ஐ.நா சபையினுடைய இந்த விசாரணையென்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிக மிக முக்கியமான ஒரு விடயம். ஆகவே ஐ.நா சபை விசாரணை அறிக்கையை அதனுடன் நிறுத்தாமல் இந்த விசாரணை அறிக்கையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டுமெனவும், விசாரணை அறிக்கையில் வரக் கூடிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும, ஐக்கிய நாடுகள் சபை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், த.தே.கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளருமாகிய சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (28.01.2015) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளர். அவர் அங்கு உரையற்றுகையில்…

Suresh
இது வரையில் இலங்கையில் நடந்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒன்று விசாரணை அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை இரண்டாவது விசாரணைகளே நடைபெறுவதில்லை. முன்னைய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்ற காரணத்தினால் தான் யுத்தம் முடிந்த 2 வருடங்களின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறான விசாரணை ஒன்று வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்தது.

இப்பொழு வந்திருக்கும் அரசாங்கமும் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள். நாங்கள் இந்த யுத்த விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் ரோம் உடன்பாட்டில் கையொழுத்து வைக்கவில்லை ஆகவே இது எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற விடயத்தை கூறி வருகின்றார்கள். ஆனால் முன்னர் இருந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்யப்பட்ட பல்வேறுபட்ட ஊழல் நடவடிக்கைகளை, அவர்களின் பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களை தொடர்பாக விசாரணை நடத்த இருக்கின்றோமென கூறுகின்றார்கள்.

இதேசமயம் ஐக்கிய நாடுகளை சபை சர்வதேச விசாரணையை நடத்தி முடித்திருக்கின்றது. அது நம்பகத்தன்மையான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணை அறிக்கை. ஆகவே அந்த விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் நடாத்த போகும் அந்த விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாதென்பது மிகத்தெளிவான விடயம். இது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தங்கள் அனுபவங்களில் கண்டறிந்த உண்மை. எனவே இலங்கை அரசாங்கம் இப்பொழுது வர இருக்கின்ற விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல அதை தொடர்ந்து வரும் அடுத்த கட்ட சடவடிக்கைகளை சரிவர செய்ய வேண்டுமென்பது மிக முக்கியமானது. 100 நாள் திடத்திலும் எமது பிரச்சினைகளுக்கான தீர்வில்லை. அடுத்து வர இருக்கின்ற பராளுமன்ற தேர்தல் முடிந்து அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வர இருக்கின்றதோ அந்த அரசாங்கம் தான் இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டாலும் கூட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக மாற்றங்கள் ஏற்படுமா என்பது இன்னுமொரு கேள்வியாகவே இருக்கின்றது. அந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாக இருந்தால் இந்த ஐ.நா விசாரணை அறிக்கையென்பது நிச்சயமாக சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி இதனை நகர்த்த முடியுமென நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் மக்களின் மீள்க்குடியேற்றம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

‘நாங்கள் உடனடியாக மீள் குடியேற்றம் செய்யக் கூடிய இடங்களை அரசாங்கத்திற்கு நாங்கள் கொடுத்திருக்கின்றோம். முதலாவது சம்பூர். சம்பூர் முதலாவதாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் இது பொருளாதார வலயமாக மாற்றப்பட்டது. அந்த பொருளாதார வலயமென்பது முன்னாள் ஜனாதிபதியின் மனைவியின் உறவினருக்கு கொடுக்கப்பட்டது. கேட்வே இன்தஸ்ட்ரீஸ் (Gateway Industries) என்ற நிறுவனத்தை அங்கு ஆரம்பிப்பதற்காக கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அங்கொரு நிறுவனமும் ஆரம்பிக்கப்படவில்லை. அங்கிருந்த பாடசாலைகள், மக்களின் வாழ்விடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், வைத்தியசாலை தரைமட்டம் ஆக்கப்பட்டு வெறும் ஆள் நடமாட்டமற்ற இடமாகவே இருக்கின்றதே தவிர அங்கு இன்தஸ்ட்ரீஸ் (Gateway Industries) நிறுவனமும் இல்லை. வேறெந்த நிறுவனமும் அங்கு இல்லை. ஆகவே அரசாங்கம் எந்தவித காலதாமதமும் இல்லாமல் மக்களை அங்கு குடியேற்றலாம். சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1700 மக்கள் 4 முகாம்களில் இருக்கின்றார்கள். மிகவும் கஸ்டப்பட்ட நிலையில் வாழ்ந்துவருகின்றார்கள். அரசாங்கடம் நினைத்தால் நாளைக்கு கூட மக்களை அவர்களின் சொந்த இடத்தில் குடியேற்ற முடியும்.

அதேசமயம் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலத்தில் 10 சதுர கிலோ மீற்றர் எந்தவொரு பாவணையும் இல்லாது இருக்கின்றது. இந்தப்பிரதேசத்தில் இராணுவமே அல்லது வேறு பண்ணைகளே எதுவும் இல்லை. எதுவித காரணங்களையும் அரசாங்க முன்வைக்காமல் இப்பிரதேசத்தில் மக்களை குடியேற்றலாம். இரண்டாம் கட்டமாக பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகத்தை அண்டிய பிரதேசமாக ஒரு பிரதேசம் காணப்படுகின்றது. இதில் ஒரு பகுதி காடாக இருக்கின்றது. இங்கு ஒரு பகுதியில் ஆடு மாடு வளர்க்கப்படுகின்றது. இந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றது. ஆனால் இந்த நிலப்பரப்பு தமிழ் மக்களுக்கு சொந்தமான இடம். ஆகவே இரண்டாம் கட்டமாக மக்களை இங்கு குடியேற்றலாம்.

ஆகவே சம்பூரிலும், வலிகாமம் வடக்கிலும் மக்களை குடியேற்றலாம். அவ்வாறு குடியேற்றினால் தான் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். இது தொடர்பான சகல ஆவணங்களும் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும், இப்போதிருக்கு மீள்க்குடியேற்ற அமைச்சரிடமும் நாங்கள் கையளித்திருக்கின்றோம். ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்ட ஆவணங்கள் கூட இவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். ஆகவே இப்போதிருக்கும் தேவையில் எல்லாம் ஒர் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றி மக்களை மீள தங்கள் இடங்களில் குடியேற்ற வெண்டும்.

கொழும்பை பொறுத்தவரை அங்கு கட்டுநாயக்க, இரத்மலானை என்ற இரண்டு விமானநிலையங்கள் இருக்கின்றன. ஆனால் அதனைச்சுற்றி வர மக்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு அங்கிருந்தால் இங்கு இராணுவ முகாங்கள் இருக்கின்றது அங்கு குடியேற முடியாது என்று சொல்ல முடியாது.