எகிப்து : கேலிக்கூத்தானது அரபு வசந்தம் !

0
656

egypt6“உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன. மாபெரும் தலைவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள்” என்று ஹெகல் எழுதியுள்ளார். “அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்” என பிரான்சில் நடந்த திடீர் புரட்சி குறித்து எழுதும்போது குறிப்பிட்டார் பேராசான் காரல் மார்க்ஸ். எகிப்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள், குறிப்பாக கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் அந்நாட்டின் இராணுவம் ஒரேயொரு ஆணையின் மூலமாக ஆட்சியதிகாரத்தை மீண்டும் நேரடியாகத் தனது கையில் எடுத்துக் கொண்டிருப்பது காலத்தால் அழியாத மார்க்ஸின் இந்த விமர்சனத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

மோர்ஸி ஆதரவாளர்கள்

இராணுவ ஆட்சியைக் கண்டித்தும், மோர்ஸியை மீண்டும் அதிபராகப் பதவியில் அமர்த்தக் கோரியும் முசுலீம் சகோதரத்துவக் கட்சிய தலைநகர் கெய்ரோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் மோர்ஸியின் ஆதரவாளர்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பாசிச சர்வாதிகார அதிபர் ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்த எகிப்து மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பின்நவீனத்துவவாதிகள் அரபுலகின் புரட்சியென்றும் இணையதளப் புரட்சியென்றும் மட்டும் சுட்டவில்லை. அதனை, கம்யூனிசப் புரட்சியாளர்கள் முன்வைக்கும் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட, ஆயுதந்தாங்கிய புரட்சிக்கு மாற்றாகவும் முன்வைத்தார்கள். அரபு வசந்தம் என அவர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடிய அம்முதல் புரட்சி, முசுலீம் மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சியை அதிகாரத்தில் உட்கார வைப்பதாக முடிந்துபோனது.

எகிப்தில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த முகம்மது மோர்ஸி 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்ற ஓரிரு மாதங்களிலேயே, முதலாளித்துவ தாராளவாதக் கட்சிகளும், கிறித்தவ சிறுபான்மை அமைப்புகளும், முபாரக்கின் ஆதரவாளர்களும் இணைந்து மோர்ஸி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கினார்கள். இப்போராட்டங்கள் கடந்த ஜூன் மாத இறுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறியது. எதிர்த்தரப்பால் இரண்டாம் புரட்சி என அழைக்கப்படும் இப்போராட்டங்கள், மோர்ஸியின் இடத்தில், இழிபுகழ் படைத்த, ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியைத் தாங்கிப் பிடித்து வந்த எகிப்திய இராணுவம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எகிப்திய இராணுவம் மோர்ஸியை அதிபர் பதவியிலிருந்து விலக்கிய கையோடு அவரையும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் முக்கியத் தலைவர்களையும் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தது; நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கலைத்ததோடு, மோர்ஸி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் சாசனத்தையும் ரத்து செய்தது. முபாரக் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த உயர்ந்த அதிகார அமைப்பான அரசியல் சாசன நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அட்லி மஹ்மூத் மன்சூரை அதிபராக அமர்த்தி, அவருக்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும் தற்காலிக அரசியல் சாசனச் சட்டங்களை இயற்றி வெளியிட்டுள்ளது. அதேபொழுதில் தன்னை சைவப் புலியாகக் காட்டிக்கொள்ளும் நோக்கில் அடுத்த ஆறேழு மாதங்களுக்குள் புதிய தேர்தலை நடத்தவிருப்பதாகவும் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இராணுவ ஆதரவாளர்கள்

இராணுவம் மோர்ஸியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜூலை 26 அன்று இராணுவத்தை ஆதரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள்.

மோர்ஸியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் – இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ தாராளவாதிகள், முபாரக்கின் ஆதரவாளர்கள், கிறித்தவ சிறுபான்மை அமைப்புகள், இணையதள செயல்பாட்டாளர்கள் எனப் பல பட்டறைகளும் இணைந்துள்ள வானவில் கூட்டணி இது – தேசிய மீட்பு முன்னணி என்ற கூட்டணியை அமைத்து இராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஏப்ரல் 6 இயக்கம், புரட்சிகர சோசலிசவாதிகள் உள்ளிட்ட சில நகர்ப்புற குட்டி முதலாளித்துவ அமைப்புகள் ஒருபுறம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இன்னொருபுறம் தேசிய மீட்பு முன்னணியோடும் இணைந்து நிற்கின்றன. முசுலீம் சகோதரத்துவக் கட்சிதான் தற்பொழுது இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தெருப் போராட்டங்களை நடத்தி வருகிறது; இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்களையும் எதிர்கொள்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்காகப் போராடியதாகப் பீற்றிக்கொள்ளும் தேசிய மீட்பு முன்னணியின் தலைமையோ, இந்த ஆட்சி மாற்றத்தை இராணுவப் புரட்சி என விமர்சிப்பவர்களை, எகிப்து மக்களின் எதிரிகள் என முத்திரை குத்துவதோடு, இராணுவம் கட்டவிழ்த்துவிட்டு வரும் அரச வன்முறைகளுக்கும் ஒத்தூதி வருகிறது.

ஹோஸ்னி முபாரக்கின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் திரண்ட எகிப்திய மக்களுள் ஒரு பெரும் பிரிவு இன்று வெளிப்படையாக இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது விந்தையாகத் தோன்றினாலும், அந்த எழுச்சி இப்படி பரிகாசத்துக்குரிய வகையில் முடிந்து போவது தவிர்க்க இயலாத ஒன்றாகும். ஆயுதப் போராட்டம், இறுக்கமான ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு, ஒற்றைக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமையாததுதான் இந்த எழுச்சிகளின் பலம் எனப் பின்நவீனத்துவவாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதினார்கள். அவர்கள் எதனைப் பலம் எனச் சுட்டிக் காட்டினார்களோ, அதுதான் இந்த எழுச்சியின் மிகப்பெரும் பலவீனமாக அமைந்ததோடு, அதனின் சீரழிவுக்கும் காரணமாக அமைந்தது.

முகம்மது மோர்ஸி

எகிப்து இராணுவத்தால் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகம்மது மோர்ஸி.

ஒரு பாசிச சர்வாதிகாரிக்கு எதிராக வெடித்த மக்கள் பேரெழுச்சியின் பயனை ஒரு மத அடிப்படைவாதக் கட்சி அனுபவிக்க நேர்வது துன்பகரமானதுதான். ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராகப் போராடிய கட்சிகள், அமைப்புகளிலேயே முசுலீம் சகோதரத்துவக் கட்சி மட்டும்தான் எகிப்தின் கிராமப்புறங்கள் வரை அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட கட்சியாக இருந்தது. இந்த அமைப்பு பலம்தான் ஹோஸ்னி முபாரக் பதவியை விட்டு விலகிய பின் நடத்தப்பட்ட புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள், அதிபர் தேர்தல் ஆகியவற்றில் முசுலீம் சகோதரத்துவக் கட்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த எழுச்சியின் தலைவர்கள், “ஒரு புரட்சிகரமான அரசியல் திட்டத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டக் கூடாது” என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். மேலும் இந்த எழுச்சி, அரசைப் பற்றிய கண்ணோட்டத்தில் முதலாளித்துவ வரம்பையும் தாண்டவில்லை. எகிப்தைப் பொருத்தவரை, அந்நாட்டு இராணுவம் ஹோஸ்னி முபாரக்கின் பாசிச ஆட்சியைத் தாங்கிப் பிடித்த அடக்குமுறை இயந்திரமாக மட்டும் இயங்கவில்லை. எகிப்து பொருளாதாரத்தில் ஏறத்தாழ 10 சதவீதம் முதல் 35 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறது. அதனின் அதிகாரத்தை மட்டுமல்ல, அதனின் வரவு-செலவுகளைக்கூட நாடாளுமன்றம் உள்ளிட்டு யாரும் கேள்விகேட்க முடியாதபடி தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, இப்படிபட்ட இராணுவத்தை ஒழிக்காதவரை எகிப்தில் எந்தவிதமான அரசியல் மாற்றங்களுக்கும் இடமே இருக்கப் போவதில்லை.

