புலம்பெயர் ஈழத்தமிழர்கள் 424 பேர் இலங்கைக்கு வரமுடியாது என அரசு அறிவித்துள்ளது.

அரச வர்த்தமானியில் பெயர் குறிப்பிட்டு, வெளியிடப்பட்ட 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல் தெரிவிக்கின்றது.

ஜெனிவாத் தீர்மானத்தை அடுத்து இலங்கை அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை இதுவாக இருப்பினும் குறித்த 424 பேரின் பெயர்களும் அவர்கள் பற்றிய தகவல்களும் இப்போது எடுக்கப்பட்டவையல்ல. இந்தப் பெயர்கள் ஏற்கெனவே பட்டியல்படுத்தப்பட்டவை என்பதில் மறுப்புக்கு இடமில்லை.

அதேசமயம் இலங்கை வருவதற்குத் தடை விதிக்கப்பட்ட 424 பேரின் பெயர் விபரங்கள், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தகவல்களை எடுப்பதென்பதும் கடினமான விடயம்.

tamil65
ஆக, 424 பேருடன் தொடர்பு வைத்திருந்த-தற்போது அரசாங்கத்துடன் இணைந்துள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்போந்தவர்கள் இலங்கை வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளனர் என்ற ஊகிப்புகள் அவ்வளவுக்குப் பிழை போகக்கூடியதல்ல.

அதிலும் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுங்கள் என்ற கோரிக்கைகளுக்கும் கடும் பிரயத்தனங்களுக்கும் இசைய மறுத்தவர்களாகவே இந்த 424 பேரும் இருப்பர் என்பதும் மெய்யே.

ஆக, ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் சார் விடயங்களை சர்வதேசத்தின் மத்தியில், எடுத்துக் கூறுகின்றவர்கள், ஜெனிவாத் தீர்மானத்தின் வெற்றிக்குப் பின்னால் செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 424 பேரின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்புக்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக் கருதியவை என்ற அடிப்படையில் அவை பற்றி நாம் பேசாமல் விட்டுவிடலாம்.

ஆனால் நமக்கு இருக்கக் கூடிய ஐயம் வேறு. அதாவது ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றியாகிறோம் என்று ஜெனிவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி மீது இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியா காலைவாரி விட்டது என்று கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தார் என்ற அடிப்படையில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது எதற்காக! ஓ! எல்லாம் நடிப்பும் நாடகமும் என்றால் நாடும் நாமும் உருப்படுவது எங்ஙனம்?

424 பேர் குற்றவாளிகள் என்றால், அமெரிக்காவும் அதனோடு இணைந்து ஜெனிவாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளும் உங்களுக்குப் பகையல்லவா?

அப்படியானால் அந்த நாடுகள் இலங்கைக்குள் வரமுடியாது என்ற அறிவித்தலும் வெளிவர வேண்டுமே. ஏன் வெளிவரவில்லை.

சண்டித்தனக்காரருக்கு, வேடதாரிகளுக்கு, அப்பாவிப் பொதுமக்களுக்கு என வேறுபட்ட தீர்ப்புக்கள் நாட்டை வேரறுக்கும். ஆகையால் எங்கள் தாயகத்தின் உறவுகளை வேரறுக்காதீர்கள். அது அவ்வளவு நல்லதல்ல.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்.