எமது தாயகம் அபகரிக்கப்படுகிறது – தீபச் செல்வன்

0
778

இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில் நாளும் பொழுதும் எங்கள் தாயகம் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம்.

நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ் மக்கள் தமது உரிமையைக் கோரத் தொடங்கிய காலத்தில் நில அபகரிப்புக்கள் இன்னுமின்னும் விரிவுபடுத்தப்பட்டன. ஏனெனில் உரிமை மறுக்கவும் ஒரு இனத்தை அழிக்கவும் நில அபகரிப்பே தகுந்த வழியென சிங்கள அரசுகள் நினைக்கின்றன.

இலங்கையில் ராஜபக்சே ஆள்வதனால்தான் ஜனநாயகமும் உரிமைகளும் ஷ்மறுக்கப்படுவதாக ஒருபோதும் சொல்லிவிட இயலாது. இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்படுகிறது. சிங்கள பௌத்த ஆட்சி ஒன்றை நிறுவுவதிலேயே இலங்கையை ஆட்சி செய்த எல்லா சிங்களப் பேரினவாதிகளும் அக்கறையாய் இருந்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் தமிழர் நிலத்தை அபகரிப்பதில் குறியாய் இருந்துள்ளனர். ஈழத்தின் கிழக்குப் பகுதி நிலஅபகரிப்பால் கிட்டத்தட்ட இழக்கப்பட்ட ஒரு மாகாணமாகிவிட்டது. அம்பாறை மாவட்டத்திலும் திரிகோணமலை மாவட்டத்திலும் பல தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இப்பொழுது அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கிராமங்களுக்குப் பின்னால் சிங்களக் கதைகளும் பௌத்தக் கதைகளும் புனையப்படுகின்றன.

theepach
திரிகோணமலையில் இருந்த கன்னியா வெந்நீரூற்று தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த இடங்களில் ஒன்று. அது இன்று சிங்கள பௌத்த அடையாளத்தால் முற்றாக மாறிப் போயிருக்கிறது. அங்கிருந்த தமிழ் பெயர்ப்பலகை நீக்கப்பட்டு தற்பொழுது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பெயர்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அந்தக் கிணற்றைத் தாக்கினார்கள் எனவும் அங்கிருந்த பௌத்த விகாரையை தாக்கினார்கள் எனவும் அதை புனரமைக்க நிதி உதவி செய்யும்படி சிங்களத்தில் எப்பொழுதும் ஒரு ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அங்கு பௌத்த விகாரை இப்பொழுதே அமைக்கப்படுகிறது. முன்பு அந்தப் பகுதியில் தமிழர்களே வசித்தார்கள். ஆனால் சிங்கள பௌத்த பிக்குகள் புலிகள் எதையோ அழித்தார்கள் என்று சொல்லி நிதி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரிகோணமலையில் நில அபகரிப்பின் உச்சம் அந்த நகரம்தான். திரிகோணமலை ஆலயம் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் உள்ள ஈச்சரம்தான் அந்த நகரத்தினது அடையாளம். அது திரிகோணமலைக்கு மாத்திரமல்ல கிழக்கு ஈழத்திற்கே பெருமையும் அழகும் தரும் மலையாக இருந்தது. இப்பொழுது அந்த மலையை மறைக்கும் அளவுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது திரிகோணமலை பௌத்த சிங்கள நகரத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. தமிழீழத்தின் தலைநகரமாக திருமலையை போராளிகள் அறிவித்தார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டபோதும் திரிகோணமலை தலைநகரமாகவே குறிப்பிடப்பட்டது. இதனால் தமிழர் தாயகத்தை நோக்கி நில அபகரிப்புகளை பெருமளவில் மேற்கொண்டுவரும் சிங்களப் பேரினவாதிகள் திரிகோணமலையை முற்றாக அபகரிக்க முற்றுகையிட்டுள்ளனர்.

இந்திய அரசின் அனல் மின்னிலையம் அமைப்பதற்காக திரிகோணமலையில் சம்பூர் பகுதி மக்கள் தங்கள் கிராமத்தை முற்றாக இழந்தனர். திருமலையில் சிங்களவர்கள் இருக்கக்கூடிய பகுதி ஒன்றில் அனல் மின்நிலையத்தை அமைக்காது தமிழ் மக்களின் நிலத்தில் அமைக்க திட்டமிட்டது அந்தப் பகுதி தமிழர் நிலம் என்பதனாலேயே. ஏனெனில் இலங்கை அரசபையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிப்பது அவ்வளவு எளிதானதாக மாறிவிட்டது. எப்படியாவது தமிழர் நிலத்தை அபகரிக்க வேண்டுமென்பதும் சிங்கள அரசின் திட்டம்.