ஆனால், 2011 மார்ச்சில் நடந்த எழுச்சியின்பொழுது ஹோஸ்னி முபாரக் வேறு, எகிப்திய இராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்கம் வேறு எனப் பாமரத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டு, எகிப்து இராணுவம் முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஆதரிப்பதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு, மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இதன் மூலம் முபாரக்கை வெளியேற்றியதே எழுச்சியின் வெற்றியாகக் காட்டப்பட்டது. “ரொம்பவும் புரட்சிகரமான கோரிக்கைகள் என்பதாக அல்லாமல், அரசு மாற்றம், ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் ஒழிப்பு என்கிற அடிப்படையில் சகல தரப்பினரும் ஒன்றாக்கப்பட்டனர்” எனக் குறிப்பிட்டு இப்போலித்தனமான வெற்றிக்கு வக்காலத்து வாங்கிய அ.மார்க்ஸ் போன்ற பின்நவீனத்துவவாதிகள், “இதுவொரு பன்மைத்துவ அரசியல் செயல்பாடென்றும், இதற்கு மாறாக, புரட்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது பிளவுவாதத்திற்கு இட்டுச் செல்வதாகும்” எனப் பீதியூட்டினர். ஆனால், அக்கும்பல் தூக்கிப் பிடித்த இந்தப் பன்மைத்துவம்தான் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து துரத்தப்பட்டவுடன் இராணுவ கவுன்சில் அரசு பொறுப்பை எடுத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது.

அப்துல் அல் ஸிஸி

எகிப்தில் நடந்துள்ள இராணுவப் புரட்சியின் சூத்திரதாரியான இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபதா அல் ஸிஸி.

எகிப்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் சாசனத்திற்கான தேர்தல், அதிபர் தேர்தல், நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தாலும், இராணுவம் ஆட்சியதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க விரும்பாமல் பல்வேறு சதிகளை நடத்தியது. அதிபர் தேர்தலில் முபாரக் ஆட்சியின்பொழுது பிரதம மந்திரியாக இருந்த அகமது ஷாஃபிக் மோர்ஸிக்கு எதிராக இராணுவக் கும்பலால் நிறுத்தப்பட்டார். அகமது ஷாஃபிக் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு விதிக்கப்பட்டிருந்த தடையை எகிப்தின் உச்ச நீதிமன்றம் வலிய வந்து நீக்கி, இராணுவத்துக்கு உதவியது.

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தாராளவாத, மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகள், இடதுசாரி அமைப்புகள் ஆகியவை போதிய வாக்குகளைப் பெற முடியாமல் முதல் சுற்றிலேயே தோற்றுப் போய்விட, அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றில் எகிப்து மக்களின் முன் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, அவர்கள் மத அடிப்படைவாதக் கட்சியைச் சேர்ந்த மோர்ஸியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அல்லது, இராணுவத்தின் கையாளான அகமது ஷாஃபிக்கிற்கு ஓட்டுப் போட வேண்டும். இந்நிலைமைக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள், அமைப்புகளால் தேர்தல் புறக்கணிப்பு ஓர் உத்தியாகக் கையாளப்பட்டாலும், அது தேர்தலை ரத்து செய்யும்படி இராணுவக் கும்பலை நிர்ப்பந்திக்கும் அளவிற்குப் பலம் வாய்ந்ததாக அமையவில்லை.

