போப் ஆண்டவர் பிரான்சிசு மகிந்த இறாசபக்சவால் இனவழிப்புச் செய்துவரும் சிறிலங்காவுக்கு எதிர்வரும் சனவரி 2015 இல் பயணம் செல்லவுள்ளார் என்னும் அறிவுப்பு ஒரு சிறிய விடயமல்ல. அது, அண்மைக்கால ஏகாதிபத்தியத்தால், இனப்படுகொலை மூலமான அரச பரீட்சார்த்த நடைமுறை ஊடாகப் பெறப்பட்ட தற்காலிக வெற்றிக்கு ஒரு ‘ஆன்மீக மகுட ஆசீர்வாதம்’ வழங்குவதாக அமைந்துள்ளது.

Pope Francis
இந்த யோசனை மூலம் கருதக்கூடியது என்னவென்றால், இனப்படுகொலை முடிந்தகையோடு ஐக்கிய இலங்கைக்குள் ‘நல்லிணக்கம்’ என்ற விடயம் அமெரிக்க அரச திணைக்களத்தால் 2009 இல் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கள இராணுவமயப்படுத்தல், சிங்களக் குடியேற்றத்தை நிறுவுதல், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொள்தல் ஆகிய வழிமுறைகள் ஊடாக ஈழத் தமிழர்களின் தேசியத்தை நிர்மூலமாக்கிவருவது இன்று வெளிப்படையான சான்றாக உள்ளது. இனி ‘நல்லிணக்கம்’ என்ற பதாகையைத் தாங்கி இலங்கைத் தீவைச் சுற்றி வலம்வரப்போகும் போப்பாண்டவரின் பயணமானது இந்த (இனவழிப்பு) நடைமுறையைத் தடுத்துநிறுத்தாமல், அந்த நடைமுறை மேலும் தொடர்வதை உறுதிசெய்வதாகவே அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

சனவரி 2015 இல் மேற்கொள்ளவுள்ள போப்பரசின் உத்தேசப் பயணமானது, கடந்த மார்ச்சு 2014 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட வெளிப்பூச்சுத் தீர்மானத்தின் ஒளியில் பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த விடயம் மீண்டும் மார்ச்சு 2015 இல் விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளது. போப்பரசரின் பயணம் அடுத்த ஆண்டுக்கான ஒரு காய்நகர்த்தலாக அமையவுள்ள அதேவேளை, என்னதான் இந்த ஆண்டுக்கான சிறு (போர்க்குற்ற) விசாரணையைப் பட்டியலிட்டிருந்தாலும் போப்பரசரின் பயணம் குறித்த அறிவிப்பு விசாரணை என்பதன் தாக்கத்தைக் குறைக்கும்.

வேண்டுமென்று முற்கூட்டியே அதன் ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தின் வடிவமானது, இராணுவமயப்படுத்தல் என்னும் சொற்பதம் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை அத்துடன், இனவழிப்பால் பாதிக்கப்பட்ட தேசிய இனம் என்பதை வலிந்து மதச் சிறுபான்மையினர் எனத் திரிபுபடுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளது; அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவான வாக்குகள், எதிரான வாக்குகள், வாக்களிக்காமல் நடுநிலை வகித்தல், மேலும் மிக முக்கியமாக புதுடில்லி வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தமை – இவை அனைத்தும் ஒரே ஆட்டத்தின் பகுதிகளே ஆகும்.

உலக ஒழுங்குகளின் ஆட்டமானது ஏற்கெனவே அதன் முகவராக இயங்கிவந்த, தொடர்ந்து இயங்கிவருகின்ற இறாசபக்ச ஆட்சியையும் இனவழிப்பு சிறிலங்கா அரசாங்கத்தையும் என்ன விலைகொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதிலே அதன் நகர்வுகள் அமைகின்றன் அவ்வாறு செய்வதன் மூலம் இனவழிப்பு ஊடாக இராணுவமயமாக்கி, சிறிய நாடுகளை நிர்மூலமாக்கும் அதன் பரீட்சார்த்த உலகப் பொறிமுறையானது, உலக இராசதந்திரத்தால் நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் கலையாலும் ; (statecraft) மறைமுக நவீனப் புலனாய்வு வழிமுறைகளின் உத்தியாலும் (tradecraft) மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடைமுறையானது வெற்றிபெற்ற ஒன்றாக அமையும்.

சிறிலங்காவுக்கான பாப்பரசரின் உத்தேசப் பயணமும் இந்த நடைமுறையின் அடுத்தடுத்த நகர்வுகளின் தொடர்ச்சியாகவே அமைகிறது. வன்னிப் போர் இனப்படுகொலையாக உக்கிரமடைந்து கொண்டிருந்தபோது அதுகுறித்து வத்திக்கான் ஒரு விரல்கூட உயர்த்தியிருக்கவில்லை. மாறாகப் போருக்குப் பின்னர் வத்திக்கான் இறாசபக்சாக்களை வரவேற்று ஆசீர்வதிப்பதாக அமைந்தது. கடந்த நவம்பரில் போப்பரசர் பிரான்சிசு கோத்தபாய இறாசபக்சவை வத்திக்கானுக்கு அழைத்திருந்தது மிக அண்மையான நிகழ்வாகும்.

