மட்டக்களப்பு

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்கள் தங்களது உறவுகளை மீட்டுத்தரக்கோரி மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியை இன்று நடத்தினர்.

 

batty_missingprotest_002விழுதுகள் மேம்பாட்டு நிலையத்தின் நாங்கள் மற்றும் சமாசம் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

 

புதிய அரசாங்கம் காணாமல்போன தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்தவும் தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

 

மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றது.

 

அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளை இழந்த தாயும் தனது புதல்வர்களின் உருவப்படத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

 

இதன்போது எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள்,அப்பாவி கைதிகளை விடுதலைசெய், எமது உடன்பிறப்புகளை விடுதலைசெய்,தமிழ் மக்களை இனியும் புறக்கணிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.


0000000000000


வவுனியா


 

காணாமல் போனோரின் உறவுகள் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். தேவராஜா தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

 

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி. பாஸ்கரா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உப தவிசாளர் ரவி, உறுப்பினர் க. பரமேஸ்வரன், தர்மலிங்கம், வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன்(சிவம்) மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும். ‘அரசியல் கைதிகள்’ எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

 

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

 

குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

 

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

00000000000000000

 

திருகோணமலை


திருகோணமலையில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

 

திருகோணமலை, இந்து கலாச்சார மண்டபத்துக்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

trinco_protest_001நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

 

இந்நிகழ்வினை நாங்கள் என்ற அமைப்பினரும், கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பும், திருகோணமலை அமரா குடும்ப தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியமும், திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

 

மூதூர், குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, வெருகல், பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேசங்களிலிருந்து தமது உறவுகளை தேடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், உள்ளூராட்சி மன்ற நகரசபை தலைவர் செல்வராசா மற்றும் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது தம்மிடம் ஏற்கனவே இருந்த 200 க்கும் மேற்பட்ட கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் விபரங்கள் மற்றும் இன்றைய தினம் புதிதாக பதியப்பட்டவர்களின் தகவல் அடங்கிய மகஜர் ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவ்வமைப்பின் முக்கிய பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.