அய்யா எஸ்.பொ. அவர்களை சந்தித்து பழகத்தொடங்கி சரியாக 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. என்னுடைய முதல் நூல் “எரியும் வண்ணங்கள்” வெளிவந்தவுடன் அவரை நானும், எனது நண்பர் தாமரைசெல்வி பதிப்பகத்தின் திருநாவுக்கரசுவும் (தற்போது நிழல்) கோடம்பாக்கத்தில் உள்ள A.R. அச்சகத்தில் முதன் முதலாக சந்தித்து எனது நூலை கொடுத்தோம்.

நேரடியான அறிமுகம் இல்லாவிட்டாலும் இதழ்கள் வழி அறிமுகம் இருந்ததால் சந்திப்பதில் சிக்கல்கள் எதுவும் இல்லை. நூலைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர், “ஓவியங்களைப் பார்த்துவிட்டு தொடர்புகொள்கிறேன் “என்றார். அப்போது என் இல்லத்தில் தொலைபேசி கிடையாது. கல்லூரி தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தேன். மறுநாளே தொடர்புகொண்டார்.

es-po
‘தம்பி மாலையில் வாருங்கள் விரிவாகப் பேசுவோம்” என்றார். சென்றேன். எரியும் வண்ணங்கள் நூலாக்கம் குறித்தும், என் ஓவியங்கள் குறித்தும் அதன் “கரு” குறித்தும்,தமிழீழப் போராட்டம் குறித்தும், அவர் மகன் மித்ரா (இயக்கப் பெயர் அர்ச்சுனா) இலக்கியம் குறித்தும் விரிவாக நீண்ட நேரம் பேசினோம்.

நல்ல அனுபவமாக உணர்ந்தேன். அதன் பிறகு சில சந்திப்புகளுக்குப் பிறகு என் இல்லத்திற்கு அவரும் அவர் இல்லத்திற்கு நானும் போகவும் வரவும் தொடங்கிய நிலையில் குடும்ப அளவிலான உறவாகவும் மலர்ந்தது. அவர் சென்னையில் இருக்கின்ற காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை சிற்றுண்டி அவருடன். ஓட்டல் டாட்டா உடுப்பியில்தான். அது பலவருடங்கள் தொடர்ந்தது.

அவர் நூல்கள், மித்ர வெளியீடாக வருகின்ற நூல்கள் என பலவற்றிக்கும் நான், அட்டைப் படம், ஓவியங்கள் செய்வது மற்றும் வடிவமைப்பில் ஆலோசனை வழங்குவது என்பதும் தொடர்ந்தது. மாவீரரான அவர் மகன் அர்ச்சுனாவை உருவ ஓவியமாக எண்ணெய் வண்ணத்தில் செய்தேன். அவரையும் கோட்டோவியங்களாகவும் எண்ணெய் வண்ண ஓவியங்களாகவும் செய்திருக்கிறேன்.

என் ஒவியக்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பாளராகவும், பார்வையாளராகவும் அவர் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். எப்போதும் அம்மாவுடன் தான் வருவார்.

கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களும். பல்வேறு பணிச் சுமைகளும் முன்பு போல் அடிக்கடி சந்திக்க இயலாவிட்டாலும் தொலைபேசி தொடர்பில் தொடர்ந்து இருந்தோம். இறுதியாக அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஒருநாள் என் கைபேசியில் அழைத்து “தம்பிப் புகழ் குறுகிய கால பயணமாக சென்னை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் ஆஸ்திரேலியா பயணம். திரும்பி வருவேனா என்பது சந்தேகம் தான். அதனால் உங்களையும் சாந்தியையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள்” என்று சொன்னபோது “ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்” என்று நான் கேட்டதற்கு “வயதும் ஆகிவிட்டது உடலும் தளர்ந்து விட்டது எதுவும் நடக்கலாம் தானே புகழ்” என்றார்.

ஒரு மாலைப் பொழுதில் நானும் என் மனைவி சாந்தியும் அவர் இல்லத்திற்கு சென்றோம். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் இருந்து

பேசிக்கொண்டிருந்தோம். அவர் உடல் தளர்ந்திருப்பதை நாங்களும் உணர்ந்தோம். அவர் நினைத்தது போல் அதுவே இறுதி சந்திப்பாகவும் ஆகிவிட்டது…. என்னைப் பொறுத்தவரை என் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு …

ஓவியர் புகழேந்தி.