ஐநா விசாரணைக்குழுவிற்கு தாயகத்திலிருந்தும் புலத்திலிருந்தும் குறிப்பிடத்தகுந்தளவு சாட்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.

idp-98
அதே போல் இனஅழிப்பிலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்று ஐநா விசாரணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

இதை தமிழக மாணவர் அமைப்புக்களும் ஈழ ஆதரவு இயக்கங்களும் முன்னெடுக்காதது கவலைக்குரியது.

இது ஐநா எமக்கு நீதியை தூக்கித் தந்துவிடும் என்பதற்காக அல்ல. தமிழின அழிப்பில் ஐநா வும் ஒரு தரப்பு என்ற புரிதல் எமக்கு நிறையவே உண்டு.

ஆனாலும் எமது வாக்குமூலங்களை அனுப்ப வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கிறது.

நடந்த இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அதை ஒருங்கிணைத்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் ஆவணப்படுத்தவும் என்பது தொடக்கம் எமது நீதிக்கான ஒரு சிறிய புள்ளியாவது இதன்வழி உருவாக்கப்படலாம் என்பது வரை ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்குமூலங்களை பதிவு செய்வதனூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐநா நகர்வுகளுக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வரலாம்.

இதன் வழி தமிழர் தரப்பு ஒரு பேரம் பேசும் வல்லமையாக உருவெடுக்கலாம்.

“ஐநா விசாரணைக்குழுவை அனுமதிக்க மாட்டோம்” என்று ஒரு புறம் கூறிக்கொண்டு கருணா,கேபி போன்ற துரோகிகளினது அடிவருடிகளினதும், “இரத்தசாட்சி” என்ற பெயரில் விலைபோன பல இலக்கியகும்பல்களின் பிதற்றல்களையும், அச்சுறுத்தி பெறப்பட்ட புலிகளுக்கு எதிரான மக்களின் வாக்குமூலங்களையும் ஒன்றிணைத்து மொழிபெயர்த்து சிங்களம் ஐநா விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இது எத்தனை பேருக்கு தெரியும்.? இதுவரை ஐநாவிற்கு கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்கள் புலிகளுக்கு எதிரானதுதான் அதிகம் என்பதாவது நம்மவர்களுக்கு தெரியுமா?

இதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்?

இனியாவது நமது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கான பொறிமுறையை உருவாக்கி போராட்டத்தின் நியாயத்தை நிறுவுவார்களா?

எனவே எமக்குள் இருக்கும் அமைப்புசார் முரண்பாடுகளை சற்று ஓரமாகத் தூக்கி வைத்துவிட்டு களம், புலம், தமிழகம் எங்கும் பரவியிருக்கும் எமது மக்களின் வாக்குமூலங்களை ஒன்றிணைத்து ஐநா விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைப்போம்.

ஈழம்ஈநியூஸ்.