எழு தமிழா ! இனி எங்கள் காலம்!

0
611

france-20logoகழுத்தை இறுக்கும் சர்வதேச அழுத்தங்களினால் மூச்சுத் திணறத் தொடங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு. ஐ.நா. மனிதவுரிமைகள் அவையில், சிறிலங்கா அரசுக்கு எதிரான மூன்றாவது தீர்மானம் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படுவது உறுதிசெய்யப்பட்டு சிறிலங்கா அரசுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச போர்க் களத்தில் தமிழர்களை எதிர் கொள்ள, சர்வதேச ஆதரவினைத் தமக்கு சார்பாகத் திரட்ட, நாடுநாடாக அலைந்து கொண்டிருக்கிறது சிங்கள தேசம். ஐ.நா. அவையில் இந்தத் தடவையும் என்ன குண்டு வெடிக்குமோ? என அலறிக்கொண்டிருக்கிறார் அரசு தலைவர்.

இந்நிலையில் 66 ஆவது சுதந்திரதினம் என்பது சிறிலங்கா அரசுக்கு உண்மையான சுதந்திரதினமாக அமையுமா என்பது கேள்விக்குறியே! பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு உரிமைகளை வழங்காது, சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆட்சி அதிகாரங்களை கைமாற்றிவிட்டு அகன்ற, கரிநாளாகவே தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திரதினத்தைப் பார்க்கிறார்கள். சிறிலங்கா சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்களை கொன்றொழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்ப்பட்டது, செயற்பட்டுக் கொண்டும் இருக்கிறது சிங்கள அரசு.

2009 ஆம் ஆண்டு மாபெரும் தமிழர் இனப்படு கொலையை நிகழ்தியதன் மூலம் தனது உண்மையான கோர முகத்தை உலகுக்கும் வெளிப்படுத்தியுள்ளது. இனப்பிரச்சனைக்கான உண்மையான காரணங்களையும், இன அழிப்பிற்கான ஆதாரங்களையும், ‘அபிவிருத்திக்குள்’ புதைத்துவிடலாம் எனறு சிறிலங்கா அரசு தீவிரமாகப் பிரயத்தனப்படுகிறது. ஆயினும் உலக அளவில் தமிழர்களால் முன்னெடுக்கப்டும் அரசியல் முயற்சிகள், சனல் 4 போன்ற சர்வதேச ஊடகங்களின் செயற்பாடுகள், யேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு போன்ற பல காரணிகளால் கொஞ்சம் கொஞசமாக சிறிலங்கா அரசு தப்பவே முடியாத அளவிற்கு சர்வதேச விசாரணைக் கூண்டினை நோக்கித் தள்ளப் பட்டுக்கொண்டே இருக்கிறது.சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச தீர்மானம் என்பது தமிழர்களுக்கான உண்மையான நீதியினை வழங்க வேண்டும்.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான தீர்வாக அமைதல் வேண்டும். குறைந்தபட்சம் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கக் கூடிய வகையில் வாசல்களையேனும் திறந்துவிட வழிவகுக்க வேண்டும்.தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற நாடுகளே, போர் முடிந்த பின்பு முரண்டுபிடிக்கும் சிங்களத்தை வழிக்குக் கொண்டுவர ‘எங்களை வைத்தே’ சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் ஆடுகிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

அதுவா ஈழத்தமிழனின் வரலாற்றுப் பாத்திரம்? சர்வதேச தீர்மானங்ளை எங்கள் நலன் சார்ந்த தீர்மானங்களாக எப்படி மாற்றப் போகின்றோம்? அது நிச்சயமாக எங்களால் முடியும்! எங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பிளவுகளை பிரிவுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தமிழர்கள் என்னும் தேசிய ஒருமைப்பாடோடு பேரெழுச்சி கொள்வோமாக இருந்தால் அது சாத்தியமே! நாம் ஒரு போதும் எதிரியோடு போரிட்டுத் தோற்றதில்லை. எங்களுக்குள் புரையோடியிருக்கும் ‘ஒற்றுமையின்மை’ என்னும் பலவீனத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியே எதிரியால் நாம் வீழ்த்தப்பட்டோம்.

அந்த வழிமுறையே புலம் பெயர் தேசங்களிலும் கையாள்வதற்கு எதிரி முயற்சிக்கிறான் அதற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது!இலட்சக்கணக்கான மக்களையும், பல ஆயிரக்கணக்கான போராளிகளையும் உயிர்ப்பலி கொடுத்தே எமது போராட்டம் ‘சர்வதேச மயப்படுத்தப்பட்ட’ நிலையினை எட்டியுள்ளோம். இதற்காக நாம் கொடுத்த விலைகளோ கொஞ்ச நஞ்சமல்ல. ஈகங்களினால் நிரம்பி வழிகிறது நம்தேசம்! வீரமரணததை தழுவியபோதும், களமாடி வீழ்ந்தபோதும் இலட்சித்தை உயர்த்தியே பிடித்திருந்தார்கள் நம் மாவீரர்! ஒருபோதும் எதிரியோடு அவர்கள் சமரசம் செய்து கொண்டதில்லை. அவர்கள் தோற்றாலும் இலட்சியததை ஒரு போதும் தோற்கடிக்க அனுமதித்தில்லை. இன்னும் நிறைவேறாத எம் இலட்சியக்கனவு எங்கள் எல்லோரிடமுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றுவது எம் கடமை! அதனைச் செய்யவில்லை எனில் மரணித்த மக்களும், விதைக்கப்பட்ட மாவீரர்களும் ஒரு போதும் எங்களை மன்னிக்க மாட்டார்கள். அன்பான மக்களே! எதிர்வரும் மார்ச்சு மாதம் 10 ஆம் திகதி, ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உங்கள் ஒவ்வொருவரினதும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக்கொள்கின்றோம். எடுக்கப்படவிருக்கும் தீர்மானம் எங்கள் நலன் சார்ந்ததாக மாற்றுவதற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் பெரும் எதிர்பார்ப்பாகும்.

அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம். சர்வதேச அரசியல் போர்க்களத்தில் சிறிலங்காவை தோற்கடித்தார்கள் தமிழர்கள் என்ற புதிய வரலாற்றை நாம் எழுதுவோம்!அதற்கான முதல் போராட்டக் களமாக பெப்ரவரி 4, சிறி லங்கா சுதந்திர தினத்தன்று – அந்த தினத்தை கரி நாளாக- சிறி லங்கா சுதந்திர தினத்தை கண்டித்து நடக்கும் போராட்ட களத்தில் ஒன்றுகூடுவோம்.

ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழமக்கள் பேரவை –