northஇராணுவத்திற்கு எதிராக வடக்கு இளைஞர்கள் அகிம்சை வழி ஆர்ப்பாட்டம்.

 

ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களின் ஏற்பாட்டினால், வவுனியா குடியிருப்பு நகர இராணுவ முகாமையும், ஓமந்தை சோதனைச்சாவடி இராணுவ முகாமையும் அகற்றக் கோரி நேற்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது வாயைக் கறுப்புத் துணியால் கட்டி பேரணியாக வந்து வவுனியா குடியிருப்பு இராணுவ முகாமுக்கு முன்னால் கோசமிட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் குறித்த முகாமிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

 

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் இவ்முகாமில் இருப்பதுடன்; இங்கே பொது நோக்கு மண்டபம், சிறுவர் பூங்கா மற்றும் அருகில் பாடசாலையும் உள்ளநிலையில் இவ் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டியது அவசியம் என ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

இதன்பின்னர், காலை 11.00 மணிக்கு ஓமந்தை சோதனைசாவடி இராணுவமுகாம் முன் பேரணியாக சென்ற வடக்கு இளைஞர்கள்;

 

‘எமது வீடே எமக்கு வேண்டும் முகாமல்ல’, இராணுவமே நீங்கள் வியாபாரிகளா? பாதுகாப்பு படையினரா?’இ அதிகாரமுடையது இராணுவமா? அரசாங்கமா?’, மைத்திரி ரணில் அரசே எம் நிலங்களுக்கு பதில் என்ன? போன்ற பதாதைகளுடன் கோசமிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.

 

தனியார் காணியில் இராணுவ சோதனை நடவடிக்கைக்காக 20 வருடங்களுக்கு மேலாக அமைக்கப்ட்டுள்ள இந்த இராணுவமுகாமை அகற்றுமாறு கோரியும் ஓர் நியாயமானதும் நீதியுமானதுமான விசாரணைகள் மூலம் இராணுவம் கையகப்படுத்திய நிலங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்

 

அத்துடன் திடீரென ஏ 9 வீதியினை மறித்தும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக வாகனபோக்குவரத்துகளும் சிறிது நேரம் தடைப்பட்டதுடன் உடனே அங்கிருந்த பொலிசார் ஆர்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் எட்டுக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

 

1. எந்தவொரு சட்ட நியதிகளும் இன்றி இராணுவம் கையகப்படுத்திய மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், பொதுச் சொத்துக்களையும் இராணுவம் தான்தோன்றி தனமாக கைப்பற்றியுள்ளதை வன்மையாக கண்டிக்கும் நாம் அதனை உடனடியாக உரியவர்களிடம் மீளவும் கையளிக்க கோருகின்றோம்.

 

2. திரும்ப திரும்ப எமக்கே உரித்தான எமது நிலங்களை பறிப்பதையும் எமது சொத்துக்களை சுரண்டுவதையும் உடன் நிறுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

 

3. ஓர் நியாயமானதும் நீதியுமானதுமான விசாரணைகள் மூலம் இராணுவம் கையகப்படுத்திய நிலங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல் வேண்டும். இந்த நீதி விசாரணையானது ஓர் பொருத்தமான சுதந்திரமான விசாரணையாக அமைந்திருத்தல் வேண்டும்.

 

4. நிலங்களை கையகப்படுத்துவதில் இடம்பெற்ற அதிகார துஸ்பிரயோகங்களை பற்றிய நீதி விசாரணைகளின் ஊடாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வெளிப்படுத்தப்படல் வேண்டும்

 

5. காணி மீளளிப்பு தொடர்பில் அரச தலைமைகளும், இராணுவமும் இணைந்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

6. மக்களின் காணி உரிமைகளில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்த்து மக்களுடன் கலந்துரையாடி நீதியான முறையில் முடிவுகளை முன்னெடுக்க வேண்டும்.

 

7. காணி உரிமைகளில் நிகழும் துஸ்பிரயோகங்கள், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்றவற்றை ஆராய்ந்து மீளவும் இவ்வாறான காணி அபகரிப்புகள் நிகழாது தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

8. காணி தொடர்பான முரண்பாடுகள் மற்றும் பிரச்சனைகளில் தேவையான நடவடிக்கைகளை இனியும் சாலம்

 

தாமதிக்காது முன்னெடுப்பதன் ஊடாக எமது நிலம் எமக்கே கையளிக்கப்படல் வேண்டும்.
என தெரிவித்தனர்.