pillainமே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பாண் கி மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை.

நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நடந்தது நல்லபடியாக நடந்தது என்பதுபோல்தான் அவரின் ஊடக நேர்காணல்கள் அமைந்திருந்தன. வவுனியா வதை முகாம்களுக்கும் சென்று பார்வையிட்ட மூன், அரசை பாராட்டிவிட்டே சென்றார்.

சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் தொல்லைதாங்க முடியாமல், மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை வழமைபோல் அமைத்து நீண்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்.

அதனை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்தார் பொதுச் செயலாளர் பாண் கி மூன்.

அறிக்கைக்கு என்ன நடந்தது? என்கிற கேள்வி பல மட்டங்களில் இருந்து எழுந்தது. அதனைச் சமாளிக்க ஒருவாறாக, பேரவையிடம் அதன் நகலை சமர்ப்பித்தது செயலாளர் நாயகம் அலுவலகம்.

இற்றைவரை அந்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து எவருமே பேச விரும்பாதநிலையில், சார்ல்ஸ் பெற்றியின் உள்ளக அறிக்கை ஐ.நா.சபையின் மீது கடுமையான குற்றச் சாட்டினை முன்வைத்தது.

இனப் படுகொலை நிகழ்ந்த போது ஐ.நா.பொதுச்செயலாளரின் அலுவலகம், வேண்டுமென்றே அசமந்தமாக இருந்ததா? அல்லது அதன் மேல்மட்ட அதிகாரிகள், சில வெளிநாட்டு ராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டார்களா என்கிற சந்தேகத்தை பெற்றியின் அறிக்கை வெளிப்படுத்தியது.

இவையெல்லாவற்றையும் கடந்து, இப்போது ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அமையார் இலங்கைக்கு வந்துள்ளார்.

ஐ.நா.சபை மீதான இழந்துபோன நம்பகத்தன்மையை தூக்கி நிமிர்த்த அம்மையார் முயற்சிப்பாரா என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது. ஆகவே இவரது இலங்கை விஜயத்தின் இறுதி நாளன்று, கொழும்பில் நடை பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கான விடை கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்பாக, ஒரு முக்கிய கேள்வி ஒன்றினை அவரது அலுவலகம் நோக்கி தொடுத்துள்ளார், மகிந்தரின் தம்பியும், கே.பியின் தேசியத் தலைவருமாகிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச.

ஏனெனில் நிபுணர் குழு அறிக்கையில் சொல்லப்பட்ட, 40,000 பேர் கொல்லப்பட்ட விவகாரமே கோத்தாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. வெள்ளைக் கொடி கொலைகளிலும், களமுனைத் தளபதிகளுக்கு அழிப்பு வேலைக்களுக்கான உத்தரவுகளை வழங்கியதிலும், கோத்தபாயாவின் பங்கு அளப்பரியது என்பது மனித உரிமைச் சங்கங்களுக்கு தெளிவாகத் தெரியும்.

ஆகவேதான் அந்த 40000 விவகாரத்தை வலுவிழக்கச் செய்வதற்கு, ‘அதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள்’ என்று அம்மையாரின் அலுவலகத்தை நோக்கி கோத்தா சவால் விடத் தொடங்கியுள்ளார்.

கோத்தாவின் இந்தத் ‘தலை’ போகும் கேள்வி, ஊடகவியலார் சந்திப்பின் போது எழுப்பப்படுமென்று எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, இந்தக் கேள்விக்கு அம்மையார் என்ன பதிலைக் கூறப்போகிறார் என்பதை தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றார்கள்.

சாட்சிகளுக்கு பாதுகாப்பு உத்திரவாதம் வழங்கி, சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனுமதித்தால், கோத்தபாயவின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுமென்று நவநீதம்பிள்ளை அம்மையார் சொல்வாரா?.

அதனைவிடுத்து, அமெரிக்கத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது போல், வடமாகாண சபைத்தேர்தலை அரசு அறிவித்து விட்டது. நல்லிணக்க ஆணைக்குழுப் பரிந்துரைகளை நிறைவேற்ற விசாரணைக்குழுக்களை அமைத்துவிட்டது. ஆகவே எல்லாமே சுமுகமாக நடக்கிறது என்கிற தொனியில், அம்மையார் அறிக்கை விட்டுத் தப்பித்து விடுவாரோ என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது.

இவைதவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் அரச தரப்பிலிருந்து போர்க்குற்றச் சாட்டு முன்வைக்கப்படுவதை கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகளோடு கூட்டமைப்பு இணைந்து செயற்பட்ட பல ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனை வைத்து கூட்டமைப்பின் மீது போர்க்குற்றச்சாட்டினைச் சுமத்த முடியுமென்று பேரினவாதிகள் கூற ஆரம்பித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் எந்தவிதமான முறைப்பாடுகளையும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்காமல் தடுப்பதற்கு, இவ்வகையான வெருட்டல்களை அரச தரப்பு பிரயோகிக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.

தமது ஆட்சியதிகாரங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சகல வழிமுறைகளையும் , ஒடுக்குமுறையாளர்கள் பயன்படுத்துவார்கள் என்பது, வரலாறுகள் எமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்.
மாகாணசபைகள், தனிநாடாக மாறும் என்று அப்பட்டமான பொய்களை அவிழ்த்துவிடும் சிங்களம், தெரிந்தே பல பொய்களை சொல்கிறது.

அது அதன் நலனுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. திரும்பத் திரும்ப அப் பொய்களைச் சொல்வதன் ஊடாக, தனது இன அழிப்புச் செயற்பாடுகளை மறைத்து விடலாம் என்று நம்புகிறது.

தான் கூறும் பொய்களை தானே நம்புவது போன்றதொரு தோற்றப்பாட்டினை முதலில் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால், அப் பொய்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடும்.

இவ்வாறான உளவியல் சார்ந்த அணுகுமுறையை சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் பிரயோகித்தார்கள். அதில் முழுமையான வெற்றியையும் பெற்று விட்டார்கள்.

இதேவிதமான அணுகுமுறையை சர்வதேச நாடுகள் மத்தியில் பிரயோகிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டாலும், அவை ஓரளவிற்கு தோற்றுப்போன முயற்சிகளாகவே மாறிவிட்டன.

இன்னமும், புலம்பெயர் அமைப்புகளினூடாக விடுதலைப்புலிகள் இயங்குகின்றார்கள் என்று பரப்புரை செய்து பார்த்தார்கள். புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது என்றார்கள்.

சிங்களமானது ஒருபடி கீழிறங்கி, 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது தமிழ்ஈழத்திற்கான பாதையைத் திறந்து விடும் என்று, இந்தியாவினையும் அமெரிக்காவினையும் நோக்கி எச்சரித்தது.

ஆகவே இந்த அச்சுறுத்தல்களும், அறிவுரைகளும் ,ஒரு சிறு அசைவினையும் இந்தப் பிராந்திய நலன் விரும்பும் வல்லரசாளர்கள் மத்தியில் உருவாக்கியதாகத் தெரியவில்லை.

ஆகவேதான் அவசர அவசரமாக காணாமல் போகடிக்கப்பட்ட மக்கள் குறித்து விசாரணை செய்ய, மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்றினை மகிந்தர் அமைத்துள்ளார். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே இந்த ஆணைக்குழு உருவாக்கம் பெற்றது.

அதேபோல், போலீஸ் துறையை , பாதுகாப்புத் துறையிலிருந்து பிரித்தெடுத்து, ‘ சட்டம் – ஒழுங்கு’ என்கிற அமைச்சின் கீழ் மகிந்தர் கொண்டு வந்துள்ளார்.

இதுவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்தான்.

சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதை LLRC அறிக்கை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே நவநீதம்பிள்ளை அம்மையாரின் வருகையை ஒட்டி, சந்திரிக்கா பண்டாரநாயக்காவால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த நிர்வாக முறைமை, மீண்டும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், இவ்வாறான அதிரடி செயற்பாடுகள், மனித உரிமை ஆணையாளரைச் சாந்தப்படுத்தும் என்று அரசு நம்புவது போல் தெரிகிறது.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து எந்தவிதமாக அழுத்தங்களும் வந்துவிடக் கூடாதென்பதில் மிகவும் அவதானமாகத்தான் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றி கிளைபரப்பி வளர்ந்திருக்கும், பௌத்த சிங்கள பேரினவாத கருத்துநிலை பட்டுப்போகாமல் இருக்கவேண்டுமாயின், ‘ உரிமையைக்கோடு’, ‘ விசாரணை செய்’ என்று எவர் வந்தாலும், அவர்களை இராவண பலய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள இராவய மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கைத்தடிகளை உசுப்பி விட்டு, அதற்கு நீர் பாய்ச்சி விடுவார் மகிந்தர்.

ஆனாலும் கேம ரூசுக்கு எதிராக, கம்போடியத் தீர்ப்பாயத்தில் நடைபெறும் பிரத்தியேக உயர் நீதிமன்ற விசாரணையில், முக்கிய நீதிவானாக விளங்கும் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி சந்திர நிஹால் ஜயசிங்க அவர்கள், நவநீதம் பிள்ளை அம்மையாரின் விஜயம் குறித்து குறிப்பிடும் போது, அவரை சீண்டாமல், அவரோடு ஓரளவிற்கு ஒத்துப்போவதுதான் அரசிற்கு நல்லது என்கிற வகையில் தனது கருத்தினை அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்தப் பின்னணியில், இலங்கை வந்துள்ள நவிபிள்ளை அம்மையார், உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறைக்குள் ஐ.நா.வையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை எடுப்பாரா? அல்லது அனைத்துலக சுயாதீன விசாரணை முழுஅளவில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்துவாரா? என்பதை, 24 வது கூட்டத்தொடரில், வாய் மூல அறிக்கை வாசிக்கப்படும் போதே தெரிந்து கொள்ளலாம்.

அதற்கும் அப்பால், நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான 6 பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதோடு ,அம்மையாரின் இலங்கை குறித்தான நிலைப்பாடு முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இருப்பினும் ஐ.நா.சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளரைச் சந்திப்பதற்கு, பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம், தடைகளையும் தாண்டி வீதிக்கு வந்த நிகழ்வு, உரிமைக்காக போராட மக்கள் தயார் என்பதை உணர்த்துவது போலுள்ளது.

ஆதலால் பாண் கி மூன் நியமித்த நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல விடயங்கள், அதில் சொல்லப்படாத துன்பங்கள், என்பவற்றின் நேரடிச் சாட்சியாக அம்மையார் இருப்பார் என்பதை அவர் வெளியிடப்போகும் அறிக்கையே கூறும்.

– இதயச்சந்திரன்
ஈழமுரசு