அதிபர் தேர்தலில் மோர்ஸி வெற்றி பெறும் சூழ்நிலை இருந்ததைப் புரிந்துகொண்ட இராணுவம், ஆட்சி அதிகாரத்தை ஏந்திச் சுழற்றுவதில் தனது பங்கை உறுதி செய்துகொள்ளும் விதமாகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்தது. இவற்றின்படி, நாட்டின் அதிபர் இராணுவத்தின் தலைவராக (Commander-in-Chief) இருப்பது ரத்து செய்யப்பட்டு, அந்த அதிகாரம் இராணுவ கவுன்சிலின் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது; இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் அதிகாரம் மற்றும் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆகியவையும், உள்நாட்டில் இராணுவத்தை நிறுத்துவது அல்லது அயல்நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிடுவது ஆகிய அதிகாரங்களும் அதிபரிடமிருந்து பறிக்கப்பட்டு, இராணுவ கவுன்சிலிடமே ஒப்படைக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மேலாக, புதிய நாடாளுமன்றத்தை அரசியல் சாசன நீதிமன்றத்தின் உதவியோடு இராணுவம் கலைத்தது. சுருக்கமாகச் சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஒரு பொம்மை அதிபராக்கப்பட்டார். எகிப்தின் உண்மையான ஆட்சியாளர்களாக அரசுப் படைகளின் உயர் மன்றம் (Supreme Councile for Armed Forces) முடிசூட்டிக் கொண்டது.

இராணுவத்தின் இந்தச் சதிகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அது இராணுவத்துக்கு எதிரான வலிமை வாய்ந்த அரசியல் ஆர்ப்பாட்டங்களாக மாற்றப்படவில்லை என்பது தற்செயலானதல்ல. எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவர்களான முகம்மது எல்-பராதேய், அகமது ஷாஃபிக், தரகுப் பெருமுதலாளியான மம்தௌஹ் ஹம்ஸாஹ், பாசீம் யூசுப் உள்ளிட்டோருக்கும் எகிப்து இராணுவத்துக்கும் இடையே உள்ள உறவு; இக்கும்பலுக்கும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள உறவிலிருந்துதான் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இராணுவ விசுவாசிகள்

இராணுவத்தால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முபாரக்கின் விசுவாசியும் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான அட்லி மஹ்மூத் மன்சூர் (இடது) மற்றும் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க விசுவாசி முகம்மது எல்-பரதோய்.

அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முகம்மது மோர்ஸி இராணுவத்தோடு அதிகாரப் போட்டியில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இராணுவத்தால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அவர் இட்ட கட்டளையை எகிப்தின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்தது. மார்ச் 2011-இல் நடந்த மக்கள் போராட்டத்தின் மீது பல்வேறு அத்துமீறல்களை நடத்திய போலீசார் மற்றும் இராணுவத்தினர் மீது விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட கமிசன், ஒருவர் பின் ஒருவராக குற்றவாளிகளை விடுதலை செய்து வந்த நிலையில், அக்கமிசனின் ஆயுட்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அப்துல் மெகுயித் மகம்மதுவை (இவர் ஹோஸ்னி முபாரக்கின் அடிவருடிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) மாற்ற மோர்ஸி எடுத்த முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. இன்னொருபுறம், புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே முரண்பாடு முற்றி வந்தது.

இந்நிலையில் அதிபர் மோர்ஸி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆட்சியதிகாரத்தில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் பங்கை உறுதிப்படுத்தும் பல்வேறு உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தார். குறிப்பாக, அரசியல்சாசன சபையையும் அதன் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்ததோடு, தனது இந்த உத்தரவுகளை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்துவதையும் தடை செய்தார்.

