சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் உற்ற தோழன் மலேசியா, சிறீலங்கா அரசு மேற்கொண்ட மற்றும் மேற்கொண்டுவரும் இனப்படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், மனித உரிமைமீறல்கள் போன்றவற்றில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக உலகின் பல நாடுகளுக்கும் தமிழ் மக்கள் தப்பிச் சென்றபோதும், அந்த அப்பாவி மக்களை மீண்டும் சிறீலங்கா அரசிடம் ஒப்படைத்து தனது தமிழ் இன விரோதப் போக்கை மலேசியா தொடர்ந்து காண்பித்தே வருகின்றது. ஆனால் உலகில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது தான் இங்கு வருத்தமானது.

MH-17-wing
இந்த சம்பவங்களுக்கு நடுவே மலேசியா தொடர்பான செய்திகள் உலக ஊடகங்களில் தொடர்ச்சியாக சில மாதங்கள் பேசப்பட்டே வருகின்றது. மலேசியா அரசின் விமான சேவைநிறுவனம் சந்தித்த தொடர் பேரனர்த்தங்களே அதற்கான காரணம். கடந்த மார்ச் மாதம் 8 ஆம் நாள் கோலலம்பூரில் இருந்து சீனாவுக்கு 239 பேருடன் பயணித்த மலேசியன் விமானசேவை நிறுவனத்தின் எம் எச் 370 என்ற போயிங் 777 -200 ரக விமானம் இந்து சமுத்திரபிராந்தியத்தில் காணாமல் போயிருந்தது.

இன்றுவரை அந்த விமானம் தொடர்பான தகவல்களை அறிய முடியவில்லை. அதன் கறுப்பு பெட்டியின் மின்கலத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் விமானத்தை கண்டறிவது என்பது இயலாத ஒன்றாகிவிட்டது. சீனாவும், அவுஸ்திரேலியாவும் கறுப்பு பெட்டியின் சத்தம் கேட்பதாகவும் அவை வௌ;வேறு திசைகளில் உள்ளதாகவும் முன்னர் தெரிவித்தபோதும், அவை இரண்டும் ஒருவர் மற்றவரது கப்பலின் ராடர் சமிக்கைகளை விமானத்தின் கறுப்பு பெட்டியின் சமிக்கை என நம்பியது தான் இங்கு வேடிக்கையானது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (17) நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் இருந்து கோலலம்பூருக்கு 298 பேருடன் பயணித்த மலேசியன் விமானசேவை நிறுவனத்தின் எம் எச் 17 என்ற போயிங் 777-200 ரக விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 4 மணிநேரத்தில் கிழக்கு உக்ரேன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முற்பகுதியில் ரஸ்யாவின் அண்டைய நாடான உக்ரேனில் மேற்குலகம் தமது ஆதிக்கத்தை கொண்டுவரமுற்பட்டவேளை அங்கு ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் அங்கு ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிரைமியா பகுதியை ரஸ்யப் படைகள் கைப்பற்றியதுடன், அதனை ரஸ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பையும் ரஸ்யா நடத்தியிருந்தது. இந்த வாக்கொடுப்பை மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதும், அந்த பிரதேசம் தற்போது ரஸ்யாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது போராளிகள் குழுக்களை உருவாக்கி உக்கிரையில் ஒரு உள்நாட்டுப் போரையும் ரஸ்யா ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உக்ரேன் பகுதியில் உள்ள பல பகுதிகளை ரஸ்யா ஆதரவு படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், இரு தரப்பும் கடுமையான மோதல்களிலும் ஈடுபட்டுவருகின்றன. நேற்று முன்தினமும் இரு தரப்பும் ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் மோட்டர்களை கொண்டு கடுமையாக மோதிக்கொண்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.

இதுவரை ஏறத்தாள 5 படைத்துறை விமானங்களை ரஸ்ய ஆதரவுப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஆனால் மனிதர்களால் இலகுவாக காவிச்செல்லப்படும் சாம் (SAM-7) ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளினாலேயே இந்த விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. 3,500 மீ தூர வீச்சுக்கொண்ட இந்த ஏவுகணையானது இலகுவாக கறுப்புச்சந்தைகளில் கொள்வனவு செய்யப்படக்கூடியது. எனினும் ரஸ்ய ஆதரவுப்படையினருக்கான ஆயுத வினியோகங்களை ராஸ்யாவே மேற்கொள்ளவதாக மேற்குலகம் குற்றம் சுமத்திவருகின்றது.

