ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின் கோட்டையாக 28 வருடங்களாக இருந்த கொக்கிளாய்ப் பிரதேசம் அழிந்து, பேரழிவுகளைச் சுமந்த நிலத்தைப் போலுள்ளது. அழிந்த நிலத்தில் மீள்குடியேறும் மக்களின் கதையோ பெரும் அவலம் மிக்கது.

kokkilay-buddist-temble-copy
கொக்கிளாய்ப் பிரதேசத்தை யாரும் உள்நுழைய முடியாத நிலப்பகுதியாகவே ராணுவம் கட்டுப்பாடு செலுத்துகிறது. அது ஈழத்தின் வடக்கில் முல்லைத் தீவின் கிழக்குப் பக்கமுள்ள பிரதேசம். முல்லைத்தீவில் இருந்து நாயாற்றையும் கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி முதலிய கிராமங்களையும் கடந்து கொக்கிளாய்ப் பிரதேசத்திற்குச் செல்ல முடியும். நாயாற்றைக் கடந்ததும் ராணுவத்தின் முதலாம் சோதனைச்சாவடியை எதிர்கொள்வதுடன் கொக்கிளாயை அடையும்வரை மேலும் இரண்டு சோதனைச்சாவடிகளையும் எதிர்கொள்ள வேண்டும். அங்கு வாழும் மக்கள், அங்குள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் தவிர எவரும் உள்ளே செல்ல முடியாது. தொடர்பின் உச்ச வளர்ச்சி கொண்ட இன்றைய காலத்தில் கொக்கிளாய்ப் பிரதேசத்தின் நிலை திட்டமிட்டு முடக்கப்பட்டிருக்கிறது.

அங்கு இன்று இறுதிச் சோதனைச் சாவடியாக உள்ள இடத்தில் 1994இல் விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். அதில் ராணுவத்தினர் நிலைகுலைந்தார்கள். மேலும் அந்த இடத்தில் நடந்த தாக்குதல் ஒன்றில் 154 பெண் புலிகள் களப்பலியடைந்தார்கள். இப்போது அந்த இடம் பலத்த பாதுகாப்பு கொண்ட ராணுவ முகாமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கொக்கிளாயிற்குச் செல்லும்போது கிராமத்தின் வாசலில் குழந்தைகள் சிலர் மரத்தின் கீழ் தறப்பாளை விரித்துப் படித்துக்கொண்டிருந்தார்கள். முன்பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டடங்களோ கல்வி உபகரணங்களோ ஏதுமில்லை. ஒரு வீதிக்கரையில் அவர்கள் புழுதியில் குளித்தபடி படித்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தைகளை எப்படி இந்த வெளியில் வைத்துப் பாடம் சொல்லிக்கொடுப்பது என்று அந்த முன்பள்ளியின் ஆசிரியர் சொல்லிக்கொண்டிருந்தார்.

கொக்கிளாயில் முகத்துவாரம்தான் முக்கிய இடம். அதை நோக்கிச் செல்லும்போது வீதியின் இரண்டு பக்கங்களிலும் அழிவுகளும் இடையிடையே தறப்பாள் கூடாரங்களும் உள்ளன. அந்தப் பிரதேசத்தில் நின்ற நீண்ட காலப் பயன்தரு மரங்கள் அழிந்துபோக இப்போது அந்த மரங்களின் விதையிலிருந்து முளைத்த இளம் மரங்கள் சில நிற்கின்றன. இடையிடையே நீண்டகாலமாக உக்கி உருக்குலைந்த வீடுகள் கிடக்கின்றன. மீள்குடியேற்றம் நடந்து ஒரு வருட காலமாகிறபோதும் சில நாட்களேயானதுபோலத் தற்காலிகத் தறப்பாள் குடியிருப்புகளாக அந்தப் பகுதி காட்சியளிக்கிறது. 28 வருடங்களாக மக்கள் வாழாத பகுதி என்பதால் காட்டு மரம், செடிகொடிகள் பரவி அடர்ந்துள்ளன. உலக அழிவின் பிறகு நுழையும் உணர்வைத்தான் கொக்கிளாய் தந்துகொண்டிருந்தது. முகத்து வாரத்தை அடைந்தபோதுதான் கொக்கிளாய் வைத்திருக்கும் அதிரும் கதைகளைப் பார்க்க முடிந்தது.