இந்துத்துவ பி.ஜெ.பி. இறாசபக்சவை புதிய இந்தியப் பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள அழைத்தமையும் சிறிலங்காவுக்கான தனது பயணம் குறித்த போப்பரசரின் அறிவிப்பும் ஒரே நாளில் நடந்திருப்பது வெறுமனே ஒன்றும் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல.

மிகப்பெரும் கொள்கைத் திட்டமிடலாளர்கள் சிறிலங்காவின் விருப்புக்கு ஏற்றவாறு ஈழத் தமிழ்த் தேசிய இனத்தைப் பலிக்கடாவாக்கி ஏகாதிபத்தியத்தின் உலக இயங்கியலை வழிப்படுத்தி வருவதால், சிங்களக் கத்தோலிக்கத் திருச்சபையினரும் அரசின் இனப்படுகொலை நகர்வுக்கு விட்டுக்கொடுத்து இலங்கைத் தீவில் உள்ளக ரீதியாக அரசை இனப்படுகொலை ஒன்றுக்கு இட்டுச் செல்வதில் பெரும் பங்காற்றி இருப்பதுடன், அரசை சர்வதேச அரங்கில் சரியவிடாது முண்டுகொடுத்து நிக்கவும் பாடுபட்டுவருகின்றனர்.

வத்திக்கான் கருதினல் மல்கோம் றஞ்சித் அவர்கள், இறாசபக்சவையும் சிங்கள அரசின் இனப்படுகொலைக் குற்றங்களையும் அத்துடன், தமிழரின் நிலங்களை கையகப்படுத்துகின்ற சிறிலங்காப் படையினருடன் தான் கொண்டுள்ள தொடர்புகளையும் ( http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35913 ) மறைத்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கவசவரிசையாகச் செயற்பட்டுவருவது நன்கு தெரிந்த விடயமாகும்.

சிங்களக் கத்தோலிக்கத் திருச்சபையானது ஈழத் தமிழர்களின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் முன்னோடியாக இருந்துவருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைத் தீவின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க மதத்தினரை சிங்களக் கத்தோலிக்கர்களாக மொழி மாற்றுவதில் அது உடந்தையாக இருந்துவந்துள்ளது. தீவின் அதே பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிங்களவர்கள் செய்ததைப் போன்று தமது மொழியை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை.

மொழி மாற்றத்துக்கு உட்பட்டு வந்த மேற்கு மற்றும் வடமேற்கைச் சேர்ந்த ஈழத் தமிழ் சமூகங்களுள் பெரும் எண்ணிக்கையிலானோர் கரையோரக் கிராமிய மக்களாவர், அத்துடன் அந்த மக்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த கரையோரச் சமூகங்களோடு பல நூற்றாண்டுகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டவர்காளக இருந்துவந்துள்ளனர்.

முதன்மையாக இந்த மொழிமாற்றத்தை அடுத்தே வடகிழக்கில் வடமேற்குக் கரையோரச் சமூகங்களின் பருவகால மீன்பிடித் தொழில் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. தவிரவும், குடிபெயர்ந்த மீனவர்களின் தேவைகளைக் காரணமாகக் கொண்டு சிங்களக் கத்தோலிக்கத் திருச்சபை சிங்களத் திருச்சபைகளைக் கட்டத்தொடங்கி, குறிப்பாகக் கிழக்கில் நிரந்தரக் குடியேற்றங்களையும் நிறுவியது.

சிங்களமயமாக்கல் என்பது சிங்களப் பௌத்தமதம் மற்றும் சிங்களக் கத்தோலிக்க மதம் ஆகிய இரண்டினதும் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்துவருகிறது. அது இவ்வாறிருக்கையில், தாயக நிலப்பரப்பு, இறையாண்மை மற்றும் இனவழிப்பால் பாதிக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்காமல், சிங்கள ஆயர்களால் பின்னிலை வகிக்கப்படும் ‘நல்லிணக்கம்’ எனப்படும் பரீட்சார்த்த நடைமுறைக்கு தற்போது போப்பரசர் தனது கனதியைக் கொடுத்து விளம்பரப்படுத்தப் போவதானது, ‘இராணுவ மற்றும் தொல்பொருள்’ முதலான சிங்கள பௌத்தமயமாக்கலில் இருந்து அடிப்படையில் மாற்றமிருக்கப் போவதில்லை.

வரலாற்று மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த போப்பரசருக்கு எப்படிப் பதிலளிப்பது என்பதில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஈழத் தமிழ் ஆயர்களுக்கு இது முகத்தில் ‘அசிட்’ வீசுவதுபோன்ற சோதனையாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழ் இனத்தின் அவல நிலையை விளக்கி, வத்திக்கான் கத்தோலிக்கத் திருத்தல நிருவாகத்தின் நீதியின் பார்வையில் புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், தமிழ் நாட்டைச் சேர்ந்த முதன்மைப் பேராயர்கள் இதில் தலையிட்டு போப்பரசரின் இனவழிப்பு சிறிலங்காவுக்கான பயணத்தை தடுத்து நிறுத்தும்வகையில் தங்கள் கடமையைச் செய்ய முன்வரவேண்டும்.

தமிழ்நெற் இணையத்துக்கு நன்றிகள்.

தமிழில் :- கலைவண்ணன்.