சிறீலங்கா அரசு மீதான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளை இந்தியா ஆதரிக்கப்போவதில்லை என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் ஆந்திரா பிரதேசத்தின் ஹைதராபாத்தில் இரு தினங்களாக முகாமிட்டிருந்து இந்திய தலைவர்களை சந்தித்த பின்னர் இந்தியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு வீரகேசரி வாரஏட்டுக்கு எழுதிய பத்தியை ஈழம் ஈ நியூஸ் இங்கு மீள்பிரசுரம் செய்கின்றது.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவுகட்டவும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா உதவிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.

எனவே தமிழ் மக்களை மீண்டும் ஒரு மாயைக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களின் இருப்பை முற்றாக அழிவுக்கு உள்ளாக்க சில சக்திகள் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவானது.

இந்த நிலையில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத்தருமா என்ற கேள்விக்கான சாத்தியங்களை ஆராய்வது இங்கு பொருத்தமானது.

mahi-modi
1980 களில் ஈழத்மிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக விடுதலை இயங்கங்கள் ஆயுதங்களை தூக்கிய போது அமெரிக்காவுக்கும் – சோவித்து ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக அமெரிக்காவை சிறீலங்காவில் காலூன்ற விடாது தடுப்பதற்காக இந்தியா ஈழவிடுதலைப் போரளிகளை தனது நலன்களுக்கான பயன்படுத்தியிருந்தது.

எல்லா இயங்கங்களும் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்த போதும் அந்த தந்திரவலையில் இருந்து தப்பியது விடுதலைப்புலிகள் மட்டும் தான். சிறீலங்கா அரசு மீதான தனது அழுத்தங்களுக்கு சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடிய இயக்கங்களை பயன்படுத்திய இந்தியா பின்னர்; அமைதிப்படை என்ற பெயரில் சிறீலங்காவில் கால்பதித்த பின்னர் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அனைத்து இயங்கங்களையும் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களை அழித்துவிடவே முயன்றிருந்தது.

ஆனால் அப்போதும் விடுதலைப்புலிகள் மட்டுமே தப்பிக்கொண்டனர். சில நூறு விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்காக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சிறீலங்காவில் நிலைகொண்ட போதும், அவர்களால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அதாவது சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து தனது நகர்வை மேற்கொள்ளவோ அல்லது தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத்தரவோ இந்தியா முயன்றது கிடையாது.

1990 களில் இந்திய இராணுவம் சிறீலங்காவை விட்டு வெளியேறியபோதும் அதனை ஒரு இராணுவத் தோல்வியாக ஏற்றுக்கொள்ளாது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அரசியல் தோல்வியாக சித்தரித்து இந்தியா சென்றிருந்தது. ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்பது அந்த இரு நாடுகளின் கருத்துக்களை அதிகம் உள்வாங்கியதொன்று. அங்கு தமிழ் மக்களின் கருத்துக்கள் என்பது அவர்களின் விருப்பப்படி உள்வாங்கப்படவில்லை.

எனவே அந்த இரு நாடுகளும் மேற்கொண்ட உடன்படிக்கையை இந்தியா நிறைவேற்ற முடியவில்லை என்றால் அது இந்திய – சிறீலங்கா அரசுகளை சார்ந்தது.

இந்தியப்படையின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான வழிகளை அடைத்துவிடுவதை முதன்மையாக கொண்டதே தவிர அதற்கு அனுகூலமானதல்ல.

susma-peris
2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவை இணைந்துகொள்ளுமாறு தமிழ் சமூகம் கேட்டுக்கொண்ட போதும் இந்தியா அதற்கு மறுத்துவிட்டது. சமாதானப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு இடத்தை கூட வழங்க அது மறுத்துவிட்டது.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை சிறீலங்கா அரசு மேற்கொண்டபோது சிறீலங்கா அரசுடன் இந்தியா இணைந்துகொண்டது. நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாடுகளை கிழித்தெறிந்து மேற்குலகத்தை சிறிலங்காவை விட்டு வெளியேற்றியிருந்தது.

போர் உக்கிரமடைந்தது, பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கி கொண்டனர். பெருமளவான மக்கள் கொல்லப்படுவார்கள் என உலக நாடுகள் எச்சரித்தன, இரத்தஆறு ஓடப்போகின்றது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது, மக்களை மீட்பதற்கு அமெரிக்காவின் பசூபிக் பிராந்திய கடற்படை தலைமையகம் தயாரானது. ஆனால் அவை எல்லாவற்றையும் முறியடித்து போரை நடத்தி முடித்தது இந்தியா.

