‘முதலாளித்துவத்தின் உச்சகட்ட வடிவமே ஏகாதிபத்தியம்’ என்கிறார் லெனின்.

 

china76நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்துவிட்ட ஒருசில மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் ‘வங்கி மூலதனம்’ ஆகும்.
நூறு வருடங்களிற்கு முன்பாக லெனினால் வைக்கப்பட்ட இவ் எதிர்வு கூறல், இன்று நிஜமாவதைக் காணலாம்.

 

காலனியாதிக்ககால நிலப்பங்கீடுகள், அதன் தொடர்ச்சியான நிதி மூலதன உருவாக்கம் பற்றி இங்கு பேசப்போவதில்லை.

 

மாறாக, முதலாளித்துவ கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் இருக்கும் அதிகாரம்சார் வங்கிகளுக்கும், ஏகபோக உலக வங்கிகளிற்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்து பேசும் அதேவேளை, ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கும் , திறைசேரிக்குமான முரண்கள் பற்றி பேசப்போகிறோம்.

 

ஒரு நாட்டின் அரசிறைக் கொள்கையை( Fiscal ), நாணய நிதிக்கொள்கையை (Monetary )தீர்மானிக்கும் கட்டமைப்புகளாக மத்திய வங்கி , திறைசேரி மற்றும் தனியார்-அரச வங்கிகளைக் குறிப்பிடலாம்.
பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் இவ்வகையான ஒழுங்கமைப்பே காணப்படுகிறது.

 

வளர்ச்சியுற்ற நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் சுயாதீனமாக இயங்கும் வல்லமை கொண்டவை.
இருப்பினும் இவை, அரசாங்கங்களுக்குப் பதில் கூற வேண்டிய கடப்பாடு உடையவை.
உதாரணமாக, அமெரிக்காவில் காங்கிரஸிற்கும் , பிரித்தானியாவில் நாடாளுமன்ற குழுவிற்கும் நாட்டின் நிதிநிலைமையை எடுத்துக் கூறுகின்றன.

 

அரச வட்டி வீதத்தை, குறிப்பாக வைப்பு வட்டி (Deposit Rate) வீதத்தை நிர்ணயம் செய்யும் முதன்மையான பணியை முன்னெடுக்கும் மத்திய வங்கியானது, நாணயத்தை அச்சிடும் பொறுப்பினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

2008 இற்குப் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்களை அவதானித்தால், இந்த மத்திய வங்கி – திறைசேரி- உள்ளூர் வங்கிகள் மற்றும் பன்னாட்டு வங்கிகளுக்கிடையிலான உறவுநிலை தெளிவாகப் புரியும்.

 

பொருண்மியச் சரிவு ஏற்பட்ட போது, அமெரிக்க மற்றும் மேற்குலகின் வங்கிகள் வங்குரோத்து நிலையை அடைந்து, அரசிடம் கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

 

லெனின் கூறும் ஏகாதிபத்தியத்தை நோக்கிய ‘வங்கி மூலதனம்’, வற்றிப்போனது. உலக நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலர் பெருவீழ்ச்சி கண்டது.

 

18 ட்ரில்லியன் டொலர் மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்ட அமெரிக்கா, அதன் மத்திய வங்கி ( Federal Reserve ) ஊடாக பன்னாட்டு நிதி நிறுவனங்களையும் காப்பாற்றியது. அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing ) என்கிற புதிய முறைமையை புகுத்தி திறைசேரி முறிகளை வாங்கிக் குவித்தது மத்திய வங்கி.
(QE இற்கு இங்கு பயன்படுத்தப்படும் சொல்லாடல் பொருத்தமானதாவென்று தெரியவில்லை. ).

 

இதே உபாயத்தை அல்லது முறைமையை ஜப்பானும், அண்மைக்காலமாக ஐரோப்பிய மத்திய வங்கியும் பயன்படுத்துகின்றன.

 

ஜப்பானின் குரோடாவும், ECB இன் மரியோ டிராக்கியும் தமது அரச வட்டி வீதத்தை பூச்சியமாக வைத்துள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 

மீண்டெழும் அமெரிக்கா சிறிதுசிறிதாக தனது வட்டி வீதத்தை அதிகரிக்கின்றது.

