திமிரோடு அறிவித்துள்ளார். இந்தப் புதிய அரசியல் சட்டம் தமிழர்களை வேரறுக்கும் கொலைவாள் என்பதை உலகத்தமிழர்கள் உணர வேண்டும்.

 

இலங்கை தமிழினப்படுகொலைக்கு பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையால்தான் நீதி கிடைக்கும் என்று பத்து நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 

இலங்கையில் தமிழ் மக்களை சட்டபூர்வ அடிமைகளாக்கும் திட்டத்தை ஐ.நா. மன்றமும், ஜனநாயக சமத்துவத்தை வலியுறுத்தும நாடுகளும் வேடிக்கை பார்ப்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத இன்னொரு அநீதியாகும்.

 

ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான் ஒரே தீர்வாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.