சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக் கூறியுள்ள, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், மனித உரிமைகள் விவகாரத்தில் புதிய அரசாங்கம் தொடர்பான தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும், விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

“நான் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, மிகப் பெரிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டேன். இந்த வாய்ப்புகளைக் கொண்டு, உறுதியான, செழிப்பான, ஒன்றுபட்ட நாட்டை, உருவாக்க புதிய அதிபரை வாழ்த்துகிறேன்.

அமைதியான முறையில் நம்பகமான தேர்தலை நடத்திய பெருமை எல்லா இலங்கையர்களுக்கும் உரியது.

மக்களின் ஜனநாயக தீர்ப்பை ஏற்று, அமைதியான முறையில் அதிகாரத்தை கைமாற்றியதற்கு பதவியை விட்டுச் செல்லும் அதிபர் மகிந்த ராஜபக்சவை பாராட்டுகிறேன்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு, புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன ஒத்துழைப்பு வழங்க, ஊக்குவிக்கிறேன்.

கடந்தகால மனித உரிமை மீறல் விவகாரங்களைத் தீர்ப்பதன் மூலம், பிரகாசமான, அமைதியான எதிர்காலத்தை நோக்கி நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

கரிசனைகளை தீர்க்க வாய்ப்பாக அமையும் – கனடா

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள, கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல், உண்மையான நல்லிணக்கம் ஆகிய கரிசனைகளை தீர்ப்பதற்கு இது முக்கியமான வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மை கொண்ட, பொறுப்புவாய்ந்த, பன்முகத்தன்மை கொண்ட அரசாங்கம் ஒன்றுக்காக ஆணையை சிறிலங்கா மக்களிடம் இருந்து மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளார் என்பது எமது நம்பிக்கை.

தேர்தல் செயல்முறையில், முக்கிய பங்காற்றிய சிவில சமூகத்தின் பணியை நாம் பாராட்டுகிறோம்.” என்று கூறியுள்ளார்.

ஜனநாயகம், சுபீட்சம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை நோக்கி சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவை முன்நகர்த்திச் செல்வார் என்று பிரான்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளை மதிக்கும் கொள்கைக்கு வரவேற்பு – பிரான்ஸ்

சிறிலங்காவில் நிகழ்ந்துள்ள ஆட்சிமாற்றம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார மற்றும், அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சு, வெளியிட்டுள்ள அறிக்கையில்,

un-sanctions_si
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாகவும், அதிகபட்ச வாக்களிப்புடனும் நடத்தப்பட்டிருப்பதை பிரான்ஸ் வரவேற்கிறது.

மைத்திரிபால சிறிசேனவை நாம் வாழ்த்துகிறோம். ஜனநாயகம் மிக்க, சுபீட்சமான, மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சிறிலங்காவைக் கட்டியெழுப்பும், அதிபராகத் தெரிவாகியுள்ள மைத்திரிபால சிறிசேனவின், கொள்கையை மதிக்கிறோம்.

சிறிலங்காவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அடுத்த சில மாதங்களுக்குள் வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவு.