இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இன்று இந்தியா வருகிறார். இவரது வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

barathi
இந்திய பெருநாட்டின் 15-வது பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி இந்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பதவியேற்கும் இந்நிகழ்வில் எங்களின் மகிழ்வை குலைக்கும் வகையிலும் இந்த அரசின் மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் லட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த ராஜபகசைவை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கண்டனத்திற்குரியது.

புதிதாக அமையவிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வமான முதல்நாள் நிகழ்விலேயே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியும் அவமதிக்கும் வகையிலும் சர்வதேச விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு போர் குற்றவாளியை அழைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக 37 உறுப்பினர்களை கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தன் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் அனைத்து தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களும், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வைகோ அவர்கள் டில்லியில் ராஜபக்சவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இவ்வனைத்து எதிர்ப்புகளுக்கும் மேலாக ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொள்வது என்பது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பல தீர்மானங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது.

மேலும் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சவின் வருகையால் கலந்து கொள்ளவில்லை என்ற அறிவிப்பிற்கு பின்னரும் மோடி மௌனம் சாதிப்பதும், அதற்கு பாஜக தலைவர்கள் சப்பை கட்டு கட்டுவதும் ஒட்டுமொத்த தமிழர்களை வீதிக்கு இறங்கி போராடும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஆகவே, எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சவின் வருகையை ரத்து செய்யவேண்டும்.

அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என பாரதிராஜா கூறியுள்ளார்.