ஒட்டுமொத்த தமிழகத்தின் இயக்கங்களும், கட்சிகளும் எழுந்து நின்றால் ஒழிய கொடுமைகளுக்கு முடிவு கிடைக்காது.

என்ன செய்யப் போகிறது தமிழ்ச் சமூகம்? என மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இன்று அவுஸ்திரேலியாவின் தூதுவரை சந்தித்த பின்னர் அவர் முகநூலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

இன்று (10) மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை.

aus-ganthy76
ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம்.

உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத்தூதர் வந்து நேரில் பெற்றுக்கொண்டு ஆவண செய்வோம் என்றார்.

இலங்கை தூதரகம் அவசரத்தேவைக்காய் பாஸ்போர்ட் தருவார்கள் அங்கு சென்று வாருங்கள் என்றார்கள்.

இலங்கை தூதரகத்திற்கு இவர்களை தனியாய் அனுப்ப இயலாது, இவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதால் துணைக்கு நின்றிருந்தோம். இதற்கிடையே 30 நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தில்லி தூதரகத்திலிருந்து அதிகாரிகள் பேசினார்கள். பரவாயில்லையே இவ்வளவு தூரம் அக்கறை எடுக்கிறார்களே என்று பேசினால், இலங்கையிடம் பாஸ்போர்ட் வாங்குங்கள் எங்களால் இயன்றதை செய்கிறோம் என்றார்கள்.

அவர்களிடம், “அகதிகளுக்கு எவ்வாறு இலங்கை பாஸ்போர்ட் வழங்கும் என்றேன்”, அதற்கு,” ஆஸ்திரேலியா ஒருவேளை இவர்கள் சென்றால் திரும்பி இந்தியா பெற்றுக்கொள்ளும் என்று கடிதம் அகதிகளுக்கான அலுவலகத்திடம் இருந்து பெற்றுத்தாருங்கள்” என்றார்கள். “முயற்சிக்கிறோம், ஆனால் இவர்கள் ஆஸ்திரேலியா சென்று அவரது மகனுக்கு இறுதிக்கடன் செய்ய உதவுங்கள் ” என்றேன். “நிச்சயமாக, அதற்கான முதல்படியாக நீங்கள் விசா கொடுக்கும் இடத்திற்கு சென்று ஆவணங்களை பதிவு செய்யுங்கள் என்று சொல்லி அலுவலகத்தின் பெயரைக் கொடுத்தார். அது தனியார் நிறுவனம், “ இந்த நிறுவனம் பாஸ்போர்ட் இல்லாமல் விசா அப்ளிகேசனை வாங்க மாட்டார்களே” என்றேன்.

“நீங்கள் சென்று கொடுங்கள்,அதைத் தான் சொல்ல இயலும், விவரமாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறோம். பாஸ்போர்ட்டுடன் செல்லுங்கள்” என்றார்கள்.

“அகதிகளுக்கு பாஸ்போர்ட் இருக்க வாய்ப்பில்லையே, ஆஸ்திரேலியா அக்திகளுக்கான உரிமைக்கான ஐநா சாசனத்தில் கையெழுத்திட்டிருக்குமே, ஐ,நாவின் அகதிக்கான சாசனம் பாஸ்போர்ட் தேவை என்று சொல்கிறதா?.. மனிதாபிமான அடிப்படையில் தானே அனுகவேண்டுமென்கிறது” என்றேன்..
தடுமாறியபடியே, “ அவற்றினை பரிசோதித்து பார்க்கிறோம், தற்பொழுது பாஸ்போர்ட் இல்லாமலும் கூட இந்த அலுவலகம் சென்று ஆவணங்களை பதியுங்கள், அது இல்லாவிட்டால் எங்களால் விசா அனுப்ப இயலாது “ என்றார்கள்.

aus-ganthy
இதற்கிடையில் கிட்டதட்ட 2மணி நேரத்திற்கும் அதிகமாக இலங்கை அதிகாரிகள் இவர்களை விசாரித்திருக்கிறார்கள். காவல்துறையிடம் இந்த தமிழர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டுமென்று கேட்டோம். இலங்கை தூதரகத்தினை நம்ப இய்லாது ஆகவே ஆவண செய்யுங்கள் என்றோம். அகதிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம் கவலை கொள்ளாதீர்கள் என்றார்கள்.

மாலை வெகுநேரம் கழித்து வெளியில் அனுப்பபட்டவர்களிடம் பேசிய பொழுது, இலங்கையானது “நீங்கள் கொழும்பு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தர இயலும், பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சி செய்யுங்கள்” என்றிருக்கிறார்கள்.

இரவு ஆஸ்திரேலிய தூத்ரகத்தின் மின்னஞ்சலை பார்த்தால் ” உங்கள் மகனின் மரணத்திற்கு வருத்தங்கள், உங்களிடம் தொலைபேசியில் பேசியபடி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு விசாவிற்கு பதிவு செய்யுங்கள், அதற்கான விதிமுறைகள், கட்டணம் பின்வருமாறு:” என்று முடிந்திருக்கிறது.

லியோவின் உடலை இந்தியா அனுப்ப இயலாது ஏனெனில் அவர் இந்திய பிரஜை கிடையாது என்கிறார்கள். லியோவின் பெற்றோரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் பாஸ்போர்ட் தேவை என்கிறார்கள். இலங்கையிடம் தான் பாஸ்போர்ட் பெறவேண்டுமென்று இந்தியா சொல்கிறது. இலங்கைக்கு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தருவேன் என்கிறது இலங்கை. அகதிகள் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்று தெரிந்தும் ஆஸ்திரேலியா வஞ்சகமாய் பேசுகிறது.

ஏதும் புரியாமல் மகனை இழந்த சோகத்துடன் லியோவின் தந்தையும், தம்பியையும் பார்க்கும் போது மனம் கலங்குகிறது. தமிழனாய் பிறப்பதுவும், இந்தியாவிடம் அகதியாய் மாட்டிக்கொள்வதுவும், பெற்ற பிள்ளைகளை வெளிநாட்டில் பலிகொடுப்பதுவும், அவர்கள் உடலுக்கு மரியாதை கூட செலுத்தவிடாமல் சட்டம் பேசும் நாடுகளிடையே அல்லாடுவதையும் காண சகிக்கவில்லை.

ஆஸ்திரேலியா மனிதாபிமான அடிப்படையில் செய்யுமா என்று தெரியவில்லை. இந்தியா தனது அதிகாரவர்க்கத்தின் ஊடே இவர்களுக்கான உதவியை செய்யுமா என்று தெரியவில்லை. மகனின் முகத்தினை இறுதியாய் ஒருதடவை இவர்கள் பார்ப்பார்களா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு எதுவுமே சாதகமாய் நிகழவில்லையெனில் என்ன செய்யப் போகிறோம் என்றும் புரியவில்லை. இவ்வார இறுதியில் லியோவிற்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த தமிழகத்தின் இயக்கங்களும், கட்சிகளும் எழுந்து நின்றால் ஒழிய இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கிடைக்காது.

என்ன செய்யப் போகிறது தமிழ்ச் சமூகம்?
(இவர்களுடன் துணை நின்ற மாணவர் தோழர்கள் Prabhakaran V Prabha PK தமிழா னந்தன் மற்றும் இதர தோழர்களுக்கு நன்றிகள்)