உலகின் தனிப்பெரும் வல்லரசாக அமெரிக்கா உயர்ந்து நிற்பதற்காகான காரணம் என்ன?

0
714

JAPAN-US-MILITARY-EXERCISEஉலகின் வல்லமை பொருந்திய நாடுகளின் (Superpower) அணியில் (Elite club) இடம்பெறவேண்டுமாயின் அந்த நாட்டிடம் குறைந்த பட்சம் விமானந்தாங்கி கப்பல் இருக்க வேண்டும்.

உக்கிரைன் நாட்டின் பழைய விமானந்தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்த சீனா அதனை நவீனமயப்படுத்தி தனது கடற்படையுடன் இணைத்து ஆழ்கடல் (blue water navy) நடவடிக்கையில் தனது கடற்படையையும் இணைத்துள்ளது. ஆழ்கடல் நடவடிக்கை என்பது கரையில் உள்ள தமது தளங்களில் இருந்து பல ஆயிரம் கடல் மைல்களுக்கு அப்பால் நடவடிக்கையில் ஈடுபடுவது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அடுத்ததாக இந்தியா ரஸ்யாவுடன் இணைந்து தயாரித்த விமானந்தாங்கி கப்பலை கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் இறக்கியிருந்தது. எனினும் அது 2020 ஆம் ஆண்டே நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிக்கப்படுகின்றது.

இரண்டாம் உலகப்போரில் சரணடைந்த யப்பானுக்கு தாக்குதல் ஆயுதம் தயாரிக்கும் உரிமை கிடையாது, எனினும் தற்காப்பு ஆயுதங்களை தயாரிக்கலாம் அல்லது வைத்திருக்கலாம். அதன் வசம் உலங்குவானூர்தி தரையிறங்கும் நாசகாரிக் கப்பல் ஒன்று (Flat-topped helicopter destroyer) உள்ளது. எனினும் அதனை விமானந்தாங்கி கப்பலாகவே சீனா பார்க்கின்றது.

தயாரிப்பது மற்றும் பராமரிப்பது என்பவை கடினமாகவும், செலவுமிக்கதாகவும் இருக்கும் போதும் விமானந்தாங்கி கப்பலே ஒரு நாட்டின் படைபலத்தின் முக்கிய முதுகெலும்பாக இன்றும் உள்ளது.

1944 ஆம் ஆண்டு ஹவாய் தீவில் அமைந்திருந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை தளமான பேள் ஹாபர் மீது யப்பான் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து அமெரிக்காவின் மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் தப்பியதே இரண்டாம் உலகப்போரின் தலைவிதியையே மாற்றி அமைத்திருந்தது.

தனது 21 கப்பல்களை அமெரிக்க இழந்தபோதும், அதன் வசம் இருந்த 7 விமானந்தாங்கி கப்பல்களில் மூன்று தப்பியது யப்பானின் தாக்குதலை தோல்வியடையவே செய்திருந்தது. ஆறு விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் பல நூறு விமானங்களை ஒருங்கிணைத்து யப்பான் மேற்கொண்ட தாக்குதலின் முக்கிய இலக்காக அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்களே இருந்தன.

தமது இலக்குகள் கிடைக்கவில்லை அவற்றை கடலில் தேடி அழிக்கவா என யப்பானின் வான்படை தளபதி தனது தாக்குதல் கட்டளை அதிகாரியிடம் கேட்டபோதும், அதற்கு அவர் அனுமதி வழங்க மறுத்தது போரின் போக்கை அன்று மாற்றிவிட்டது.

மேற்குலக நாடுகளின் சக்கதி வாய்ந்த ஆயுதமாக இருந்துவரும் இந்த கப்பல்கள் தற்போது ஆசிய பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியில் இணைந்துள்ளது. சீனா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக தனது படை பலத்தை காண்பிக்க யப்பான் முயல்கின்றது. பாகிஸ்த்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக தனது படை பலத்தை காண்பிக்க இந்தியா முயல்கின்றது.

உலகம் முழவதும் 20 விமானந்தாங்கிக் கப்பல்கள் பாவனையில் உள்ளன. அவற்றில் 10 கப்பல்கள் அமெரிக்கா வசம் உள்ளது. பிரித்தானியா கட்டிவரும் குயின் எலிசபத் (Queen Elizabeth) எனப்படும் மிகப்பெரும் விமானந்தாங்கி கப்பலுக்கு 5 பில்லியன் பவுண்ஸ்களை அது செலவிட்டுள்ளது.

சீனா தனது கப்பலை சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் களமிறக்கி பலவீனமான ஆசிய நாடுகளை மிரட்டி வருகின்றது. ஆனால் இந்த கப்பல்கள் நீர்மூழ்கி கப்பல், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவகணைகள் மற்றும் தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் தாக்குதலில் இலகுவில் சிக்கக்கூடியவை.