மோர்ஸி தான் பதவி வகித்த குறுகிய காலத்தில் முபாரக்கின் முப்பது ஆண்டு கால ஆட்சியைவிட ஒரு கொடிய அடக்குமுறையைத் தொழிற்சங்கங்களின் மீது ஏவிவிட்டார். காசா முனை மீது இசுரேல் நடத்திய தாக்குதலின்பொழுது இசுரேல்-அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவாக நடந்துகொண்டார். ஐ.எம்.எஃப்.-இடமிருந்து 480 கோடி அமெரிக்க டாலர்களைக் கடன் பெறுவதற்காக அது இட்ட நிபந்தனைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார். இவையெதுவும் தீவிரமாக எதிர்க்கப்படாத அதேசமயம், மோர்ஸி தனது உத்தரவுகளின் மூலம் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றபடி புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நிறைவேற்ற முயல்கிறார்; ஒரு மதவாத ஆட்சியை நிறுவ முயலுகிறார் என்பது மட்டுமே மையப்படுத்தப்பட்டு எதிர்க்கப்பட்டது.

அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ள இராணுவமும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பார்க்கப்படாமல், தாக்குதல் இலக்கில் மோர்ஸியும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியும் நிறுத்தப்பட்டன. கலகம் எனப் பொருள்படும் Kதாமோரோட்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மோர்ஸிக்கு எதிரான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது. இவை அனைத்தின் பின்னணியில் கார்ப்பரேட் பத்திரிகைகளும், முபராக்கின் ஆதரவாளர்களான பெருமுதலாளிகளும், சவூதி அரேபியாவும் ஒளிந்திருந்தனர்.

“முபாரக்கால் ஊட்டி வளர்க்கப்பட்ட இராணுவம், முபாரக்கால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கம் – இக்கும்பல்தான் இப்பொழுது எகிப்தை ஆள்கிறது. இது முபராக் இல்லாத முபராக்யிசம்” என்கிறார், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நவீன அரபு அரசியல் புலப் பேராசிரியர் ஜோஸப் மஸாத். “இதற்காகவா இலட்சக்கணக்கான மக்கள் போராடத் துணிந்தார்கள்? பல நூறு பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்தார்கள்?” எனக் கேட்டால், “இதுவும் ஒரு மாற்றம்தான்” எனப் பின்நவீனத்துவவாதிகள் உறுமுகிறார்கள். மேலும், இன்று இராணுவத்துக்கு ஆதரவாக நிற்கும் அமைப்புகள் நாளை இராணுவத்துக்கு எதிராகவும் திரும்பும் என்று அருள்வாக்கு சோல்லுகிறார்கள்.

தேர்தல்கள், நாடாளுமன்றம் என எத்தனை முக்காடுகளைப் போட்டுக் கொண்டாலும் இராணுவ ஆட்சி என்பது ஒரு கொடுங்கோலாட்சிதான் என்பதற்கு உலகெங்கிலும் அநேக உதாரணங்களும் அனுபவங்களும் இருக்கும் நிலையில், அதனை நேரடியாகப் பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவலத்திற்குள் எகிப்து மக்கள் தள்ளப்பட்டிருப்பதை எப்படி ஆதரிக்க முடியும்? எதிரும்புதிருமாக நின்று மோதிக்கொள்ளும் முசுலீம் சகோதரத்துவக் கட்சி, இராணுவம் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட, முரணற்ற ஜனநாயகமும், புரட்சிகரமான சமூக மாற்றத்தையும் உள்ளடக்கிய மூன்றாவது தீர்வு என்று எதுவுமே இல்லை எனப் பித்தலாட்டம் செய்து, இராணுவ ஆட்சியை மட்டுமே உடனடி மாற்றாக முன்நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மோதிக் கொள்ளும் இரண்டு தரப்பில், அந்தச் சமயத்தில் குறைவான தீங்கு நிறைந்த சக்தியை (lesser evil) ஆதரிப்பது என்ற தந்திரத்தோடு, முபாரக்கிற்குப் பதிலாக மோர்ஸி, மோர்ஸிக்குப் பதிலாக இராணுவம் எனப் பின் நவீனத்துவவாதிகள் முன்நிறுத்தும் ஆட்சி மாற்றங்கள், மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்து அவர்களை வெகுவிரைவில் விரக்தியும் களைப்பும் அடையச் செய்யும் அபாயம் நிறைந்தவையாகும்.

– திப்பு – வினவு