buk-missile
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மலேசியா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதானது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாதாரண இலகுவாக காவிச்செல்லும் சாம் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் தூரவீச்சிற்கு எட்டாத உயரத்தில் வைத்து இந்த விமானம் சுடப்பட்டுள்ளது. 33,000 (10 கிமீ) அடி உயரத்தில் பறந்த விமானத்தை தாக்கிய ஏவுகணையானது ரஸ்யா தயாரிப்பான நடுத்தர வீச்சுக்கொண்ட புக் (BUK-M1) அல்லது SA-11 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் உதவி இன்றி இந்த ஏவுகணையை வாங்கவோ அல்லது இயக்கவோ முடியாது, எனவே ரஸ்ய இராணுவமே இந்த ஏவுகணையை ரஸ்ய ஆதரவுப்படையினருக்கு வழங்கியதாக மேற்குலகமும், உக்ரேனும் குற்றம் சுமத்திவருகின்றன. ஆனால் உக்ரேன் படையினர் தான் இந்த வகை ஏவுகணைகளை ரஸ்ய ஆதரவுப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அண்மையாக நகர்த்தியிருந்தாக ரஸ்ய ரூடே தகவல் வெளியிட்டுள்ளது. எனவே உக்ரேனே இந்த தாக்குதலை நடத்தியதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வகை ஏவுகணையானது, ரஸ்ய மற்றும் உக்கிரேன் படையினர் வசம் உள்ளதாகவும், அண்மையில் உக்ரேனின் படைத்தளம் ஒன்றைக்கைப்பற்றிய ரஸ்ய ஆதரவுப்படையினர் இந்த வகை ஏவுகணைகளை கைப்பற்றிச் சென்றதாகவும் அதனையே அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் த ஜேன்ஸ் பாதுகாப்புத்துறை வாரஏட்டின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரடார் மூலம் இலக்கை கண்டறிந்து அதன் தூரத்தை துல்லியமாக கணித்து தாக்குதலை மேற்கொள்ளும் 11 தொடக்கம் 25 கி.மீ தூரவீச்சுக்கொண்ட இந்த வகை ஏவுகணைகளை சாதாரமான வீரர்கள் இயக்கமுடியாது, ரஸ்யப் படையினரே அதற்கு உதவியிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் வான்படையை முற்றாக முடக்கும் நோக்கத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஆதரவுப்படையினர் தவறுதலாக இந்த விமானத்;தை தாக்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. 33,000 அடி உயரத்தில் மணிக்கு 900 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானத்தை சாதாரண கண்களால் அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. எனவே உக்ரேனின் இராணுவ சரக்கு விமானங்களையும், பயணிகள் விமானங்களையும் வேறுபிரித்து அறிவது கடினம்.

இதனிடையே, தமது வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு ரஸ்ய ஆதரவுப்படையினர் தடை விதித்தித்திருந்தகவும் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரேனின் கிழக்கு பகுதியில் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படுவதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் தமது பயணிகள் விமானத்தின் பதையை மாற்றி அமைத்திருந்தன.

map
ஆனால் மலேசியா விமானம் ஏன் தொடர்ந்து இந்த ஆபத்தான பதையை பயன்படுத்தியது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாது, கடந்த 15 மற்றும் 16 ஆம் நாட்களில் கிழக்கு உக்கிரேன் பகுதியை சற்று தவிர்த்து வந்த விமானத்தை 17 ஆம் நாள் அந்த பாதையால் வழிநடத்தியது யார்? (படத்தில் பார்க்க) என்ற கேள்வியையும் ரஸ்ய ஊடகம் முன்வைத்துள்ளது.

இந்த பிரச்சனையை முன்வைத்து ரஸ்யா மீது அதிக அழுத்தங்களை மேற்கொள்ளவும், அங்கு அனைத்துலக சமூகம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை என்ற போர்வையில் களமிறங்கவும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தனது முழு வழங்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ரஸ்ய ஆதரவுப்படையினரே காரணம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். முழு அளவிலான அனைத்துலக விசாரணைகள் தேவை எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். விசாரணைக்குழுவை ரஸ்ய ஆதரவு படையினர் அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

முழு அளவிலான விசாரணைக்கான கோரிக்கையை ஐ.நாவின் பாதுகாப்புச்சபையும் அவசர அவசரமாக முன்வைத்துள்ளது.

எனவே எம்எச்-17 விமானத்தின் அனர்த்தம் தொடர்பில் மனித நேயம் மற்றும் நீதி குறித்து; பேசிவரும் மேற்குலகத்தின் பேச்சுக்களில் அனுதாபத்தை விட அரசியல் நெடியே அதிகம் வீசுவதை காணமுடிகின்றது.

ஈழம்ஈநியூஸ்இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.

தொடர்புகளுக்கு: arushrp@gmail.com