2006ஆம் ஆண்டு சம்பூர் பகுதியிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் தொடங்கியது. நான்காம் ஈழ யுத்தத்தின் முதல் அகதிகள் சம்பூர் மக்கள். புலிகளிடமிருந்து சம்பூரையும் யுத்தக் கைதிகளாகவுள்ள மக்களையும் மீட்கவே யுத்தம் தொடங்கப்பட்டது என்று அப்பொழுது இலங்கை அரசு குறிப்பிட்டது.

ஆனால் இன்று ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் சம்பூர் மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்பவில்லை. உண்மையில் இலங்கை அரசு புலிகளின் பிடியிலிருந்து நிலத்தை மீட்கிறதா, இல்லை அபகரிக்கிறதா? எனவும் புலிகளிடம் பணயக் கைதிகளாக உளளனர் மக்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்கிறதா அல்லது அகதிகளாக்குகிறதா என்பதற்கு சம்பூர் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு. இலங்கை அரசின் கொடிய யுத்தத்தின் பின்னால் உள்ள அரசியலையும் விடுதலைப் புலிகள்மீது இலங்கை அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் சம்பூர் கதையும் அம்பலமாக்குகிறது.

வடக்கும் கிழக்கும் விரும்பினால் இணைய ராஜபக்சே அனுமதியளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முதல்வர் விக்கினேஸ்வரன் அண்மையில் பேசிய போது சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளும் கடுமையாக கொந்தளித்தார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்தால் அது தமிழீழம் ஆகிவிடும் என்று சிங்களப் பேரினவாதிகளுக்கு அச்சம். எந்த அதிகாரமுமற்ற வடக்கு மாகாண சபையையே தமிழர்கள் ஆள்வதையே பாதித் தமிழீழம் எனக் கருதும் சிங்கள இனவாதிகள் தமிழர்களின் தாயகம் என்ற ஒன்று இருகக்கூடாது அங்கும் சிங்களவர்கள் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் எல்லைப் பகுதிகள் பலவற்றில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் நிலத்தை அபகரிக்கும் சிங்கள மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் வடக்கு கிழக்கு எல்லைகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் ஏராளம். அண்மையில் வடக்கு கிழக்கு எல்லையில் உள்ள தென்னைமரவாடி என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் மணலாறு வழியாக முதன் முதலாகச் சென்றேன்.

விடுதலைப் புலிகள் மணலாற்றை தனி மாவட்டமாக அறிவித்தார்கள். ஈழத்தின் இருதயபூமி என்று மணலாற்றை ஈழத் தமிழர்கள் அழைப்பார்கள். 1983முதலே மணலாறு சிங்கள இராணுவத்தின் வசம் உள்ளது. மணலாற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல தடவைகள் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

ஆனால் மணலாற்றை புலிகள் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக முழுபலத்தையும் பாவித்து சிங்கள இராணுவம் பாதுகாத்தது. சிங்கள அரசு ஈழத் தமிழர்களின் இருதய நிலத்தில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை நடத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற வரலாற்றை அபகரிப்பின் மூலம் மறைத்துவிடும் என்பதற்காகவே புலிகள் மணலாற்றைக் கைப்பற்ற தாக்குதல்களை தொடுத்தனர். தமிழர் தாயகக் கோட்டை சிதைக்கவும் வரலாற்றை திரிவுபடுத்தவும் தமிழரின் எண்ணம் நிறைவேறக்கூடாது எனவும் அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு சிங்கள அரசு மணலாற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இன்று மணலாறு சிங்கள பூமியாக மாறிவிட்டது.

தமிழ்மக்கள் தெற்கில் வாழ்ந்த இடங்கள் எல்லாம் சிங்களமயமாகிவிட்டது. கதிர்காமம் ஆலயம் தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்பொழுது கதிர்காம என இக்கோவில் அழைக்கப்படுவதுடன் இந்த ஆலயப் பூசகர் முதல் நிர்வாகம் எல்லாமே சிங்களவர்களிடம் சென்றுவிட்டது. புத்தளத்தில் அழகிய தமிழ்ப் பெயர்களுடன் உள்ள கிராமங்கள் பல இன்னமும் இருக்கின்றன. மதுரங்குளி, பலாவி, உடப்பு என்று பல கிராமங்கள் உள்ளன. புத்தளம், சிலாபம், அனுராதபுரம் எல்லாமே தமிழ்ப் பெயர் கொண்ட கிராமங்கள். இவை எல்லாமே சிங்கள தேசமாகிவிட்டது.

பொலநுருவையில் உள்ள சிவன் ஆலயம் அழிந்து எச்சக்காடாக இருக்கிறது. சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பொழுது அமைக்கப்பட்டது அந்த ஆலயம்.

