ஈழம், தமிழர்களுக்குச் சொந்தமான நாடு: சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

0
657

prof-potcoஎப்படி தமிழகம் தமிழர்களுக்குச் சொந்தமானதோ அப்படியே ஈழம் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இந்தியாவின் மூத்த மொழியியல் மற்றும் ஆய்வுப் பேராசிரியருமான பொற்கோ ஈழத்தில் மீண்டும் எழுச்சி ஏற்படும் என்றும் பேசியுள்ளார்.

சென்னையில் தமிழ் நாடு அரசின் உலகத்தமிராய்ச்சி நிறுவனம் ‘அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம்’ என்ற மாநாட்டை அண்மையில் நடத்தியது. இந்த மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு கொண்டு பேருரை ஆற்றிய பொழுதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்:

ஈழத்தில் மீண்டும் எழுச்சி வெடிக்கும். ஏனெனன்றால் அது உயிருடைய தன்மை. ஆனால் எப்படி வெடிக்கம்? எப்பொழுது வெடிக்கும்? என்று யாராலும் சொல்ல முடியாது. நான் எழுபதுகளில் இங்கிலாந்தில் இருந்த பொழுது தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஒன்றை எதிர்த்து புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.

ஈழத்தின் அன்று அல்ல அதற்கு முன்பே அமைதிபோய்விட்டது. ஆனால் அங்கு மீண்டும் அமைதி திரும்பும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஈழத் தமிழர்கள் எங்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் எங்களை பல இடங்களில் விஞ்சிய தமிழர்கள்.

தமிழகத்திலிருந்து தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களினால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், உட்பட பல நாடுகளில் தமிழகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசிக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழ் மக்கள் ஈழத்தினை பூர்வீகமாக் கொண்டவர்கள். அவர்கள் மற்றைய தமிழர்களைப்போல இல்லை.

அவர்களிடம் தனித்துவமான பண்பாடு பேச்சு நடை, இலக்கிய நடை என்பன உள்ளன. எப்படி தமிழகம் தமிழர்களுக்கு சொந்தமானதோ அப்படியே ஈழமும் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான நாடு. தமிழகத்திற்கு ஈடாகவும் சில இடங்களில் தமிழகத்தை விஞ்சியும் ஈழம் விளங்குகிறது என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.

தமிழில் மருத்துவதுறையை அறிமுகப்படுத்தியது ஈழம்தான். அயல்நாட்டு தமிழ் இலக்கியம் என்ற வகைப்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர் மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த தனிநாயகம் அடிகளார்தான். அவர் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழக முதல் பட்டதாரி மாணவன் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவரும் ஈழத்தவரே.

சங்க காலத்தில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற கவிஞர் கவிதைகள் பாடியுள்ளார். ஈழத்திற்கு மிகவும் உறுதியான நெடிய வரலாறு உண்டு. வரலாற்றில் ஈழமும் தமிழகமும் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார் பேராசிரியர் பொற்கோ.

ஆய்வில் முன்னணி வகித்த ஈழ இலக்கியங்கள்!

தமிழக அரசின் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் நடத்திய அயல் நாட்டுத் தமிழ் இலகக்கியங்கள் என்ற மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், சீனா உட்பட பல அயல் நாட்டு இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் ஈழத்து இலக்கியங்களே முன்னணி வகித்தது.

ஈழத்தின் போர்க்கால இலக்கியங்கள் குறித்து பல ஆய்வாளர்கள் கட்டுரைகளை படித்திருந்தனர், ஈழத்து நாட்டுப்புறபாடல்கள், ஈழ நவீன இலக்கியம், ஈழத்து நாவல்கள், ஈழத்து மலையக இலக்கியம், ஈழப்போருக்குப் பிந்தைய கவிதைகள், ஈழப் பெண்கவிதைகள், ஈழத் தமிழ் அகராதிகள், ஈழ அரங்கச் செயற்பாடுகள் முதலிய விரிவான ஆய்வுகள் பலவும் நிகழ்த்தப்பட்டன.

விபுலாநந்தர் ஆய்வுகள், முருகையன் கவிதைகள், காசி ஆனந்தன் கவிதைகள், சேரன் கட்டுரைகள், தீபச்செல்வன் கவிதைகள், உதயனன் நாவல்கள், நெதர்லாந்து கலையரசனின் அனுபவங்கள் முதலிய விடயங்களும் தனி ஆய்வுகளாக நிகழ்த்தப்பட்டிருந்தன.

வெளிச்சவீடு.கொம்