thiyaguஇலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தமது ஆதரவாளர்கள் 15 பேருடன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தியாகு நேற்று மாலை முதல் தமது ஆதரவாளர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தியாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.முன்னதாக மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தியாகு அனுமதி கோரினார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு தியாகு அனுமதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தோழர் தியாகு.

இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளூர் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தேன். இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். எனவே எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த மைலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர், உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். காலவரையற்ற உண்ணாவிரதம் என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதிக்காத வண்ணம், உண்ணாவிரதம் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து போலீசார் முடிவு செய்யவேண்டும்.

எனவே உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.அதேநேரம், மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் கூறுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

மனுதாரர் உண்ணாவிரத போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். தன்னுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரத்தை போலீசாரிடம் கொடுக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும்போது, அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு வந்தால், அவர்கள் வருவதற்கு முன்பே போலீசாரிடம் முன் அனுமதியை பெறவேண்டும்.மனுதாரர் உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொள்வது குறித்து, தேவையான நிபந்தனைகளை போலீசார் விதிக்கலாம். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.