தலைவர் பிரபாகரனை எப்படி விளிப்பது என்பதில் ஒரு சர்ச்சை நடக்கிறது. இது தேவையற்ற விவாதம் என்ற போதிலும் ஒரு தெளிவிற்காகவும் அவரை விளிப்பதிலுள்ள அரசியல் பெறுமதியை விளக்கவும் இந்த பதிவு.

tamilmakkalkur
“தலைவர் பிரபாகரன்” என்று இருந்த பதவி நிலையை போராட்டத்தை பன்முகப்படுத்தும் நோக்குடனும் அதற்கான அர்த்த செறிவின் ஆழத்தை உணர்ந்தும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புலிகள் ‘தமிழீழ தேசியத்தலைவர்’ என்ற பதத்தை புழக்கத்தில் கொண்டுவந்தனர்.

பிற்பாடு புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் எல்லைகள் கடந்த தமிழின தலைவராக உருவெடுத்திருக்கும் அவரது பரிமாணத்தின் வீச்சை உணர்நத அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், வரலாற்றாசிரியர்கள் அவரை ‘தமிழின தேசியத்தலைவர்’ என்று விளித்தது சமகால வரலாறு.

2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும், அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும், அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது.

அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.

எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் தவறானது.

அவர் உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தலைவராக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.

எனவே நாம் வேறெந்த அடைமொழிகளையும் தவிர்த்து குறிப்பிட்ட இன அடையாளத்திற்குள் குறுக்காமல் பொதுவாக ‘தேசியத்தலைவர்’ என்று விளிப்பதே அரசியல் பெறுமதி மிக்கதென்பதுடன் எமது நீதிக்கான பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலாகவும் இருக்க முடியும்.

ஈழம்ஈநியூஸ்.