விமானந்தாங்கி கப்பலை பயன்படுத்துவது தொடர்பில் பயிற்சி பெறுவதற்கு நீண்டகாலம் செல்லும் என படைத்துறை ஆய்வாளரும் அமெரிக்காவின் பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் மைக்கேல் கொறொவிச் தனது படைத்துறை நூல் (The Diffusion of Military Power) ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விமானந்தாங்கி கப்பல்களின் போர் என்பது மிக உயர் தொழில்நுட்பம், அதிக செலவு மற்றும் நுட்பமான நெறிப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்டது. மிதக்கும் போர்விமானங்களின் தளத்தை நகர்த்தி, அதனுடன் ஏனைய கப்பல்களை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்துவது என்பது சாதாரண களமுனையில் பல பீரங்கிகளை வரிசையில் வைத்து தாக்குவதில் இருந்து வேறுபட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள ஆயுதங்களில் விமானந்தாங்கி கப்பல்களே மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் என அமெரிக்க கடற்படை போர்க் கலை கல்லூரியின் பேராசிரியர் றொபேட் றுபெல் தெரிவித்துள்ளார். 1949 ஆம் ஆண்டில் இருந்து 1988 ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்க கடற்படை 12,000 போர்விமானங்களையும், 8,500 விமானிகளையும் இழந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது விமானந்தாங்கி கப்பல்களின் போர் முறையின் கடினத்தை காட்டுகின்றது.

தற்போது சீனா 100 விமானிகளை பயிற்றுவித்து வருகின்றது. ஆனால் விமானந்தாங்கி கப்பலின் நகரும் விமான ஓடுபதையில் தரையிறங்கும் விமானங்களை செலுத்தும் விமானிகளை பயிற்றுவிப்பது இலகுவானதல்ல.
China's first aircraft carrier, the Soviet-era Liaoning, entered service last year
இதனிடையே இந்திய மற்றும் சீனாவின் விமானங்தாங்கி கப்பல்கள் அமெரிக்காவின் யு எஸ் நிமிற்ஸ் வகை கப்பல்களுடன் (U.S. Nimitz class ships) ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கே அளவானது. நிமிற்ஸ் கப்பல் 90 விமானங்களைக் கொண்டது.

ஆனால் ஆசிய நாடுகளின் இந்த ஆயுதப்போட்டியில் இருந்து பல மைல் தூரம் முன்நகரும் பணிகளை அமெரிக்கா சத்தமின்றி ஆரம்பித்துவிட்டது. 13 பில்லியக் டொலர்கள் செலவில் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை அது அமைத்துவருகின்றது. ஜெரால்ட் ஆர் போட் (Gerald R. Ford) என்ற இந்த கப்பல் ஒரு நாளில் 220 வான் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடியது. 1,106 அடி நீளம் கொண்ட 4,000 படையினரை காவிச்செல்லும் இந்த கப்பல் எதிரிகளில் ராடாரில் இருந்து தப்பும் உத்தி கொண்டது.

இவை தவிர இதனை ஒத்த மேலும் 3 கப்பல்களை 43 பில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்க கடற்படை கொள்வனவு செய்ய உள்ளது. எதிர்வரும் பல பத்து ஆண்டுகளுக்கு இந்த கப்பல்கள் தான் உலகின் அதி சக்திவாய்ந்த ஆயதங்களாக இருக்கும்.

வேர்ஜீனியாவில் உள்ள கப்பல் கட்டும் இடத்தில் 2007 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட உலகின் இந்த முதன்மை ஆயுதம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு பரீட்சிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைக்கப்படும். அதி நவீன ரடார்கள் மற்றும் ஆயுத தொழில்நுட்பங்களை பொருத்துவதற்காகவே அதன் தயாரிப்பு தாமதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் தனது வல்லமையை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா எப்போதும் மிகச்சிறந்த ஆயுதங்களைத் தேடியே ஓடுவதுண்டு. இரண்டாம் உலகப்போரை வெல்வதற்கும் அது மிகச்சிறந்த ஆயுதத்தை தேடி தனது விஞ்ஞானிகளை முடுக்கிவிட்டிருந்தது.

அப்போது தான் அயன்ரீன் அணுவின் திணிவை சக்தியாக மாற்றமுடியும் என்ற கொள்ளைகை அடங்கிய கடிதத்தை அன்றைய அமெரிக்க அதிபரிடம் கையளித்திருந்தார். கடிதத்தில் வெறும் எழுத்துக்களாக இருந்த அந்த குறியிட்டுக்கு செயல்வடிவம் கொடுக்க 150,000 விஞ்ஞானிகளை உடனடியாக களமிறக்கிய அமெரிக்க ஒரு சில வருடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருந்தது.

தற்போதும் நடப்பதும் அதுவே ஆசிய நாடுகள் விமானந்தாங்கி கப்பல்களை நோக்கி ஓடும் போது அவற்றை எல்லாம் முறியடிக்கும் புதிய ஆயுதத்தை அமெரிக்கா தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. எனவே ஆயுத பலத்தில் ஏனைய நாடுகள் தன்னை நெருங்க முடியாத தூரத்தில் அமெரிக்கா தன்னை வைத்துள்ளது. உலகில் தனிப்பெரும் வல்லரசாக அது உயர்ந்து நிற்பதற்காகான காரணமும் அதன் படை வளம் தான்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
சமகால படைத்துறை ஆய்வு (07.10.2013)
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி.