தாம் நடத்திய வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வை குழப்பியதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது நலனுக்கான விடயங்களை புலனாய்வு செய்வதற்கு புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கு எமது நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வுகளை இரண்டு முறை குழப்புவதற்கு பல்வேறு சக்திகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்பானவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும்படி அரசைக் கேட்டுக்கொள்கின்றோம் எனக் கூறப்பட்டுள்ளது.

odakam
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் முறையான நிர்வாகம் தொடர்பான புலனாய்வு அறிக்கையிடலுக்காக ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதை டிரான்ஸ் பெரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா நிறுவனம் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்துள்ளது.

இதன் மற்றுமொரு நடவடிக்கையாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணங்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முறையான நிர்வாகம் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஊடகவியல் அறிக்கையிடலுக்கான ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் இது தொடர்பான சிங்கள மொழிமூல செயலமர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழிமூல செயலமர்வு பொலனறுவை கிரிதலே “டியர் பார்க்” ஹோட்டலில் மே மாதம் 22 ஆரம்பிக்கப்பட்டதுடன், பயிற்சி இடைநடுவே ஹோட்டல் முகாமைத்துவம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்பேரில் செயலமர்வை தொடர்ந்து நடத்த இடமளிக்க முடியாதென அறிவித்தது. இதை உறுதிப்படுத்த எழுத்துமூல சாட்சியங்கள் எம்மிடம் உண்டு.

கிரித்தலையில் செயலமர்வை நடத்தமுடியாமல் போனதன் பின்னர் அதை நீர்கொழும்பு “கோல்ட் சேண்ட்ஸ்” ஹோட்டலில் நடத்துவதற்க கடந்த வார இறுதியில் (06 – 08) நடத்த நடவடிக்கை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் திட்டமிட்டு அங்குவந்த குழுவினர் அதற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்க பயிற்சியளிப்பதாகவும் தெரிவித்து பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய இக் குழுவினர் வேறு பிரதேசங்களிலிருந்து நீர்கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதற்கான சாட்சியங்களும் இருக்கின்றன.

இச் செயலமர்வு நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காகவோ அல்லது வேறு தீய நோக்கங்களைக் கொண்ட செயலமர்வோ அல்ல. இது ஒரு சட்டரீதியான செயலமர்வு என அங்கிருந்த எமது பிரதிநிதிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காததுடன், மாறாக செயலமர்வை இடைநிறுத்தும்படி வலியுறுத்தினர்.

அந்த இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரி எம்மால் இரு நடவடிக்கைகளை எடுக்க முடியுமென தெரிவித்தார். செயலமர்வை இடைநிறுத்திவிட்டு வெளியேறினால் நீர்கொழும்பைவிட்டு வெளியேறும்வரை பாதுகாப்பு வழங்க முடியும் என்றும், அவ்வாறில்லாமல் செயலமர்வை தொடர்ந்து நடத்தினால் அதற்குப் பாதுகாப்பு வழங்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான முறையில் விடுத்த அறிவிப்பு தொடர்பாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா நிறுவனம் தனது அதிருப்தியை தெரிவிக்கின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தேவையான முறையில் பொலிஸார் நடந்துகொண்டதன் மூலம் இதற்குப் பின்னணியில் மறைமுக சக்தியொன்று செயற்பட்டிருப்பது தெளிவாகின்றது.

இந்த செயலமர்வுக்கு வருகைதந்த ஊடகவியலாளர்கள் அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என்பதுடன் கூலி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இவர்கள் புலி ஆதரவாளர்கள் என்றால் இவர்களுக்கு ஊடகவியலாளர் என அடையாள அட்டை வழங்கியதற்கான பொறுப்பை அரச தகவல் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருந்தும் இந்த ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறு துரதிஷ்ட வசமாக புலி முத்திரை குத்தியது அவர்கள் தமிழ் மொழியில் ஊடக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருக்கலாம். இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த பெரும் பாதிப்பை உருவாக்கும், என டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஊடகப் பயிற்சியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கருதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த ஹோட்டலில் அறைகளை ஒதுக்கி ஒரு மணித்தியாலத்திற்குள் ஹோட்டல் நிர்வாகம் ஊடகவியலாளர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான காரணத்தைக் கேட்டபோது, பிரபல அமைப்பெனக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று ஊடகவியலாளர்களை வெளியேற்றாவிட்டால் ஹோட்டலை சுற்றி வளைக்கப்போவதாக அச்சுறுத்தியதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது. இந்த ஊடகவியலாளர்கள் தமிழர்கள் என்பதாலா இவ்வாறு அநீதியிழைக்கப்பட்டது என நாங்கள் மீண்டும் கேள்வி எழுப்புகின்றோம்.

இந்தப் பயிற்சிக்காக பத்திரிகைகள் மூலம் பகிரங்கப்படுத்தி விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன் செயலமர்வு பகிரங்கத்தன்மையுடனும் பொறுப்புடனும் நடத்தப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்காக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இந்த யுகத்தில் இவ்வாறு ஊடகத்துறையில் மேலதிக பயிற்சியைப் பெறவிருந்த சந்தர்ப்பத்தை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லாமற் செய்தது வருத்தப்படக்கூடியதும், மனித உரிமைகளை மீறுவதுமாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.