எம் எஸ் எஸ் பாண்டியனின் மறைவு ஈழத்தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த மூத்த திராவிடர் இயக்க ஆய்வாளரும் சமூக ஆய்வறிஞருமான பேராசிரியர் எம். எஸ் எஸ் பாண்டியன் நேற்று சுகவீனம் காரணமாகக் காலமானார்.

pandian-passes-away-600
இந்தியாவின் பிரசித்தி பெற்ற இதழான “எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” இதழில் 1980களிலிருந்தே ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்த பாண்டியன் பொருளாதாரத்துறை மட்டுமின்றி பண்பாட்டு ஆய்வுத்துறையிலும் தனது அக்கறையைச் செலுத்தினார்.

பேராசிரியர் எம். எஸ் எஸ் பாண்டியனின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு – குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

ஏனென்றால் தமிழின அழிப்பை ஒரு சிந்தனையாளராக எந்தவிதமான அரசியல் அடையாளமுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்த்ததுடன் அவர்களை எமது நீதிக்கான பயணத்தில் இணைந்து கொள்ள பெரும் அக்கறை எடுத்திருந்தார்.

இந்த வகையில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் நிகழ்வதனூடாகவே எமது நீதிக்கான கதவு திறக்கும் என்ற சமகால பிராந்திய அரசியல் சூழலில், தனது சிந்தனைத்தளத்தில் நின்று அதில் ஓரளவேனும் தாக்கத்தை செலுத்தும் வல்லமை கொண்டிருந்த எம் எஸ் எஸ் பாண்டியனின் மறைவு எமக்கு பேரதிர்ச்சியை தருகிறது.

புனைவிலக்கியவாதிகளும், அவர்களது படைப்புக்களை கொண்டாடுபபவர்கள் ஒரு புறமும் தமது பல்கலைக்கழக பதவி நிலைகளைக் கொண்டு எதையாவது உளறிக் கொட்டுபவர்கள் மறுபுறமும் தமிழின் சிந்தனையாளர்களாகவும் கோட்பாட்டாளர்களாகவும் வலம் வரும் அபத்தமான சூழ்நிலையில் எம். எஸ் எஸ் பாண்டியன் தமிழ் சிந்தனைப்பரப்பில் குறிப்பான அசைவியக்கத்தை உருவாக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேராசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியனுக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக ஈழம்ஈநியூஸ். தனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.

ஈழம்ஈநியூஸ்.