அறிக்கை – ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது

0
668

seeman-09ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் அவ்வாறு அனுப்பி வைத்த பல அகதிகள் இன்று வரை அங்கு வாழ இடமின்றியும், வழியின்றியும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினர், அவர்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு, இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், வாழ இடமின்றி காடுகளிலும், அவர்களுக்கு வாழ காணியற்ற மற்ற பல இடங்களிலும் சிங்கள அரசால் குடியமர்த்தப்படுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தமிழர்கள் பெருமளவில் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் மட்டும் சற்றெறக்குறைய 2 இலட்சம் சிங்கள இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டு, சமூக வாழ்க்கையே இல்லாத ஒரு நிலை அங்கு நிலவுகிறது. இராணுவத்தின் ஒடுக்குமுறைக்குள் சிக்கி, தமிழ் மக்கள் மூச்சுத் திணறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இங்கு வாழும் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.

குறிப்பாக, முன்னாள் போராளிகள் என்ற ஐயத்தின் பேரிலும், இலங்கைக்கு மண்ணெண்ணெய், இரத்தம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றுகளின் பேரிலும் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கும் க்யூ பிரிவு காவல் துறை, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இது ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தங்கள் சொந்த நாட்டில் தங்களுடைய உயிருக்கும், உடமைக்கும், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதென்று, மற்றொரு நாட்டில் தஞ்சமடையும் எவரையும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களின் நாட்டிற்கு அனுப்பக் கூடாது (நான் ரீபவுல்மெண்ட்) என்று ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனம் கூறுகிறது.

உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த பிரகடனத்தை இந்திய அரசு இதுநாள் வரை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் காரணத்தினால், ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைத்தால் அவர்கள் கொல்லப்படுவது நிச்சயம். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் முடிவில் சரண்டைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளின் நிலை என்ன ஆனது என்று இன்று வரை தெரியாத நிலையில், இங்கு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்புவது, அவர்களை மீண்டும் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதாகும்.

எனவே இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அகதிகளாய் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும், ராஜபக்சாவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிறப்பான பல தீர்மானங்களை தானே முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர், இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கேயே வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் எவரையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரிலிருந்து நாம் உணர்ந்து வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாகத்தான், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக இருந்து பின்விடுதலையாகி, தற்போது தாம்பரத்தில் வசித்து வரும் திரு. செந்தூரன், தற்போது திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ஈழநேரு, சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள திரு. சவுந்தரராஜன் ஆகிய மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்துகின்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையிலிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றதுதான்; அவர்களது உயிருக்கு தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.

செந்தூரன் உள்ளிட்ட இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக் குற்றங்களிலும் இங்கு ஈடுபடவில்லை. தம்மை பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன.

திபெத், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில் பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்பு – கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இந்திய அரசு இம்மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோரிக்கையை முன்னேடுத்து போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும்!

இவண்,

பெ.மணியரசன்

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.