ஊடகத்தின் மேலான மிரட்டலும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிலைப்பாடும்

அன்பான தமிழீழமக்களே !

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள் சிங்கள அரசுக்கு சர்வதேச ரீதியில் பல அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு, சனநாயக உரிமை மறுக்கப்பட்டு, ஊடகங்கள், ஊடகவியாளர்கள் மிரட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் போலவே புலம்பெயர் நாடுகளிலும் ஆயுதக்கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் 2012 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களை சிங்களம் பலி எடுத்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம்.

சிறீலங்கா அரசானது எல்லாளன் படை என்கின்ற பெயரில் மக்களைக் கொலை செய்து பல துன்பங்களையும் தந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் அவப்பெயரினை பெற்றுத்தந்தது வரலாறு. அதே போன்ற முறையில் புலம் பெயர் மண்ணில் இந்த அணுகுமுறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாதப்பட்டியலிட்டு விட்டு அதனை உறுதி செய்ய எல்லாளன் படை ஊடாக ஆயுதமிரட்டல் செய்து ஊடக இல்லத்தின் ஆவணங்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடம் கையளிக்கச் சொல்வது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாத அமைப்பாக சர்வதேசரீதியில் காட்ட முற்படுவதாகவே பார்க்கின்றோம்.

நீண்ட காலமாக (1995 ம் ஆண்டு முதல்) ஈழமுரசுப்பத்திரிகையானது உலகத் தமிழர்கள் மத்தியிலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சிங்களத்தின் கொலைக்கரங்களால் அதன் ஆசிரியர் மாவீரர் கப்டன் கஐன் அவர்களின் உயிர் பறிக்கப்பட்டும் இன்று வரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரெஞ்சு வாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையை செய்துவருகின்றது. என்பதை அனைவரும் அறிவார்கள். ஒரு பத்திரிகை ஸ்தாபனமானது தனது முடிவை தீர்மானிப்பது பத்திரிகையின் குழுமத்திற்குரிய உரிமையாகும். ஆனால் அப்பத்திரிகை ஆயுத மிரட்டல் மூலம் நிறுத்தப்படுவதானது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

கடந்த 24.09.2014 அன்று பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழர் ஆரதவு பாராளுமன்ற உறுப்பினர் குழுவினருடனான சந்திப்பு பாராளுமன்றத்திற்குள் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட அனைத்து தமிழர் அமைப்புகளும் சில விடயங்களை முன்வைத்திருந்தன. அதில் முக்கியமாக 2012ல் பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் படுகொலைக் குற்றவாளியை கண்டு பிடிக்க தாமதிப்பது பற்றியும் அதனைத்தொடர்ந்து மீண்டும் ஓர் ஆயுதமிரட்டல், ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் பற்றி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு தமிழர் வாழ்வுக்கான பாதுகாப்பில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்தியதோடு அதற்கான பாதுகாப்பை எங்களுக்கு உறுதி செய்யும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிரான்சு தமிழர் ஊடகஇல்லம் மீதான அச்சுறுத்தலையும், தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், கடத்தப்படுவதும், காணாமல் போவதும் சர்வதேசமெங்கும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலைசெய்யப்படுவதும், கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

அந்த வகையில் கடந்த 18.09.2014 ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் கண்டனத்துக்குரியது என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு