தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதற் தற்கொடையாளன் சிவகுமாரன் நினைவாகத்தான் தமிழரசு (புலிகள்) அவர் வீரச்சாவடைந்த ஆனி 5ம் நாளை மாணவர் எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வந்தார்கள்.

ஆனி 5 என்பது உலக சுற்றுச்சூழல் தினம். மாணவர் தினத்தை அதே நாளில் கொண்டாடுவதால் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறைந்து மக்களிடம் இயற்கை குறித்த விழிப்புணர்வு குறைகிறதே என்று உணர்ந்த தலைவர் பிரபாகரன் ஆனி 6 ஐ மாணவர் எழுச்சி தினமாக மாற்றி அறிவித்தார்.

இது சாதாரண விடயமல்ல. இயற்கையை நேசிக்கும் ஒரு தலைமைக்கே இது சாத்தியம்.

te-0986
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே..

அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும் சுற்றுசூழலுக்கும்தான் என்பதற்கு இது ஒரு வரலாற்று ஆதாரம்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் மன்னார், புல்மோட்டை, காங்கேசன்துறை, உடபட பல தாயக பிரதேசங்களில் இயற்கைக்கு மாறாக, இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் ஜப்பான் உட்பட பல நாடுகள் வியாபார ஒப்பந்தம் எழுத வந்தபோது மறுபேச்சுக்கிடமின்றி அதை தலைவர் நிராகரித்தது பலருக்கு தெரியாது.

ஒருவேளை மண்ணுக்கு, இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் அந்த ஒப்பந்தங்களில் தலைவர் பிரபாகரன் கையெழுத்திட்டிருந்தால் மேற்குலகத்தின் பார்வையில் அவர் “பயங்கரவாதி” இல்லாமல் போயிருக்கலாம்..

இதைத்தான் இன்றைய நமது ஆய்வாளர்கள், “பிரபாகரனின் தவறு” என்று வாந்தி எடுக்கிறார்கள். இனத்தை மட்டுமல்ல, இயற்கையையும் மாற்றானிடம் அடைவு வைக்க முடியாது.

இது பேராட்டத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வின் இருப்பிற்கே முரணானது. தலைவர் இப்படியெல்லாம் சிந்தித்தன் விளைவுதான், “ஒரு சிறிய இனத்தின் தலைவன் உலக முதலாளித்துவத்திற்கே வேட்டு வைக்கிறானே..” என்று ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து போராட்டத்தை அழித்து முடித்தது.

தமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்..

இந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை தலைவர் உணர்ந்து அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

pulenth
இந்திய இராணுவ முற்றுகை உட்பட அதற்கு பின்னான பல சிங்களப் படையெடுப்பு காலங்களிலும் போராளிகள் வடதமிழீழத்திற்கும் தென் தமிழீழத்திற்கும் இலகுவாக சென்று வரவும் தமது காப்பரண்களை பாதுகாப்பாக அமைத்து கொள்ளவும் வனப்பகுதிக்கும் அங்கு வாழும் வன உயிர்களுக்கும் சேதம் வினைவிப்பதை அறிந்த தலைவர் போராளிகளிடம் ” நீங்கள் பாதையை மாற்றியமையுங்கள், அல்லது எதிரியின் முற்றுகையை உடைத்து போய் வாருங்கள், எந்த காரணம் கொண்டும் வனவளத்தை அழிக்க கூடாது” என்று இறுக்கமாக கட்டளையிட்டதும் பலருக்கு தெரியாது.

விளைவாக போராளிகள் பெரும் ஆயுத தளபாட சுமைகளுடன் நீண்டதூரம் நடந்து பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல இதன் விளைவாக பல தருணங்களில் எதிரிகளை நேரடியாக சந்தித்து மோதி களப்பலியாக வேண்டியும் ஏற்பட்டது.

இன அழிப்பு நோக்கங்களுடன் பேரழிவு ஆயுதங்களுடன் படையெடுத்து தமிழர் தேசத்தை சுற்றி நின்ற சிங்களத்தை எதிர்கொண்டபடியே இயற்கையையும் சுற்றுச்சூழலையும் புலிகள் நேசித்த, பாதுகாத்த கதை இது.

ஆனால் மே 18 இற்கு பிறகு இன்று கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக சிங்களத்தால் தமிழீழத்தின் இயற்கையும் சுற்றுச்சூழலும் தாறுமாறாகக் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

கேட்பதற்கு எந்த நாதியுமில்லை..

“Velupillai Prabhakaran : Being and Nothingness ( May 18 : Before and after..)” என்ற விரைவில் வெளிவர இருக்கும் இறுதி இனஅழிப்பு குறித்த உளவியல் பகுப்பாய்வு நூலில் இயற்கைக்கும் புலிகளுக்குமான உளவியலை ஆய்வு செய்யும் பகுதியில் பெண்ணிய உளவியலாளரும் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி

“புலிகளை ஒரு ஆயுதப் போராட்டமாக சுருக்கிப் பார்ப்பவர்களும், அதற்கும் மேலே சென்று “பயங்கரவாதிகள்” என்று பட்டமளித்திருக்கும் மேற்குலகமும், இறுதி இன அழிபின் போது புலிகள் “சொந்த மக்களையே சுட்டார்கள்” என்று கதையளப்பவர்களும், வன வளங்களையும், வன உயிர்களையும் பாதுகாக்க தமது இராணுவ உத்திகளை மாற்றியதன் விளைவாக எதிரிகளிடம் சிக்கி மாண்ட நூற்றுக்கணக்கான போராளிகள் குறித்து என்ன கதை சொல்லப்போகிறார்கள்.?” என்ற கேள்வியை எழுப்புகிறார்..

உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஐநா விசாரணை பொறிமுறை உறுப்பினர்கள் விபரம் அறிவிக்கப்படவுள்ள இந்த வாரத்தில், தமிழக முதல்வர் “தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு இந்திய பிரதமரிடம் மனு சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த அறம் சார்ந்த கேள்வியை நாம் உலகத்தின் முன்வைக்கிறோம்…

இந்த பதிலில் இருக்கிறது ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் ஒட்டுமொத்த நியாயம்..

ஈழம்ஈநியூஸ்.