கண்டி மாவட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவராக பணியாற்றிய சண். பிரபாகரன், தற்போது அரசியல்குழுவில் உள்வாங்கப்பட்டு கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு புதிய நியமனங்களையும்,கட்சி தலைவர் மனோ கணேசனின் பிரேரணைகளின்படி நேற்று மாலை கொழும்பில் கூடிய அரசியல் குழு ஏகமனதாக வழங்கியது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

dpf
2013ம் வருடம் நடைபெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட உறுப்பினராக வேலு குமார் தெரிவு செய்யப்பட்டிருந்தார். கொழும்பு பல்கலைக்கழக கணக்கியல் பட்டதாரியான, 42 வயது நிரம்பிய வேலு குமார் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், கண்டி மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார். தற்சமயம் இவர் கட்சியின் உபதலைவராக அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த சண். பிரபாகரன், தற்சமயம் அரசியல்குழுவினால் உள்வாங்கப்பட்டு, கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயது இளைஞரான சண்முகநாதன் பிரபாகரன் வணிக நிர்வாகமாணி (பிபிஏ) பட்டதாரி ஆவார். கட்சியின் கிளைக்குழுக்களை அமைக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக கட்சி கிளை அமைப்பு குழுவின் உறுபினர்களாக பி. சுதர்ஷன் மற்றும் பாலா சுரேஷ் ஆகியோரும் அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.