 

ஆனால் உலகின் மூன்றாவது, நான்காவது பொருண்மிய பலவானாக விளங்கும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் வட்டி வீதத்தை உயர்த்த முடியவில்லை.

 

திறைசேரி மட்டுமல்ல, கார்பொரேட்களின் கடன் முறிகளையும் வாங்க வேண்டிய சோகமான நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வந்துள்ளது. இதற்காக ஏறத்தாழ 60 பில்லியன் யூரோக்களை செலவிடுகின்றனர் மரியோ குழுவினர்.

 

திவாலாகும் கடன்பத்திரங்களை, தாம் அச்சடிக்கும் யூரோ நாணயத்தை கொடுத்து வாங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 

உலகப் பொருண்மிய நெருக்கடி வரும்போது, இந்த மத்திய வங்கிகளால் , பன்னாட்டு வங்கிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் காப்பாற்றப்படுகின்றன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

 

இப்போது Fiat Money என்று சொல்லப்படும் நாணயத் தாள்களைவிட, மின்னணு நாணயம் , bitcoin போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவைதவிர அமெரிக்க ட்ரில்லியனியர் என்று கருதப்படும் ரோத்சைல்ட் (Rothschild) குழுவால் ஓரங்கட்டப்பட்ட தங்கம், மறுபடியும் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வந்துவிடுமோ என்கிற கதையாடலும் உலவுகின்றது .

 

‘தங்கப் பாளங்களை இரகசியமாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது சீனா ‘என்கிற செய்தியும் கசிகிறது.

 

இவை உலக பொருளாதார தற்கால நிலைமைகளை ஓரளவு புரியவைக்குமென எண்ணுகிறேன்.

 

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை அவதானிக்கும்போது, சர்வதேச பொருண்மிய உறவுகளின் தாக்கத்தையும் இணைத்தே பார்க்க முடியும்.

 

வரவு- செலவு திட்டப் பற்றாக்குறை, அந்நிய செலாவணிக் கையிருப்பு 6-8 மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாகவிருத்தல், ஏற்றுமதி- இறக்குமதி பற்றாக்குறை அல்லது வர்த்தக பற்றாக்குறை, விநியோகிக்கும் கடன் முறிகள் முதிர்ச்சியடையும் போது அவற்றை மீளப்பெறுவதற்குத் தேவையான நிதி பற்றாக்குறை என்று இலங்கையின் மத்திய வங்கியியும் , அரசாங்கத்தின் திறைசேரியும் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொள்ளல் வேண்டும்.

 

அதேவேளை, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பி.பீ.ஜயசுந்தர காலத்தில் இருந்த மத்திய வங்கிக்கும், அரச திறைசேரிக்குமிடையிலான முறுகல் நிலை இன்றும் தொடர்வதாக அறிய முடிகிறது.

 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த திறைசேரின் பங்கும் முக்கியமானது என்கிற செய்தியை அமெரிக்காவின் ஜெனெட் ஜெலன் மட்டுமல்ல, இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநரும் வலியுறுத்துகின்றனர்.

 

imfஉலக வங்கியின் பொருளியலாளரான கிஷான் அபேகுணவர்தன என்பவர், அண்மையில் வெளியிட்ட இலங்கை குறித்தான ஆய்வறிக்கையில், மத்தியவங்கிக்கும் அரச திறைசேரிக்கும் இடையிலான உறவு குறித்து எச்சரிக்கிறார்.

 

அதாவது இலங்கை மத்திய வங்கிக்கான நாணயநிதிச் சட்டத்தை வரைந்த, அமெரிக்க பெடரல் ரிசெர்வ் அதிகாரியான ஜோன் எக்ஸ்டர் அவர்கள், ‘திறைசேரி உண்டியலை (Treasury Bill) வாங்கும் ஒரு கருவியாக மத்திய வங்கியைப் பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளதாக கிஷான் சுட்டிக் காட்டுகிறார்.

 

இதுவரை காலம் இருந்த திறைசேரியின் அரசிறை ஆதிக்கம், பல நெருக்கடிகளை உருவாக்கியதாக மேலும் சுட்டிக் காட்டுகிறார்.

