எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்ஸ் இலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகைக்குமின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் “துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டிவரும்” என்ற மிரட்டல் காரணமாக அந்த பத்திரிகை தற்காலிகமாக தமது பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

senthamilini-prabaharan
உலகமெங்கும் ஊடகச் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டு இருக்க ஒரு வளர்ச்சி பெற்ற நாட்டில் அகதிகளாக வந்து தலையெடுத்து வாழும் தமிழர்களை வந்தேறு குடியோடு கூடி வந்த பதர்கள் தடை போட்டு அச்சுறுத்துவது என்பது உலக பாதுகாப்புக்கே அச்சுறுத்தலான விடயம். இதனை பிரான்ஸ் நாடும் சர்வதேசமும் எப்படி கையாளப் போகின்றது? இதற்கு பதிலை அவர்கள் சொல்ல வேண்டும்..

இனப்படுகொலை சாட்சியங்கள் திரட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நாட்களில் இந்த சாட்சியம் ஒன்றே போதும் தமிழின அழிப்பை இன்னமும் கையில் எடுத்து உலகப் பரப்பெங்கும் அலைகிறது இலங்கை இனவாத அரசு என நிரூபிக்க.

இனப்படுகொலை என்பதற்குள் ஊடக சுதந்திர மறுப்பும் ஒரு இனப்படுகொலையின் ஒரு கூறே என மாந்த நேய செயற்பாட்டாளரும் பிரேமன் பொது ஆயத்தின் ஆய்வாளரில் ஒருவருமான டென்னிஸ் ஹாலிடே சொன்னது முற்றிலுமான உண்மை.

இன்னமும் எங்கள் மண்ணில் மட்டுமல்ல தமிழர் வாழும் இடமெல்லாம் புற்றெடுத்து பரவி தமிழின அழிப்பை கையில் எடுத்து தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக வாழ்கின்றார்கள் இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு துணை போகும் ஒட்டுக் குழுக்களும். இவற்றை சர்வதேசத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்வோமாக.

ஏற்கனவே பரிதி அவர்களுக்கு தொடர்ந்த அச்சுறுத்தல்களை கடந்து அவர் மிகக் கொடூரமாக பிரான்ஸ் வீதியில் பகிரங்கமாக கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தார்.

சர்வதேச அரசுகளுக்கே பூச்சாண்டி காட்டுமளவு அரசபயங்கரவாதம் வளர்ச்சி பெற்று தமிழின அழிப்பை தலையில் கொண்டு ஆடுகிறது என்பதை சர்வதேசம் கருத்தில் கொண்டு ஒழுங்காற்று நடவடிக்கையை கையில் எடுத்து உலகத் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியது அனைத்துலக அரசுக்களின் கடனாகும். இந்த செய்தியை வலிமையாக பரப்புரை செய்து நீதிக்காக குரல் கொடுப்போம்.
செந்தமிழினி பிரபாகரன்.