வடமாகாண சபையினர் நீண்ட காலத்திற்குப் பின்னர் அபிவிருத்தி சார்ந்த ஆக்கபூர்வமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்.

 

sivachவட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டிருந்த “முல்லைத்தீவு – காங்கேசன்துறை வரை கரையோர வீதி” அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானமே அதுவாகும். அத்தீர்மானத்தை உறுப்பினர்கள் பலரும் வரவேற்றார்கள் என்பதும் வரவேற்புக்குரியதே.

 

தமிழர் தாயகத்தின் வரலாற்று ரீதியான – பாரம்பரிய வீதிகள் இரண்டு. ஒன்று பூநகரியில் இருந்து மன்னார், புத்தளம், நீர்கொழும்பு என மேற்குக் கரையோரமாக சென்ற வீதி. கால்நடையாகவும் மாட்டு வண்டில் ஊடாகவும் மாதக்கணக்காக அக்காலத்தில் எமது மக்கள் கதிர்காமப் பயணமேற்கொண்ட வீதியே இதுவாகும்.

 

இரண்டாவது பருத்தித்துறையிலிருந்து தாளையடி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என கிழக்குக் கரையோரமாக கதிர்காமத்திற்கு பயணம் மேற்கொண்ட வீதி.

 

இவ்வீதிகளை ஆங்கிலேயர்களைக் கொண்டு அல்லது பின்வந்த சிங்கள ஆட்சியாளர்களைக் கொண்டு எமது பாரம்பரியத் தமிழ் தலைமைகள் பெருவீதியாக அமைத்திருப்பார்களேயாயின் நாம் தமிழர் நிலப்பரப்பை இழந்திருக்கமாட்டோம் என்பது திண்ணம்.

 

மேற்குக் கரையில் அமைந்த நீர்கொழும்பு, புத்தளம் எனும் தமிழ்;ப்பகுதிகள் சிங்கள மயமாகியதற்கும் கிழக்குக்கரையோரம் தொக்கிளாய், அம்பாறை போன்ற தமிழ்நிலம் பறிபோனமைக்கும் எமக்கான இவ்வீதிகள் அன்று தீர்க்கதரிசனமாக தீர்மானிக்கப்பட்டு அமைக்கப்படாமையே பிரதான காரணமாகும்.

 

உண்மையில் ஏ9 வீதி தமிழ் நிலத்தை இணைக்கும் வீதி அல்ல. அது அதனைத் துண்டாடும் வீதியே.

 

முல்லைத்தீவு – காங்கேசன்துறையை இணைப்பது மாத்திரமல்ல உண்மையில் மேலே குறிப்பிட்ட எமது பாரம்பரிய தமிழர் நிலப்பரப்பை இணைக்கும் வீதியை நெடுஞ்சாலையாக கரையோரம் முழுவதையும் இணைத்து அமைத்திடவும் கூடவே தொடருந்து பாதைகளையும் கிழக்கு, மேற்கு கரையோரம் சார்ந்து வட்ட வடிவில் அமைக்கவும் நாம் பாரிய வீதி அமைப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

 

இவ்வசதி ஏற்படுத்தப்படின் தமிழ் நிலம் தமிழ் மக்களது குடியிருப்பின் வளர்ச்சியாலும் திட்டமிட்ட வகையிலான தமிழர் குடியேற்றத் திட்டங்களாலும் எமது தாயகமாகத் தொடரும்.இல்லையேல்…..?

 

வடமாகாண சபை புத்திசாலித்தனமாக இதனைக் கருத்திற் கொள்ளுமா?