 

அதற்கு நிதி அமைச்சின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணி என்பதை அம்பலப்படுத்துகிறார் கிஷான்.
நெகிழ்வான பணவீக்கத்தை பேண , மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் ஒருங்கிசைவான போக்கு அவசியம் என்பதே கிஷான் அபேகுணவர்தனாவின் ஆய்வின் முடிவாக அமைகிறது.

 

அண்மையில் கொழும்பில் நடை பெற்ற கருத்தரங்கொன்றில் சிங்கப்பூர் லீ குவான் யூ கல்வி நிலையத்தின் விரிவுரையாளர் ரஷீன் சலீ அவர்கள் பேசும்போது, இதே விவகாரத்தை வேறொரு கோணத்தில் முன்வைத்திருந்தார்.

 

2016 ஜூலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற இந்திரஜித் குமாரசாமி குறித்து சிலாகித்துப் பேசிய ரஷீன், கடந்த 10 ஆண்டுகளாக வரவு-செலவு பற்றாக்குறைக்கு நாணயத்தை அச்சடித்துக் கொடுக்கும் வேலையைத்தான் மத்திய வங்கி செய்து வந்தது எனக் கிண்டலடித்ததோடு, இனியாவது அதன் சுயாதீனத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

பணவீக்கத்தை 2 வீதமாக உயர்த்தப் படாதபாடுபடும் அமெரிக்க பெடரல் ரிசெர்வ் இன் தலைவி ஜெனட் ஜெலன் அம்மையார், வரி அதிகரிப்பினை வெளியிட்ட தினத்தில் நடைபெற்ற ஊடகர் மாநாட்டில், உள்முரண்பாடு ஒன்றினை பூடகமாக வெளிப்படுத்தியிருந்தார்.

 

அதாவது அரசின் வரிக்கொள்கையானது கார்பொரேட்களின் விடயத்தில் நெகிழ்வாக இருந்தால், பற்றாக்குறையை சமாளிப்பது எவ்வாறு ? என்கிற வினாவினை அவர் முன்வைத்தார்.

 

அமெரிக்காவின் கடன் முறிகளை ட்ரில்லியன் டொலர் கணக்கில் வாங்கிக் குவித்திருக்கும் ஜப்பானிற்கும், சீனாவிற்கும், இன்னும் பல நாடுகளிற்கும் கடன்பட்டிருக்கும் அதேவேளை, கார்பொரேட்களின் மீதான வரிகளையும் குறைத்து எவ்வாறு நாட்டை நிர்வகிக்கப்போகிறார் டொனால்ட் டிரம்ப் என்பதுதான் அம்மையாரின் கேள்வி.

 

மேற்குறிப்பிட்ட விடயம் இலங்கைக்கும் சாலப்பொருந்தும்.

 

சீனக் கடன், IMF கடன், நிதி நிறுவனங்களிடம் பட்ட முறிக்கடன், உலக வங்கிக் கடன், உள்நாட்டு வங்கிகளிடம் பெற்ற கடன், மக்கள் சேமிப்புகளில் இருந்து பெற்ற கடன் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

 

ஆகவே இலங்கையில் வங்கி மூலதனம் என்பது, பலதேசிய நிதி நிறுவனங்களிலும், பன்னாட்டு வங்கிகளிலும் முழுமையாகத் தங்கிருக்கும் கடைநிலையிலேயே உள்ளதெனலாம்.

 

இனியென்ன….வாங்கிய கடன்களை மீளச் செலுத்த, துறைமுகங்களைத் தாரை வார்க்கும் நவீன காலனித்துவ போக்குக்கொன்று உருவாகும் போல் தெரிகிறது.

 

சர்வதேச அளவில் இன்னும் மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான பொருளாதார பனிப்போர் முடிவடையவில்லை.

 

இணைவும், விழுங்குதலும் (M & A )பாரிய பலதேசிய நிறுவனங்களின் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் இடைத்தரகாக இருந்தவாறு கோல்மன் சக்ஸ், மோர்கன் ஸ்டான்லி, ஜே.பி.மோர்கன் போன்ற பெரும் முதலீட்டு வங்கிகள் இலாபமீட்டுகின்றன.

 

இந்த வங்கி மூலதன பேராதிக்கம், ஏகாதிபத்திய நிலையை நோக்கியே நகரும் போல் தெரிகிறது.
01.01.2017