பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செயவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு என ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் அப்பாவி தமிழ் மக்களின் தூக்குதண்டனையை நிறுத்துவதற்கான போரட்டங்கள் தமிழகம் எங்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. செங்கொடி என்ற தமிழ் வீரமங்கை தனது உயிரையும் தியாகம் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, அது மட்டுமல்லாது 23 ஆண்டு காலம் சிறையில் இருந்ததால் அவர்களை விடுதலை செய்யலாம் எனவும், அதற்கான அதிகாரம் தழிழக அரசுக்கு உண்டு எனவும் உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

 

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஏழுபேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டவர்களை விடுதலை செய்ய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

எனினும் அதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று சாதகமாகவே வந்துள்ளது. எனவே தமிழக மக்களினதும், உலகத்தமிழ் மக்களினதும் உணர்வுகளையும், அனைத்துலக ஜனநாயக சட்டவிதிகளையும் மதித்து ஏழு பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 

இந்திய நீதித்துறையும், காவல்துறையும் மிகவும் மோசமான துறைகளாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்புக்களாகவும் உலக அரங்கில் தோற்றம் பெற்றுவரும் கருத்துருவாக்கத்தை இல்லாது செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

 

இந்திய நீதித்துறை மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இழந்த தமிழ் மக்கள் அனைத்துலக நீதிமன்றங்களையும், ஐக்கி நாடுகள் சபையையும் நாடிவரும் நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்டுத்தும் முகமாகவும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் முகமாகவும் ஏழு தமிழ் மக்களையும் தமிழக அரசு எந்தவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யவேண்டும் என ஈழம் ஈ நியூஸ் உலகத் தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றது.

 

ஈழம் ஈ நியூஸ்