அங்கு நடந்த கொடுமையான போரில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவின் கொழும்பு வதிவிட முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.

அங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மேற்குலகமும், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மனித உரிமைகள் தொடர்பில் பேசுவது கிடையாது.

கடற்கரை மணலினுள் புதைந்துபோன தமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதியை தேடி ஈழத்தமிழ் மக்கள் பல ஆயிரம் மைல்களை கடந்து அயர்லாந்தில் உள்ள டப்பிளின் நகருக்கு சென்றுள்ளனர். ஏன் நீதியை தேடி தமிழ் சமூகம் பல ஆயிரம் மைல்களை கடந்து சென்றுள்ளது என நாம் ஆராய்ந்தால் இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய நடவடிக்கைகளை கூட நாம் அவதானித்தால் ஒன்றை இலகுவாக புரிந்துகொள்ளலாம். அதாவது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என மேற்குலகம் கோரிக்கைகளை விடுத்து வருகின்றது. ஆனால் மறுவளமாக அவர்கள் சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

praba-ipkf8
உதாரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து வருகையில், பிரித்தானியாவும், ஜேர்மனியும் சிறீலங்காவுக்கான உதவிகளை முற்றாக நிறுத்தியுள்ளன.

அதே சமயம் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதுடன், மனித உரிமை மீறல்கள் மற்றும், போர்க் குற்றங்கள் மீதான விசாரணைகளை அமெரிக்கா முதன்மைப்படுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்களின் ஊடாகவே அரசியல் தீர்வுதொடர்பாக சில நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என மேற்குலகம் நம்புகின்றது. அது தான் உண்மையும் கூட.

இந்தியாவும் அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றது ஆனால் சிறீலங்கா அரசு மீது அது அழுத்தங்களை மேற்கொள்வதில்லை, மாறாக உதவிகளையே அது வழங்கிவருகின்றது.

எனவே இந்தியாவின் இந்த இரட்டை அணுகுமுறைகளில் ஒன்று போலியானது, ஒன்று நிஜமானது. அதாவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என இந்தியா தெரிவிப்பது போலியானது, சிறீலங்காவுக்கு அது வழங்கிவரும் உதவிகள் நிஜமானது.

எனினும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்திய தற்போது அதிக ஈடுபாடு காட்டுவதன் அர்த்தம் என்ன? விடை தெளிவானது. ஈழத்தமிழ் மக்களுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான உறவுகளை முறியடிப்பதுதான் அதன் நோக்கம்.

இந்த உறவுகளை முறியடிக்கும் வரை இந்தியா ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அதிகம் பேசும், பல நாடகங்களை அரங்கேற்றும், ஆனால் ஈழத்தமிழ் மக்கள் மேற்குலகத்துடன் கொண்டுள்ள உறவுகள் முறிவடையும் போது ஈழத்தமிழ் மக்களும் தமது அடையளங்களை இழந்துபோவார்கள் அதன் பின்னர் அவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு தயாகம் என்ற ஒரு பிரதேசத்தை இந்தியா விட்டுவைத்திருக்கப்போவதில்லை.

அதனை தான் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நளேடு ஒன்றில் தொடர்ச்சியாக அரசியல் பத்திகளை எழுதிவரும் இந்திய ஆய்வாளர் ஒருவர் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும் போது தெரிவித்திருந்தார்.

அதாவது போர் நிறைவடைந்துவிட்டது எனவே தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சிறீலங்கா முழுவதும் கலந்து சேர்ந்து வாழும் ஒரு சூழ்நிலைகளை ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்ததை நாம் இங்கு முக்கியமாக கருதவேண்டும்.

எனவே கடந்த 27 வருடங்களான இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு கற்றுத்தந்த அனுபவங்களை மறந்து நாம் மீண்டும் இந்தியாவை நம்புவது என்பது, ஒரு தற்கொலைக்கு ஒப்பானது.

ஏனெனில் கடந்த 27 வருடங்களில் ஈழத்தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த நகர்வையும் இந்தியா மேற்கொள்ளவில்லை, குறிப்பாக சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பை பிரித்தபோதும் இந்தியா எந்த அழுத்தங்களையும் மேற்கொள்ளத் துணியவில்லை.

எனவே ஒரு அழுத்தமான சூழலில் வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கு மக்களை மீண்டும் இந்தியா என்ற மாயைவலைக்குள் தள்ளுவதன் மூலம், அவர்களின் அரசியல் உரிமைகளை முற்றாக குழிதோண்டிப் புதைப்பதை பகுத்தறிவுள்ள தமிழ் சமூகம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.