ஊடக சுதந்திரம் வடக்கில் இல்லை; யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இராசகுமாரன் குற்றச்சாட்டு

0
693

mediaஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்று அரசு கூறி இருந்தாலும் ஊடக சுதந்திரத்தை முற்றுமுழுதாக அனுமதிக்க முடியாத நிலை தான் வடக்கில் உள்ளது. இது நல்லாட்சிக்கு உரிய அம்சம் இல்லை.

 

இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராச குமாரன் தெரிவித்தார். சுர்வதேச ஊடக சுதந்திரத்தை முன்னிட்டும் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான, உதயன் ஊடகப் பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதனை நினைவு கூர்ந்தும் ஊடக சுதந்திரதின நிகழ்வும் கண்காட்சியும் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.

 

இதில் புதிய ஆட்சியில் வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்னும் தொனிப்பொருளில் இராசகுமாரன் உரையாற்றினார்.

 

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான கொலைகளை மக்கள் மறந்து விடாது இருப்பதற்காக இந்த நிகழ்வுக்குப் பொதுமக்களை அழைத்து நடத்தியமைக்கு நன்றி கூற வேண்டும்.

 

நான் இன்று உயிருடன் இருப் பதற்குப் பத்திரிகைகளும் ஒரு காரணம். நான் நாலாம் மாடிக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிடாது விட்டிருந்தால் நான் சில வேளை திரும்பி வந்திருக்க முடியாது.

 

ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்படாதிருந்திருந்தால் தற்போதைய நிலைமையை எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களின் விடயத்தைப் பொறுத்த வரை தென்பகுதியிலே எல்லாக் கட்சிகளுக்கும் இடையே பெரியளவு வித்தியாசம் இல்லை. அவர்கள் எம்மை இரண் டாந் தரப் பிரஜைகளாகவே பார்க் கின்றனர்.

 

ஊடக சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத் தெரிந்த கருத்தை அல்லது தனது அபிப்பிராயத்தை ஏனையவர்களின் தலையீடின்றிக் குறிப்பாக அரசின் தலையீடின்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அதே நேரம் தானும் தனக்குத் தேவையான கருத்துக்களைத் தேடிக் கொள்ள வேண்டும்.

 

தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் உரிமையாகும். அதனை ஐ.நா. சாசனமும் கூறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை வெறி தாண்டவம் ஆடிய காலகட்டத்தில் தமது கருத்துக்கு எதிரான கருத்துக் கொண்ட அனைவரையும் அழித் தொழிக்கும் எண்ணம் காணப்பட்ட காலத்தில் வடபகுதிப் பத்திரிகைகள் குறிப்பாக உதயன் பத்திரிகை மிகத் துணிவாகக் கருத்துக்களைக் கூறியிருந்தது.

 

அதுதான் உண்மையான ஊடக சுதந்திரம். ஆனாலும் கடந்த காலத்தில் இலங்கையில் வடக்குdகிழக்கில் நடந்த போரைக் காரணம் காட்டி இலங்கை முழுதும் அரசியல்வாதிகள் தமது பதவிகளைத்தக்க வைத்துக் கொள்வதற்காக ஊடகங்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

 

ஊடகவியலாளர்கள் கடத்தல் கொலைகள், ஊடகப் பணிமனைகள் எரிக்கப்பட்ட நிலைமையே இங்கு காணப்பட்டது. ஊடக சுதந்திரச் சுட்டியில் 2013 இல் 162 ஆவது இடத்திலும் கடந்த வருடம் 165 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.

 

அதாவது மிகக் கேவலமான நிலையில் இங்கு ஊடக சுதந்திரம் உள்ளது. கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஊடக சுதந்திரம் கடந்த ஜனவரிக்குப் பின்னர் சற்றுச் சுதந்திரம் பெற்றது.

 

சில ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னரைவிட ஊடக சுதந்திரம் சற்று அதிகரித்துள்ள நிலை. ஆனால் நாட்டின் சகல இடங்களிலும் இது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

 

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்பது செய்தியாளர்களையோ ஆசிரியர்களையோ கட்டுப்படுத்துவது என்பது மாத்திரமல்ல. நிறுவன இயக்குநர்களையும் கட்டுப்படுத்துவர்.

 

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்று அரசு கூறி இருந்தாலும் சுதந்திரமானது உண்மையில் முற்று முழுதாக அனுமதிக்க முடியாத நிலைதான் வடபகுதியில் உள்ளது.

 

இது நல்லாட்சிக்கு உரிய அம்சம் இல்லை. வடக்கில் 100 வீதம் சுதந்திரமில்லை என்றாலும் சில ஊடகங்கள் சுதந்திரம் இல்லாத நிலைக்கும் அஞ்சாமல் தமது கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் – என்றார்.
Uthayan.