முகத்துவார முகப்பில் புத்தர்சிலை வரவேற்றது. ராணுவத்தினர் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். முகத்துவாரம் மிகக் கலகலப்பாக இருக்கிறது. சிங்கள மக்கள் மீன்பிடித் தொழிலில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளின் முன்பாக முற்றத்திலும் வீட்டு விறாந்தைகளில் பெரும் பாத்திரங்களிலும் மீன்கள் குவியலாகவும் பரப்பப்பட்டும் காய்கின்றன. கடற்கரையில் படகுகளைக் கழுவுவது, மீன்களைப் பறிப்பது, துப்புரவாக்குவது போன்ற பணிகளில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். மின்சாரம், கடைகள், கூட்டுறவுக் கடைகள், கிராம அலுவலர் என்று முழுமையான நிர்வாக உதவிகளுடன் அந்தக் குடி யேற்றத்தில் சிங்கள மக்களின் வாழ்க்கை நகர்கிறது. அவர்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். என்னைப் பார்த்த சிங்களத் தாய் ஒருத்தி “யார் நீ? எங்கு வந்தாய்?” என்றார். அவரது முகத்தில் என்னைப் பார்த்த பதற்றமும் என்மீது கொண்ட சந்தேகமும் தெரிந்தன.

கொக்கிளாயில் தமிழ்ப் பாடசாலையொன்று இருக்கிறது. ஒரே ஒரு ஓலைக் கொட்டகைதான். அதில் 85 மாணவர்கள் படிக்கிறார்கள். காற்றால் மணற் புழுதி பிள்ளைகள்மீது படிந்துகொண்டிருக்கிறது. பாடசாலை என்று அதை எப்படிச் சொல்லுவது? போதிய தளவாடங்கள் இல்லை, பிள்ளைகளுக்குக் கல்வித் துறைசார் அறைகளோ உபகரணங்களோ இல்லை, அதிபர் அலுவலகம் இல்லை, நூலகம் இல்லை. ஒன்றுமே இல்லாத அந்தக் கொட்டிலைத்தான் பாடசாலை என்று சொல்லித் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க விட்டுள்ளார்கள். கொக்கிளாய்த் தமிழ்ப் பாடசாலையின் புராதனக் கட்டடங்கள் அழிந்து அடையாளமே தெரியாமல் இருக்கின்றன. போக்குவரத்தற்ற அந்தப் பிரதேசத்தில் நான்கைந்து கிலோ மீற்றர் தூரங்களைக் கடந்து பிள்ளைகள் வந்து படிக்கிறார்கள். ஈழத்துக் குழந்தைகள் இப்படியான ஒரு காலத்தையும் சூழலையும்தான் தங்கள் கல்வியாகப் படிக்கிறார்கள்.

முகத்துவாரத்தில் சிங்களப் பாட சாலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 15 பிள்ளைகளுக்காக நான்கு இரட்டை மாடிக் கட்டடங்களில் பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. சகல வசதிகளுடனும் அந்தப் பள்ளி இயங்குகிறது. ஒவ்வொரு வகுப்பறையிலும் பிள்ளைகள் ஒரு சிலர் இருந்தனர். சில வகுப்பறைகள் வெறுமையாகவும் இருந்தன. அந்தப் பாடசாலையின் அதிபர் 50 பிள்ளைகள் படிப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் அந்தப் பகுதியின் கிராம சேவகர் 15 பிள்ளைகள் மட்டுமே படிப்பதாகவும் ஏனைய பிள்ளைகள் தெற்கில் சொந்த இடங்களில் படிப்பதாகவும் குறிப்பிட்டார். எதையும் அறியாத இந்தப் பிள்ளைகள் இப்படித்தான் பாகுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள். இப்படித்தான் புறக் கணிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.

கொக்கிளாய் ஈழத் தமிழர்களின் இருதய பூமி. அப்படியிருக்க எப்படி அங்குச் சிங்களவர்கள் வந்து குடியேறினார்கள்? இன்று அதன் ஒரு பகுதி சிங்களக் கிராமமாக மாறியது எப்படி? 1984இல் ஈழப் போராட்டம் வெடித்த காலகட்டத்தில் அங்குக் காலம் காலமாக வாழ்ந்துவந்த மக்களைக் கால அவகாசத்தில் ராணுவத்தினர் விரட்டியடித்தார்கள். அவர்கள் முல்லைத்தீவு முதல் தமிழ்நாட்டு முகாம்கள்வரை அலைந்தார்கள். தமிழ் மக்களை வெளியேற்றிய உடனேயே அங்கு முப்பது சிங்களக் குடும்பங்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டன. தெற்கில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்த அவர்களுக்குப் பல விதமான சலுகைகள் வழங்கப்பட்டுக் குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப்பட்டனர். இன்று அவர்கள் 300 குடும்பங்களாகப் பெருகிவிட்டார்கள். இப்போது முகத்துவாரத்திலுள்ள தமிழர்களின் மீன்பிடி உரிமைகள் எல்லாம் சிங்கள வர்களின் கைகளில் உள்ளன.

வயல் விதைப்பு உரிமைகள், மீன்பிடி உரிமைகள் இவற்றை மீள்குடியேறிய தமிழ் மக்கள் கோரியபோது அவற்றை மீளக் கையளிக்கச் சிங்கள மக்கள் மறுக்கிறார்கள். முப்பது வருடங்களாக அந்த நிலத்தில் சிங்களவர்கள் தொழில் செய்வதால் அந்த நிலத்தில் சிங்களவர்களுக்கும் பங்குள்ளது என்று மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித செனாரத்தன கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் வாழ்நிலம் இன்று சிங்களவர்கள் உழைக்கும் வளமேடாகிவிட்டது. சலுகைகளுக்கான கனவு நிலமாகிவிட்டது. கொக்கிளாய்க் கிராமத்தை அதன் வரலாற்று மற்றும் புவியியல் முக்கியத்துவம் கருதி ஆக்கிரமிக்கும் நோக்கில் நிலைமைகளை அரசு அமைத்துவருகிறது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் மீன்பிடிச் சமூகமே அதிகம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சிறுவன்குளம் ஒரு பக்கமும் கொக்கிளாய் ஆறு மறுபக்கமுமாக உள்ள புளியமுனை மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகிறார்கள். போதிய உபகரணங்கள் இல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

புளியமுனை முழுவதும் தறப்பாள் கூடாரமயமாகவே இருக்கிறது. மணல் வெளியில் தறப்பாள் கூடாரங்களை அமைத்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். மணல் வீதிகள் திருத்தப்படாததால் நிலத்தில் கால் வைத்தாலே புதைகிறது. அடியெடுத்து வைக்க முடியாத அந்தத் தெருக்களில் நடப்பதே பெரிய போராட்டம். 28 வருடங்களாக ஆட்களற்ற அந்தப் பகுதி முழுவதும் மணல் வீதிகளாக உள்ளன. அவற்றைத் திருத்திப் போக்குவரத்திற்கு உதவும்படி மக்கள் விடுத்த கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. ஆனால் நிவாரணங்களை நிறுத்துவதிலும் அரச எம்பிக்களை அழைத்து வந்து பிரச்சாரங்களுக்கு உதவுவதிலும் அதிகாரிகளின் நேரமும் கவனமும் செலவாகின்றன. தற்காலிக வீடுகளோ நிரந்தர வீடுகளோ கட்டிக்கொடுக்கப்படாமல் மணல்வெளியில் தவிக்கும் அந்த மக்களது வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. ஒரு வருடத்தைக் கடந்த நிலையில் அவகாசங்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களைத் தவிக்கவைக்கிறார்கள்.

இப்போது கொக்கிளாயை அதிரப்பண்ணுகிற விடயம் நிலம்தான். முன்பொரு காலத்தில் முப்பது குடும்பங்களாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இப்போது 300ஆகப் பெருகியுள்ள நிலமையில் அவர்களுக்குக் காணிகள் வழங்கப்படவுள்ளன. அரச அதிகாரி ஒருவர் இதை நிறைவேற்றுவதாக வாக்களித்தே பதவி பெற்றிருக்கிறார். சிங்கள மக்களுக்குக் காணியைப் பகிர்ந்தளிப்பேன் என்கிற சத்தியப் பிரமாணத்துடன்தான் அவர் பதவி பெற்றுக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. கொக்கிளாயில் காணி போதாது என்றால் கொக்குத் தொடுவாயிலும் கொடுக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. கொக்குத்தொடு வாயில் இன்னும் ஒரு குடும்பமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. கொக்கிளாயில் வாழ்ந்த மக்கள் முப்பது வருட காலமாக நடந்த யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல்வேறு திசைகளுக்கும் பிரதேசங்களுக்கும் சிதறுண்ட நிலையில் இப்போதுதான் மீளத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னும் திரும்பவில்லை. பலர் திரும்ப இன்னும் அனுமதிக்கப்படவில்லை. தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த காணி நிலங்களைப் பறித்துச் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்கிற செய்தி கேட்டு அந்த மக்கள் துடிக்கிறார்கள்.

ஒரு சிறுமியாக இடம்பெயர்ந்து தமிழ்நாடுவரை சென்று திரும்பிவந்த லூசியா தாங்கள் பிரார்த்தனை செய்து வந்த தேவாலயம்கூட இன்று சிங்களவர்களின் கையில் பறிபோய்விட்டது என்று அந்தத் தேவாலயத்தில் வீழ்ந்து அழுதார். தன் தந்தையின் தொழில் உரிமையையும் இன்று சிங்களவர்கள் கையகப்படுத்திவிட்டார்கள் என்றும் இவற்றை எந்த எல்லைவரை சென்றாகிலும் போராடி மீட்டாக வேண்டும் என்றும் சொன்ன லூசியாவின் முகத்தில் நிலத்தைப் பிரிந்த இருபத்தெட்டு ஆண்டுத் துயரம் தெரிந்தது. யுத்தத்தால் கொக்கிளாயை விட்டுப் பெயர்ந்து சென்றவர்களது காணிகளும் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்ட காணிகளும் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் உள்ளதாக மக்களிடத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கொக்கிளாய்ப் பறவைகள் சரணாலயத்தை அழிப்பது அந்தப் பகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழத்திற்கும் சூழலுக்கும் தீங்கு இழைக்கும் நடவடிக்கை. ஆனால் பறவைகள் சரணாலயத்தின் சில பகுதிகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.

இன்று ஈழத்து நிலமே மிகுந்த ஆபத்தில் உள்ளது. அதிலும் கொக்கிளாய் நிலப்பகுதி அதிக ஆபத்துடன் உள்ளது. இருதய பூமிகளில் ஒன்றான கொக்கிளாயின் அருகில் உள்ள மணலாற்றை இழந்துவிட்டோம். நிலங்களைக் கொள்ளையிடும் நடவடிக்கையை ஆளும் எல்லா அரசுகளும் நுட்பமாக முன்னெடுக்கின்றன. சிங்களக் குடியேற்றம் வாயிலாகத் தமிழர்களின் எண்ணிக்கையைவிடச் சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க இலங்கை அரசும் ராணுவமும் திட்டமிட்டுள்ளன. ராணுவத்தின் உச்சகட்டமான கட்டுப்பாடு செலுத்தப்படும் இந்தப் பகுதி ஊடகங்களாலும் தமிழ் அரசியல் பிரதி நிதிகளாலும் கண்டுகொள்ளப்படாத நிலையிலிருப்பது இந்தப் பகுதியை ஆக்கிரமிக்கவும் வாழுரிமையைப் பறிக்கவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இன்னும் உந்துதலை அளித்துள்ளது. இழக்கும் நிலையில் உள்ள கொக்கிளாய் நிலத்திற்கு ஏற்பட்ட ஆபத்து என்பது ஒட்டுமொத்த ஈழ நிலத்திற்கும் தமிழ் இனத்திற்கும் ஆபத்தை உரு வாக்கப்போகிறது.

kalachuvadu.com