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாக இருந்தபோதும் சிங்களவர்கள் குடியேறி வசிக்கும் பெரும்பாலான இடங்களை நோக்கிச் செல்லவும் இல்லை. அவற்றை கோரவும் இல்லை. ஆனால் சிங்களவர்கள் தமிழர்கள் காலம் காலமாக பெரும்பான்மையாக வசித்து வந்த ஆட்சி செய்து வந்த, தமிழர்கள் கோரிய வடக்கு கிழக்கு தாயகப் பகுதியை – நோக்கி தொடர்ந்தும் படையெடுத்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் பொலநுருவையை கேட்கவில்லை. புத்தளத்தையும் கேட்கவில்லை. ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகத்தையும் கடந்து வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதியை சிங்கள இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். நாவற்குடியில் சிங்களவர்கள் குடியேறியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழர்களின் பூமி. அங்குள்ள வீடுகள் எல்லாவற்றையும் இராணுவத்தினர் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் அண்மையில் அந்தப் பகுதிக்குச் சென்றேன். எங்கள் மக்கள் வாழ்ந்த வீடுகள் அழிக்கப்படுவதைப் பார்த்த பொழுது தாங்க முடியாத சோகம் மட்டுமே மிஞ்சியது. அங்குள்ள வீடுகள் அழிக்கப்பட்டு அவற்றின்மீது சுற்றுலா விடுதிகள் கட்டப்படுகின்றன. தனித்துவமும் அழகும் கொண்ட அந்த வீடுகள் அழிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியிலிருந்து 24 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் துரத்தப்பட்டார்கள். அந்த மக்கள் இப்பொழுது அகதிமுகாங்களிலும் தெருக்களிலும் அலைகின்றனர். தமது நிலத்தை விடுவிக்குமாறு போராடும் மக்கள்மீது இராணுவம் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. யாழ் வலி வடக்கை விடுவிப்பது ராஜபக்சேவின் கையிலேயே உள்ளது என்று சிங்கள அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் சொல்லுகிறார்.

புலிகள் தொடர்பாகவும் பிரபாகரன் தொடர்பாகவும் பேசிக்கொண்டிருக்கும் பலருக்கு ஈழத்து நிலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து ஏன் பேச இயலவில்லை? இன்றைய ஈழச் சூழலில் எது அவசியம்? ஈழத்தில் இன்று நிகழ்வது நிலத்தை அபகரிக்கும் போரல்லவா? ராஜபக்சே நல்லிணக்கம், ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டு நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் சிலர் ஈழம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகள் குறித்து தமது விமர்சனங்களை வைத்து ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாட்களில் இந்தளவுக்கு நில அபகரிப்புக்கள் நடைபெறவில்லை. புலிகளின் ஆட்சி இல்லை என்றால் இன்று இருக்கும் பல பகுதிகளை நாம் இழந்திருக்கககூடும்.

சிங்களவர்கள் விரும்பி காணிகளை விலைக்கு வாங்கி தமிழ் ஈழத்தில் குடியேறுவதை தமிழர்கள் எதிர்க்கவில்லை. தமிழர்களின் தாயகத்தை அழிக்க வேண்டும் அபகரிக்க வேண்டும் என்று சிங்கள அரசின் திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வலிந்த சிங்களக் குடியேற்றங்களையே எதிர்க்கிறார்கள். தமிழ்மக்களின் நிலங்களை பறித்து அவர்களை அகதியாக்கி அவர்களின் நிலத்தில் இராணுவத்தையும் சிங்களவர்களையும் குடியேற்றுவதையே தமிழ்மக்கள் எதிர்க்கிறார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு குற்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை தமிழ்மக்கள் மத்தியில் இதுவே மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை என்பது முடிந்துபோன ஒன்றல்ல. ஈழத்தில் இன்னமும் பல வடிவங்களில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இனத்தை அழிக்கவே நில அபகரிப்பை சிங்கள அரசு பெருமெடுப்பில் செய்து கொண்டிருக்கிறது. இனக்கொலை எத்தகைய குற்றமோ அவ்வாறே நிலத்தை அபகரிப்பதும் குற்றமே. நடந்த இனப் படுகொலைக்கு தீர்வை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஆனால் இன்னமும் இனப்படுகொலையை நிறுத்தாமல் அதைத் தொடர்ந்தும் செய்வனே செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே இதையே தமிழர்களுக்கு பரிசளிக்கப்பட்ட இனநல்லிணக்கம் எனவும் சமாதானம் எனவும் பேசிக்கொண்டிருப்பது எத்தகைய அநீதி?.

நன்றி: தீராநதி