விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுத் தடையானது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளதென தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

rudrakumar
அத்துடன், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்பதோடு மூன்று கோரிக்கைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம்:

ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அனைவருடனும் சேர்ந்து வரவேற்றுக் கொள்கிறது. சட்டமுறைகள் வழுவாவண்ணம் நல்லாட்சியை உறுதிசெய்த ஐரோப்பிய நீதிமன்றத்துக்குத் தனது மதிப்புக் கலந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தியா விடுதலைப் புலிகள் அமைப்பின்மேல் விதித்திருந்த தடையினை மேற்கோள் காட்டியும், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஐரோப்பிய சமூகம் கொண்டு வந்த தடையானது, இந்தியச் சட்ட ஆட்சியில் நீதி வழங்கப்படும் முறை ஐரோப்பிய சமூகத்தின் நீதி முறைமைக்கு சமத்துவமானதெனக் கொள்ளமுடியாத காரணத்தினாலும், விடுதலைப் புலிகளுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமுறைமையின் கீழ் நிரூபிக்கப்படாத காரணத்தினாலும் இத்தடையினை நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

ஐரோப்பிய சமூகம் அவசர அவசரமாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது 2006 ஆம் ஆண்டு கொண்டு வந்த தடை சட்டபூர்வமற்றது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில், இத்தடை சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது 2009 இல் முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கைக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்பதனைத் தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதனால் தமக்கு நீதி வேண்டும் என்று ஈழத் தமிழர் தேசம் நடாத்தும் தொடர்ச்சியான போராட்டத்துக்கு ஐரோப்பிய சமூகம் தனது ஆதரவினை வெளிப்படுத்த வேண்டிய ஒரு தார்மீகக் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது என்பதனையும் இடித்துரைக்க விரும்புகிறோம்.

சிறிலங்கா பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முலாம் பூசியதன் பின்னரே மேற்கொண்டது. இன்றும் ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபை தீர்மானம் 1373ஐ துர்ப்பிரயோகம் செய்து 16 தமிழ் அமைப்புக்களுக்கும் 427 தனிநபர்களுக்கும் பயங்கரவாத முலாம் பூசி தமிழ் இனத்திற்கெதிரான கட்டமைப்பு இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

2009க்கு முன்னர் இலங்கைத் தீவில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்ற கருத்து இந்திய மேற்குலக கொள்கை வகுப்பாளர்களிடையே இருந்தது. கடந்து போன ஐந்தாண்டுகள் அந்நிலைப்பாட்டின் உண்மையற்ற தன்மையை இன்று உணர்த்தியுள்ளன.

தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகளாகவும் மாவீரர்களாகவுமே கருதுகின்றனர். ஆண்டுதோறும் மாவீரர்தின நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொள்வது இதற்குச் சான்றாக அமைகின்றது.

பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இணைப்பதின் மூலம் தமிழ் தேசிய ஆன்மாவிலிருந்து தமிழீழ விடுலைப் புலிகளின் மேலான பற்றினை அகற்றிவிடலாம் என எண்ணுவது சாத்தியமற்றது என்பதை கடந்த எட்டு ஆண்டுகள் நிரூபித்துள்ளன. அரசியல் வழிமுறைகளின் படியும் ஜனநாயக ரீதியாகவும் போராடிவரும் ஒரு தேசிய இனத்தின் உணர்வுகளை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுக்குமெனவே நாம் நம்புகின்றோம்.

பயங்கரவாதப் பட்டியலில் ஒரு அமைப்பை உள்ளடக்குவது ஒரு அரசியல் முடிவென (political question) ஐரோப்பிய ஒன்றியம் தனது வாதத்தில் தெரிவித்திருந்தது. இவ்வேளையில் பயங்கரவாதப் பட்டியலை மீளாய்வு செய்யும்போது சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை (factual changes) கவனத்தில் கொள்ளவேண்டுனெ நீதிமன்றம் கூறியதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மௌனித்திருக்கும் இவ்வேளையில், ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் அரசியல், இராஜதந்திர வழிமுறையினைப் பின்பற்றும் இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளக் கொண்டு வருவது எந்த ஒரு அரசியல் முடிவிற்கும் வழி சமைக்குமென நாம் கருதவில்லை. மாறாக பயங்கரவாதமென்ற காரணியை தமிழ் தேசிய பிரச்சனை என்ற சமன்பாட்டில் இருந்து முற்றாகக் கலைவது தமிழ் தேசிய பிரச்சனைக்கு நீதியான தீர்வொன்றினை அடைவதற்கு உதவும்.

இவ்வடிப்படையில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கும்படி நாம் கோருகின்றோம்.

அத்தோடு நாம் ஐரோப்பிய சமூகத்திடம் மூன்று கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம்.

1. விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மௌனித்திருக்கும் இவ் வேளையில், ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் அரசியல், இராஜதந்திர வழிமுறையினைப் பின்பற்றும் இக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளக் கொண்டு வருவதனை ஐரோப்பிய சமூகம் தவிர்க்க வேண்டும்.

2. தமிழர் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட, இன்றும் மேற்கொள்ளப்படும் இனஅழிப்புக் குறித்த அனைத்துலக விசாரணையினை நடாத்துவதற்கான கோரிக்கைக்கு ஐரோப்பிய சமூகம் தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டும்.

3. தமது தீர்ப்பின் மூலம் ஜனநாயக அரசியலில் சரியான வழிமுறைகள் அவசியம் என்பதனை ஐரோப்பிய நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள இவ் வேளையில் ஈழத் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து அனைத்துலக சமூகத்தின் தலைமையில் தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் மக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு ஐரோப்பிய சமூகம் ஆதரவு தர வேண்டும்.

ஐரோப்பிய சமூகத்தின் முன் இம் மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது என்பதனை நாம் அறியத் தருகிறோம்.

இத் தீரப்பு ஏற்படுத்தியுள்ள உற்சாகத்தினை எமக்கான உந்துசக்தியாகப் பயன்படுத்தி அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் இக்கோரிக்கைகளை ஐரோப்பிய சமூகத்தின் முன்னெடுத்துச் செயற்படுமாறும் நாம் இத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

இச்சட்ட நடவடிக்கையில் தமிழர் தரப்பின் சார்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.