இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரிகளின் வகையில் இலங்கையின் வடகிழக்கைப் பூர்விகமாய்க் கொண்ட தமிழர்களும் அடங்குவர். இலங்கைத் தீவை முழுமையாக பௌத்த சிங்கள நாடக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பிந்திய வெளிப்பாடுதான் வடகிழக்கிலுள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு இராணுவத்தினர் மூலம் பௌத்தத்தை கற்பிப்பதற்கான சனாதிபதியின் உத்தரவு.

தமிழர்கள் தங்கள் இறந்துபோன உறவுகளை நினைத்து அழமுடியாத அடிமைகளாக தாயகத்தில் உள்ளனர். இராணுவ மயமாக்கலின் கீழ் தமிழ் இனக் கலப்பு நிகழ்கிறது. கட்டாயப் படுத்தப்பட்டு தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்படுகிறார்கள். தமிழ்ச் சமூகம் ஒரு திட்டமிட்ட இனஅழிவை எதிர்நோக்கியுள்ளது. இதன் ஒரு நீட்சியாக தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாகவே சீர்குலைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை முடக்கப்பட்டுள்ளது. கொள்ளைகளும் கொலைகளும் மலிந்துள்ளன. தமிழர்களைக் கொண்டே தமிழர்களை அழிக்கும் கைங்கரியம் கண்முன்னே நிகழ்கிறது. மேய்ப்பரில்லாத மந்தைகள் போல் நாதியற்றுப் போயுள்ளது ஒரு வரலாற்றுப் பெருமைமிகு இனம்.

miss-88
இந்நிலையில் நரேந்திர மோடி தலையிலான பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவில் ஆட்சி பீடமேறியுள்ளது. காலங்காலமாக இந்தியாவின் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை என்பது ஈழத் தமிழரைப் பகடையாக்கி தமிழரை நசித்தே இருந்து வந்துள்ளது. எனினும் நாம் பிராந்திய மற்றும் மேற்குலக அரசியலைவிட்டு விலகிச் செல்ல முடியாதுள்ளது.

2009 மேயிலிருந்து தமிழர் தாயகத்தில் நிகழும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை (Structural Genocide) யுத்தத்தின் போது காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு இழைத்த அநீதியை‚ தமிழன அழிப்புக்கு உடந்தையாக காங்கிரஸ் அரசு இருந்தமையை இராசதந்திர மொழியில் வெற்றிப் பெருமிதத்தில் இருக்கும் மோடியிடம் எடுத்துச் சொல்லவல்ல தமிழ்த் தலைமையொன்று தமிழர்களுக்கு வேண்டும். தமிழர்களின் அரசியல் அபிலாசையை எடுத்துக் கூறி தமிழின அழிப்பைபைத் தடுத்து நிறுத்த உதவுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தவல்ல தமிழ்த் தலைமையே தமிழர்களுக்கு வேண்டும்.

உலகில் உள்ள தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தாயகம் தமிழகம் புலம் என அனைவரையும் ஒன்றுபடுத்தி தமிழர்களின் அரசியல் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கும் அப்பால் ஈழத்தில் நிகழும் தமிழின அழிப்பை உடன் தடுத்து நிறுத்த உலகத் தமிழர்களை இணைக்கும் அமைப்பு ஒன்று விரைந்து உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் தமிழர்களுக்கு ஒரு அரசியலே தேவையில்லாத அளவுக்கு தமிழினம் பண்பாடு மற்றும் கலாசார அழிவை எதிர்கொண்டுள்ளது. தமிழ் நிலம் அபகரிக்கப்பட்டு தமிழ் அடையாளம் அழிக்கப்பபட்டு வருகிறது.

தாயக மற்றும் புலத் தமிழர்களால் நன்கு மதிக்கப்படுபவரும் ஈழத் தமிழர் தொடர்பில் உறுதியான கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்தி வருபவருமான வை.கோபாலசாமியூடாக ஈழத் தமிழர்களின் புதிய பிரதிநிதிகள் பிரதமர் மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வரையும் இவ்விடத்தில் புறந்தள்ளாது இணைத்துச் செல்லவேண்டும்.

இன்று இந்தியாவில் உள்ள ஆட்சியாளர் எவருக்கும் ஏன் தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்களுக்கும் ஈழத்தமிழரின் இன்றைய அழிவு நிலையோ தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கையோ அதற்கான காரணங்களோ தெரியாது!

எவ்வாறு ஐ.நா.தீர்மானத்தை தமக்கு சாதகமாக்க தமிழர்கள் முயல்கின்றனரோ அதைவிடவும் புதிய இந்திய அரசை இராசதந்திர ரீதியில் அணுகவேண்டியது அவசியமானது.

தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்த குமாரவடிவேல் குருபரன்‚ தமிழ்த்தேசிய முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்‚ வண. அருட்தந்தை இமானுவேல் அடிகள்‚ மே 17 இயக்க திருமுருகன் காந்தி‚ தமிழருவி மணியன்‚ தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழகம்‚ ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலைமறைகாய இருக்கும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து ஈழத் தமிழ் அரசியல் குழுவை உருவாக்க முயல வேண்டும். இக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் மோடியை விரைந்து சந்திக்க வேண்டும்.

உலகத் தமிழினம் இதைனைச் செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை சனாதிபதியின் பிரதிநிதிகளான ஆங்கிலம் தெரிந்த தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகிந்தவின் காலடியில் கொண்டு சேர்க்கும் கைங்கரியத் திட்டத்திற்கு உதவுமாறு இந்தியக் காங்கிரஸின் கொள்கையை மோடிக்கு எடுத்துரைப்பார்கள்!

யாரிதை முன்னெடுப்பர்? நிர்மானுசன்‚ நிராஜ்டேவிட்‚ ஜெயச்சிந்திரன்‚ இதயச்சந்திரன்‚ நடராஜா குருபரன்‚ பரணி கிருஷ்ணரஜனி‚ சரிநிகர் சிவகுமார்‚ எஸ் சிவதாசன் முதலான ஊடகப் பணியாளர்கள் தமது பத்திரிகைப் பணிக்கு அப்பால் தமது வரலாற்றுக் கடமையை மறக்கலாகாது.

ஈழம் ஈ நியூஸ் இற்காக யாதவன் நந்தகுமாரன்.