எழுவர் விடுதலை; எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்…

0
593

santhanஇந்திய வரலாற்றின் கருப்புச்சட்டங்களினால் காலம் கடந்தும் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் கதை நாம் எல்லோரும் அறிந்ததே!

 

தினமும் ஏதாவதொறு பத்திரிக்கையின் ஒரு மூலைப்பகுதியையாவது இந்த ஏழுபேரைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கும். காலம் காலமாக நாம் இந்தசெய்திகளை படித்துக்கொண்டுவருகின்றோம். கண்ணீர்விடுகின்றோம் கலங்கித்தவிக்கின்றோம். எனினும் அவர்கள்இன்னும் விடுவிக்கப்படவில்லை,

 

இத்தனை காலமாக அவர்களை சிறையில் அடைத்துவைக்கும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் பாரியதா? அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிறுபிக்கப்பட்டதா? உண்மையில் அந்தக்குற்றங்களில் இவர்கள் சம்மந்தப்பட்டவர்களா? போன்ற கேள்விகள் எம்முன்னே இருக்கின்றது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது தற்கொலைத்தாக்குதல் செய்த பெண் ராஜீவுடனேயே இறந்துவிட்டார். அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தார்கள் தாக்குதலை திட்டமிட்டார்கள் என்று கருதப்படும் சிவராசன் உற்பட பலர் இந்தியப்பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டார்கள். அப்படியிருக்க இந்த அப்பாவிகளை ஏன் சிறையில் வைத்திருக்கின்றனர்?

 

குற்றம்சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனிடம் முதல்வாக்குமூலம் வாங்கிய புலனாய்வு அதிகாரி திரு,தியாகராஜன் IPS அவர்கள் அன்று பேரறிவாளனிடம் வாங்கிய வாக்குமூலம் உண்மையானது அல்ல அது திரிபுக்கு உற்பட்டது என்று தானே தன் வாயால் ஊடகங்களுக்கு சொல்லியிருக்கின்றார், அப்படியானால் அவ்வாறுதானே குற்றம் சாட்டப்பட்ட மற்றையவர்களான முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் போன்றவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கும்?

 

தவரான வாக்குமூலம் ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட தண்டனையும் தவரானதாகத்தானே இருக்கும்? அரசாங்கங்களும் சரி அதிகாரிகளும் சரி ஏன் இந்த உண்மையினை உணர்ந்துகொள்ள மறுக்கின்றனர்? கொலைக்கு தண்டனை என்றதைவிடுத்து வெறும் அரசியல் காரணங்களுக்காகத்தான் இவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனரா?

 

ஏறக்குறைய 24 ஆண்டுகளாக அவர்கள் தொடர் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர். இது ஒரு மனிதனின் சராசரி ஆயுளின் மூன்றில் ஒரு பங்குக்காலம். ஒரு மனிதனின் இளைமையின் காலம் இதைவிட குறுகியது. அவர்கள் வாழ்வின் மொத்த இளைமையினையும் சிறையில் கழித்துவிட்டார்கள்.

 

நாமும் 25 வருடங்களாக அவர்களின் விடுதலைக்காக போராடிவருகின்றோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் போராட்டங்கள் சின்னச்சின்ன அளவிதான் இடம்பெற்று வருகின்றது. அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும்போது போராடுகின்றோம், பின் அடுத்த தேதி குறித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாமும் போராட்டத்தை ஒத்தி வைத்துவிடுகின்றோம். இதுதான் இத்தனை காலமும் நடந்துகொண்டுவருகின்றது.

 

உயர் நீதிமன்றம் அவர்களின் தண்டனையினை ஆயுள்தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியதோடு மாநில அரசு தன் அதிகாரத்தை பிரயோகித்து அவர்களை விடுதலை செய்ய விரும்பினால் விடுதலை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தது. அதை ஏற்று தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலைசெய்ய தீர்மானம் கொண்டுவந்தது.

 

எனினும் அந்த தீர்மானத்திற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து விடுதலையினை நிறுத்திவைத்திருக்கின்றது. இதிலிருந்து ஒரு விடயம் எமக்கு புலனாகின்றது சட்ட பிரச்சனைகளை விட அரசியல் பிரச்சனையே இந்த எழுவர் விடுதலை விடயத்தில் முன்னிற்கின்றது என்று.

 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் இறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அப்படியிருக்க சட்டமன்றத்தில் விடுதலை தீர்மானத்தை கொண்டுவந்த தமிழக அரசு 161 ம் விதிகளின் பிரகாரம் அவர்களை விடுதலைசெய்ய ஏன் முயற்சிக்கவில்லை?

 

உண்மையில் தமிழர்கள்நாம் இவர்கள் விடயத்தில் தமிழ்நாடு அரசுக்கு சரியான ஒரு அழுத்தத்தை வழங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கின்றது எங்கள் போராட்டங்கள் ஒன்றுதிரண்டு ஒரு மாபெரும் போராட்டமாக மாற்றம்பெறவில்லை. இவர்களின் விடுதலை விடயத்தில் புலம்பெயர் சமூகமும் தமிழ் அமைப்புக்களும் ஊக்கமுடன் செயற்படவில்லை.

 

புலம்பெயர் நாடுகளில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச ரீதியான அழுத்தங்களை இந்திய அரசுமீது பிரயோகிக்க வழிசெய்யவேண்டும். இந்தியாவில் இருக்கும் அரசியல் பிரமுகர்களுடன் இவர்கள் விடுதலைதொடர்பாக பேசி ஒரு நல்ல முடிவினை பெற்று அவர்களை விடுதலை செய்ய முயற்சிக்கவேண்டும்.

 

அவர்கள் எங்கள் உறவுகள் எங்கள் இரத்தங்கள். அவர்களுக்காக புலம்பெயர் தேசத்தில் நாமும் தமிழகத்தில் எம் உறவுகளும் என ஒன்றினைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை மறுக்கப்படும் நீதியின் பெயரால் முன்னெடுக்கவேண்டும்.

 

இவ்வாறு ஒரு வெற்றிகரமான போராட்டம் முன்னெடுக்கப்படுமானால் எழுவர் விடுதலை சாத்தியமாவதோடு இலங்கைச்சிறைகளில் வாடும் எம்மவர்கள் விடுதலையும் சாத்தியமாகும்.

 

எனினும் ஒன்றினையுமா எம் சமூகம்? எம்மவர்கள் விடுதலை எதிர்காலத்தில் சாத்தியமாகுமா? இவை என்னுள் தொக்கி நிற்கும் கேள்விகள்…

 

எம்மவர் வாழ்வின் விடுதலையினை எதிர்பார்த்து நிற்கும்

 

என்றும் இவள்;
சந்திரிக்கா!
26/01/2016